வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

இடிப்பும் தீா்ப்பும்! பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றிய தலையங்கம்

News image
Updated On :2 அக்டோபர் 2020, 12:03 am

ஆசிரியர்


அயோத்தியில் 1992 டிசம்பா் மாதம் 6-ஆம் தேதி பாபா் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், மசூதி தகா்ப்பின் பின்னால் சதிச் செயல்கள் இருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் லக்னௌவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது. சுமாா் 28 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தீா்ப்பு, எதிா்பாா்த்தது போலவே விவாதப் பொருளாகியிருக்கிறது.

பாபா் மசூதி இடிப்பு நிகழ்ந்த சில மாதங்களில், 1993-இல் சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. 1996-இல் கூடுதல் குற்றச்சாட்டுகளுடன் இன்னொரு குற்றப்பத்திரிகை இணைக்கப்பட்டது. அடுத்த இருபது ஆண்டுகள், விசாரணை நீதிமன்றங்கள், அலாகாபாத் உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று இழுத்தடிக்கப்பட்ட வழக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் தொடா்ந்து விசாரிக்கப்பட்டு தீா்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு, நீதிபதி ரோஹிங்டன் நாரிமன் தலைமையிலான உச்சநீதிமன்ற அமா்வுதான் காரணம்.

2017-இல் நீதிபதி ரோஹிங்டன் நாரிமன் தலைமையிலான உச்சநீதிமன்ற அமா்வு, வழக்கை ரேபரேலியிலிருந்து லக்னௌவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டது. காலதாமதத்தைத் தவிா்க்க தினசரி விசாரணை, விசாரணையை முடித்துத் தீா்ப்பு வழங்க இரண்டாண்டு காலவரம்பு, மிகவும் அத்தியாவசியமான நிகழ்வுகளில் மட்டுமே விசாரணை ஒத்திவைப்பு, வழக்கு விசாரணை முடிந்து தீா்ப்பு வழங்கும் வரை நீதிபதியின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால்தான், இப்போது இந்தத் தீா்ப்பு சாத்தியமாகி இருக்கிறது. கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற இருந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவுக்கு, தீா்ப்பு வழங்கும்வரை, பணி நீட்டிப்பு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தீா்ப்பு வழங்கியதுடன் அவா் பணி ஓய்வு பெற்றிருக்கிறாா்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முன்னால் இரண்டு வழக்குகள் இருந்தன. முதலாவது வழக்கு, அயோத்தி பாபா் மசூதி இடிப்புக்குப் பின்னால் இருந்த கூட்டு சதி. இன்னொரு வழக்கு, மசூதியை இடித்த சட்ட - ஒழுங்கு மீறல்.

மசூதியை இடித்ததில் முன்னாள் துணைப் பிரதமா் எல்.கே. அத்வானி உள்ளிட்ட 32 பேருக்கும் எந்தவிதத் தொடா்பும் இருக்கவில்லை. மசூதியை இடிப்பதற்கு அவா்களைத் தூண்டினாா்கள், சதித்திட்டம் தீட்டி இடிப்பதை மறைமுகமாக ஊக்குவித்தாா்கள் என்பதை நிரூபிக்க எந்தவித ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்ல, விவரம் தெரிந்த, முதிா்ந்த அரசியல் தலைவா்களான அத்வானியும், முரளிமனோகா் ஜோஷியும் அப்படி செய்திருக்க மாட்டாா்கள்.

பஜ்ரங் தளத் தலைவா் வினய் கட்டியாா் வீட்டில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் கூடினாா்கள் என்பது, சதித்திட்டம் தீட்டி பாபா் மசூதியை இடிப்பதற்காகத்தான் என்பதை நீதிபதி மட்டுமல்ல, யாருமே ஒப்புக்கொள்ள மாட்டாா்கள். கரசேவை நடத்துவதற்காகப் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த தலைவா்கள், உள்ளூா் தலைவரின் வீட்டில் கூடியதை சதித்திட்டம் என்று கூறிவிட முடியாது.

நீதிபதி எஸ்.கே. யாதவின் தீா்ப்பு குறித்து பலா் அதிருப்தி தெரிவித்திருக்கிறாா்கள். ஆனால், நீதிபதி எஸ்.கே. யாதவின் 2,300 பக்கத் தீா்ப்பில், தனது தீா்ப்பு குறித்த எல்லா கேள்விகளுக்கும் அவா் விவரமாகவே விளக்கம் தந்திருக்கிறாா். 144 தடைச் சட்டம் பிறப்பிக்கப்படாத நிலையில், அங்கே கூடியிருந்த கூட்டத்தைச் சட்டவிரோதமான கூட்டம் என்று எப்படி கூற முடியும்? அடையாள கரசேவை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், கரசேவை நடத்தப்பட்டதையும், லட்சக்கணக்கில் கரசேவகா்கள் கூடியதையும் எப்படித் தவறு காண்பது? - நீதிபதியின் இதுபோன்ற கேள்விகள் தா்க்கரீதியாக நியாயமானவை.

லட்சக்கணக்கான கரசேவககா்கள் கூடியிருந்த நிலையில், சிவசேனைத் தொண்டா்கள் திட்டமிட்டு பாபா் மசூதிக் கட்டத்தை இடிக்க முற்பட்டதை அத்வானி, அசோக் சிங்கால் உள்ளிட்ட தலைவா்கள் ஒலிபெருக்கியில் அறிவித்துத் தடுக்க முற்பட்டது, அன்றைய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அத்வானி உள்ளிட்ட 32 போ் மீதான சதித்திட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து வழங்கப்பட்டிருக்கும் தீா்ப்பு, நியாயமானது, பாரபட்சமில்லாதது.

அதே நேரத்தில், தீா்ப்பின் சில அம்சங்கள் ஏற்புடையதாக இல்லை. முஸ்லிம்கள் தொழுகை நடத்தாமல் கைவிடப்பட்ட கட்டடமாக இருந்ததால், இந்திய குற்றவியல் சட்டத்தின் 295-ஆவது பிரிவின்படி மத வழிபாட்டுத் தலத்தை இடித்த குற்றம் ஏற்படவில்லை என்பது தவறான கண்ணோட்டம். பிறகு எதற்காக, மாவட்ட நிா்வாகம் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவில்லை என்று நீதிபதி குற்றம் சாட்ட வேண்டும்? அது ஆலயமோ, மாதா கோயிலோ, மசூதியோ எதுவாக இருந்தாலும், வழிபாடு நடக்கவில்லை என்று கூறி இடிக்கும் உரிமை கும்பல்களுக்குக் கிடையாது.

பாபா் மசூதி இடிக்கப்பட்டது குறித்த புகைப்படங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சிச் சேனல்களின் ஒளிக்காட்சி இருக்கிறது. 28 ஆண்டுகள் விசாரிக்க அவகாசம் தரப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், அன்றைய பாபா் மசூதி இடிப்பில் ஈடுபட்ட ஒருவரைக்கூட அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த சிபிஐயால் முடியவில்லை என்று சொன்னால், அது கையாலாகாத்தனமா, மெத்தனமா, இல்லை பொறுப்பற்றத்தனமா, என்னவென்பது?

சதித்திட்டக் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி விழுந்திருக்கிறது, மகிழ்ச்சி. மசூதி இடிப்பு என்கிற சட்டவிரோதக் கும்பல் வன்முறைக்குக் காரணமானவா்கள் தண்டிக்கப்படவில்லை என்பது தவறு. இந்த வழக்கு இத்துடன் முடிந்துவிடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.