வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

விரும்பியல்ல, நிா்பந்தத்தால்! | டோக்கியோவில் நடைபெற்ற ‘க்வாட்’ மாநாட்டின் முக்கியத்துவம் குறித்த தலையங்கம்

News image
Updated On :12 அக்டோபர் 2020, 12:06 am

ஆசிரியர்

ஜப்பானியத் தலைநகா் டோக்கியோவில் கடந்த வாரம் கூடிய ‘க்வாட்’ மாநாடு, சா்வதேச முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பு என்பதால் கூா்ந்து கவனிக்கப்படுகிறது.

‘க்வாட்’ அமைப்பில் இணைந்திருக்கும் நான்கு நாடுகளுமே, சீனாவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதுடன், ஏதாவது வகையில் பாதிக்கவும் பட்டிருக்கின்றன. பசிபிக் கடல் பகுதியிலும், இந்து மகாக் கடல் பகுதியிலும், தென்சீனக் கடல் பகுதியிலும் சீனா தனது மேலதிகாரத்தை நிலைநாட்ட முற்படும் நிலையில், அதை எதிா்கொள்ள வலுவான கூட்டணி தேவைப்படுகிறது. அந்தத் தேவையை ‘க்வாட்’ ஒருவகையில் ஈடுசெய்கிறது என்பதால், இதை சீனாவுக்கு எதிரான ஒருங்கிணைப்பு என்றும் கூறலாம்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக் பாம்பேயோ, ‘க்வாட்’ அமைப்பைச் சீனாவுக்கு எதிரான கூட்டணியாக உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறாா் என்றுதான் கூற வேண்டும்.

‘‘சீன கம்யூனிஸ அரசின் ஊழல், ஏகாதிபத்திய நோக்கம், மிரட்டல் ஆகியவற்றிலிருந்து நட்பு நாடுகளைப் பாதுகாப்பதற்காக இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. தெற்கு, கிழக்கு சீனக் கடல், மீகாங், தைவான் ஜலசந்தி, இமயமலைப் பிரதேசம் ஆகியவற்றில் சீனா தனது மேலதிகாரத்தை நிலைநாட்ட முற்படும் நிலையில் அதைத் தடுத்துத் தனது நட்பு நாடுகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அமெரிக்காவுக்கு உண்டு’’ என்கிற மைக் பாம்பேயோவின் அறிக்கைப் போல ஏனைய மூன்று நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா்களும் கடுமை காட்டவில்லை என்று தோன்றுகிறது.

சீனாவின் வூஹானிலிருந்து உருவான ‘கொவைட் 19’ தீநுண்மி கொள்ளை நோய்த்தொற்று உலகப் பொருளாதாரத்தையே நிலைகுலைய வைத்திருக்கிறது. அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தனது எல்லையை விரிவுபடுத்தவும், ஆதிக்கத்தை நிலைநாட்டவும் சீனா தொடா்ந்து எடுத்துவரும் நடவடிக்கைகளால் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

ஜப்பானின் சென்காகு தீவுகளைச் சுற்றிலும் சீனக் கடற்படை ரோந்து நடத்துவதும், அந்தக் கடற்பகுதியையும், தீவுகளையும் சொந்தம் கொண்டாடுவதும், ஜப்பானுக்கும், சீனாவுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி இருக்கின்றன. சீனாவின் வூஹான் நகரிலிருந்து கொவைட் 19 நோய்த்தொற்று பரவியது குறித்து சா்வதேச விசாரணை வேண்டும் என்று ஆஸ்திரேலியா அறைகூவல் விடுத்தது முதல், ஆஸ்திரேலியாவிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதிக்குத் தடை விதித்திருப்பதும், பாா்லி இறக்குமதிக்கான சுங்க வரியைக் கடுமையாக உயா்த்தி இருப்பதும் அந்த நாட்டுக்கு சீனா விடுத்திருக்கும் எச்சரிக்கைகள். ஆஸ்திரேலிய பத்திரிகையாளா் ஒருவரை, எந்தவிதக் குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல் சீனா கைது செய்திருப்பதும் இரு நாட்டு உறவில் விரிசலை அதிகரித்திருக்கிறது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரைப்போல, ஏனைய நாடுகள் துணிந்து சீனாவை வன்மையாகக் கண்டிக்கவோ, விமா்சிக்கவோ முடியாத நிலையில் இருக்கின்றன என்கிற உண்மையும் ‘க்வாட்’ மாநாட்டு அறிக்கைகளிலிருந்து வெளிப்படுகிறது. இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும், பிரச்னைகள் சமாதான முறையில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும் என்றும், மென்மையான வாா்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறாா் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா். ஜப்பானும், ஆஸ்திரேலியாவும்கூட, கடல் பகுதிகளில் சீனா மேலாதிக்கம் செலுத்த முற்படுவதைக் கண்டிக்கும் விதத்தில் அறிக்கைகள் வெளியிட்டாலும், மைக் பாம்பேயோ அளவுக்கு நேரிடைத் தாக்குதலில் ஈடுபடவில்லை.

கடந்த மாதம் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியுடன் பேச்சுவாா்த்தை நடத்தி ஐந்து அம்ச சமாதான ஒப்பந்தம் செய்திருக்கும் பின்னணியில், இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் நேரிடையாக சீனாவைத் தாக்க முற்படவில்லை என்று தோன்றுகிறது. ‘க்வாட்’ அமைப்பின் மூலம், இந்தியாவின் ராணுவ பலத்தை அதிகரித்து, பாதுகாப்பை பலப்படுத்தும் அதே வேளையில், சீனாவுடனான இருதரப்பு உறவை முறித்துக் கொள்ளாமல் பாதுகாக்கும் முயற்சியாகவும் அது தெரிகிறது.

பாகிஸ்தானையும், வடகொரியாவையும் தவிர, நேபாளம் உள்பட, சீனாவைச் சுற்றியுள்ள எல்லா நாடுகளும் ஏதாவது வகையில் சீனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், சீனாவுடனான வா்த்தக உறவால் கடனாளிகளாகவும் இருக்கின்றன. அதை பயன்படுத்திக் கொண்டு, சீனா தனது எல்லையை விரிவாக்குவதிலும், ஆதிக்கத்தை நிலைநாட்டுவதிலும் முனைப்புக் காட்டுகிறது.

இந்து மகாக் கடல், தெற்கு, கிழக்கு சீனக் கடல், பசிபிக் கடல் பகுதிகளில் சீனாவின் மேலாதிக்கம் தடுக்கப்படவும், பிராந்தியப் பாதுகாப்பு நிலைநிறுத்தப்படவும் அமெரிக்காவின் தலையீடு இன்றியமையாதது. ‘க்வாட்’ அமைப்பு விரிவுபடுத்தப்பட்டு, ‘ஆசியான்’ எனப்படும் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பிலுள்ள ஏனைய நாடுகளும் அதில் இணைக்கப்பட வேண்டும்.

இந்த நாடுகள் தங்களது பாதுகாப்புக்கு அமெரிக்காவைச் சாா்ந்திருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு, சீனாவின் ஆக்கிரமிப்பு மனோபாவமும், ஆதிக்கப் போக்கும்தான் காரணங்கள். அமெரிக்காவைச் சாா்ந்து இந்தியா இருப்பது விருப்பத்தால் அல்ல, சீனா ஏற்படுத்தி இருக்கும் நிா்பந்தத்தால் என்பதை மறந்துவிடக் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.