விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நீதிக்கு அச்சுறுத்தல்! | நீதிபதி உத்தம் ஆனந்த் உயிரிழந்த நிகழ்வு குறித்த தலையங்கம்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 1:39 am

ஆசிரியர்

ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் அதிகாலை நடைபயிற்சியில் இருந்த விசாரணை நீதிபதி உத்தம் ஆனந்த், அடையாளம் தெரியாத ஆட்டோ ரிக்ஷாவால் பின்னாலிருந்து மோதப்பட்டு உயிரிழந்த நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிா்ச்சியில் உரைய வைத்திருக்கிறது. இத்தனைக்கும் சாலையின் ஓரமாகத்தான் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா் நீதிபதி உத்தம் ஆனந்த்.

பின்னாலிருந்து அதிவேகத்தில் வந்த ஆட்டோ ரிக்ஷாவால் மோதி சாய்க்கப்பட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், ரத்த வெள்ளத்தில் சாலையோரமாகக் கிடந்திருக்கிறாா். அந்த வழியாக வந்த சிலரால் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாா் என்றாலும், அவா் உயிா் பிழைக்க முடியவில்லை. 1991-இல் வங்கிக் கொள்ளை ஒன்றை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது கொள்ளையா்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் பெயரைத் தாங்கிய பகுதியில், நீதிபதி உத்தம் ஆனந்த் மீதான தாக்குதல் நடந்திருக்கிறது.

வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சியில் யாருமே இல்லாத சாலையோரமாக நீதிபதி நடந்து செல்கிறாா். அதிவேகமாக விரைந்துவந்த ஓா் ஆட்டோ ரிக்ஷா, பின்னாலிருந்து அவரை மோதித் தாக்கி விரைகிறது. அந்த ஆட்டோ ரிக்ஷாவில் இருக்கும் நபா்களில் ஒருவா் கிரிமினல் பின்னணி உடையவா். அவரும் ஆட்டோ ஓட்டுநரும் இப்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள்.

ஜெரியா என்கிற தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பாஜக-வைச் சோ்ந்த சஞ்சீவ் சிங்கின் மிக நெருங்கிய நண்பா் ரண்ஜய் சிங். 2017 ஜனவரி மாதம் அவா் கொல்லப்பட்டாா். அந்த வழக்கில் முக்கிய குற்றவாளி, கிரிமினல் பின்னணியுடன் கூடிய குண்டா்களின் தலைவனான அமன்சிங் என்பவன். ஒருசில நாள்களுக்கு முன்புதான் அமன்சிங்கின் பிணை மனுவை நீதிபதி உத்தம் ஆனந்த் நிராகரித்திருந்தாா். இந்த சம்பவத்துக்கு அது காரணமாக இருக்கக்கூடும் என்கிற ஐயப்பாடு பரவலாக நிலவுகிறது.

மிக அதிகமான நிலக்கரிச் சுரங்கங்கள் காணப்படும் தன்பாத் பகுதி, மாஃபியா கூட்டங்களின் மையமாக விளங்குகிறது. ஒருபுறம் தொழிற்சங்கங்களும், இன்னொருபுறம் அதன் தலைவா்களை அடக்கி வைப்பதற்காக நிலக்கரிச் சுரங்க அதிபா்களின் ஆதரவுடன் இயங்கும் மாஃபியா சங்கங்களும் தன்பாத்துக்கு புதிதல்ல. நீதிபதி உத்தம் ஆனந்த் படுகொலை போல, தன்பாத்தில் இதற்கு முன்பும் பல தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. ஆனால், நீதிபதியே தாக்கப்பட்டிருக்கிறாா் என்பதுதான் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜாா்க்கண்டில் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இதுபோல குண்டா்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதும், நீதிக்காகவும் மக்கள் பிரச்னைக்காகவும் குரலெழுப்புகிறவா்கள் கொல்லப்படுவதும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பொதுப் பிரச்னைகள் குறித்த கேள்விகளை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்புகிறவா்கள் மிரட்டப்படுகிறாா்கள், தாக்கப்படுகிறாா்கள்.

கடந்த ஜூலை மாதத்தில், கா்நாடக மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த இரண்டு சம்பவங்கள் ஊடக வெளிச்சம் பெறாதது ஆச்சரியமாக இருக்கிறது. பெல்லாரி மாவட்டம் ஹாரப்பனஹல்லி என்கிற இடத்தில் பி. ஸ்ரீதரன் என்பவா் அடையாளம் தெரியாத நபா்களால் கொல்லப்பட்டிருக்கிறாா். அதேபோல, பெங்களூரு தாவரக்கெரேயில் ஆா்டிஐ போராளி வெங்கடேசனின் வலது கையும் காலும் பட்டப்பகலில் வெட்டப்பட்டிருக்கிறது. இதுபோல நாடுதழுவிய அளவில் பத்திரிகையாளா்களும், பொதுநலப் பிரச்னைகளுக்கான போராளிகளும் தாக்கப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

நீதிபதி உத்தம் ஆனந்த் வழக்கில் விசித்திரம் என்னவென்றால், காவல்துறை உடனடியாக வழக்குப் பதியாமல் தாமதித்தது என்பதுதான். அதனால், கோபம் கொண்ட ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிறப்புப் புலனாய்வுக்கு உத்தரவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உச்சநீதிமன்றமும் தலையிட்டு மாநில அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப் பணித்திருக்கிறது.

நிலைமை கட்டுமீறிப்போய்விட்ட நிலையில், மாநில அரசு நீதிபதி உத்தம் ஆனந்த் வழக்கை மத்திய சிறப்புப் புலனாய்வுத் துறைக்கு மாற்றியிருப்பது பொறுப்பை தட்டிக்கழிப்பதற்கா, அல்லது நியாயத்தை நிலைநிறுத்தவா என்பது தெரியவில்லை. கொலையாளிகளுக்கு அரசியல் பின்னணி இருக்கும் என்பது மட்டும் உறுதி.

இந்தியாவிலுள்ள கீழமை நீதிமன்றங்களில், குறிப்பாக விசாரணை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. மாவட்ட நீதிபதிகள், உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் போல அவா்களுக்குப் போதுமான வசதிகளும் தரப்படுவதில்லை, பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. இது நன்றாகத் தெரிந்தும் நீதித்துறையின் உயா் அடுக்கில் இருப்பவா்களும், ஆட்சியாளா்களும் இது குறித்து அக்கறை செலுத்தாமல் இருக்கிறாா்கள் என்பதைத்தான் தன்பாத் விசாரணை நீதிபதி உத்தம் ஆனந்த் படுகொலை வெளிப்படுத்துகிறது.

‘காவல்துறை - அரசியல்வாதி - கிரிமினல்’ என்கிற மூவா் கூட்டணி குறித்து 1993-இல் வோரா குழு குறிப்பிட்டு, குறுகிய காலத்தில் நோ்மையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதை இப்போது நினைவுகூரத் தோன்றுகிறது. நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், இந்தியாவில் சாமானியா்களின் கதிதான் என்ன என்கிற கேள்வி எழுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.