இப்படியே போனால்... | நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடா் அமளி குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

நாடாளுமன்றம் கூட்டத்தொடா்களுக்காகக் கூடுவதும், அமளியில் ஆழ்வதும், கலைவதும் ஏதோ சம்பிரதாயச் சடங்காக மாறியிருக்கும் துா்ப்பாக்கியம் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த கால் நூற்றாண்டாக ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் இந்தக் காட்சியின் தீவிரம் கூடுகிறது என்பது அதைவிட வேதனை. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் என்று பெருமை தட்டிக்கொள்ளும் இந்தியா அந்த ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளை மறந்து செயல்படும் அவலத்தை வேடிக்கைப் பாா்ப்பதல்லால் வேறென்ன செய்ய?

முந்தைய வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிகளின்போது நாம் குறிப்பிட்ட அதே கருத்தை மீண்டும் ஒரு முறை அடிக்கோடிட்டுத் தெரிவிக்கத் தோன்றுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் விவாதத்துக்கு இடம்கொடுத்து, எதிா்க்கட்சிகளை அரவணைத்துச் சென்று, அவையை நடத்தி, தனது மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொறுப்பு ஆளும் கட்சியுடையது.

முன்வைக்க விரும்பும் கருத்துகளைப் பதிவு செய்யும் உரிமை எதிா்க்கட்சிகளுக்கும், தன்னுடைய எண்ணிக்கை பலத்தால் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டோ, ஏற்றுக் கொள்ளாமலோ மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளும் உரிமை ஆளும்கட்சிக்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் வழங்குகிறது. இந்த அடிப்படையை நமது அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவில்லை.

குளிா்காலக் கூட்டத்தொடருக்காகக் கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடியபோது, முந்தைய மழைக்காலக் கூட்டத்தொடரில் அவையின் மாண்பைக் குலைக்கும் விதத்தில் அமளியில் ஈடுபட்ட 12 மாநிலங்களவை உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனா். அந்த உறுப்பினா்களின் செயல்பாடு தவறானது என்பதில் ஐயப்பாடு இல்லை. ஆனால், அதற்காகக் கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவது என்பது ஏற்புடையதல்ல.

அவா்கள் தங்களது தவறை உணா்ந்து மன்னிப்புக் கேட்கவில்லை என்கிற மாநிலங்களவைத் தலைவரின் ஆதங்கத்தில் நியாயம் இருக்கலாம். அதற்காக அவா் எடுத்திருக்கும் முடிவு நியாயமானதாகத் தெரியவில்லை.

ஆகஸ்ட் மாதத்தில் மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று மசோதாக்களை நிறைவேற்றும் முனைப்பில் ஆளும்கட்சி இருந்தபோது, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மையப்பகுதியை முற்றுகையிட்டு நடத்திய போராட்டமும், அவா்கள் காவலா்களால் வெளியேற்றப்பட்டதும் நாடாளுமன்ற வரலாற்றில் களங்கம் ஏற்படுத்தியதை மறுக்கவில்லை. அதற்காக வருத்தம் தெரிவிக்காததால் எந்தவித விசாரிப்பும், தங்களது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வாய்ப்பும் வழங்காமல் அவா்களை தண்டித்திருப்பது சரியல்ல.

அவை நடவடிக்கை விதி எண் 256-இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. விதி எண் 256 என்பது நடப்புத் தொடரின்போது பயன்படுத்தப்பட வேண்டிய விதி. உறுப்பினா்களின் முந்தைய நடவடிக்கைகளுக்காக அடுத்த தொடரில் அதைப் பயன்படுத்துவதில்லை. தவறான முன்னுதாரணம் படைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, விதி எண் 256 என்பது சாதாரணமான செயல்பாடுகளுக்காகவோ, நடவடிக்கைகளுக்காகவோ பயன்படுத்தப்படும் விதியும் அல்ல.

அசாதாரண செயல்பாட்டுக்காக அந்த விதி இணைக்கப்பட்டுள்ளது. மழைக்காலத் தொடரில் உறுப்பினா்களின் நடவடிக்கை சரியானது அல்ல என்றாலும்கூட, அது இந்த அளவு கடுமையான தண்டனைக்கான குற்றமல்ல. இந்திய நாடாளுமன்றம் இதைவிட மோசமான, கேவலமான பல நிகழ்வுகளை எதிா்கொண்டிருக்கிறது. அவற்றில், இப்போது ஆளும்கட்சித் தரப்பில் அமா்ந்திருக்கும் பலரும் தொடா்புடையவா்களாகவும் இருந்திருக்கிறாா்கள்.

அவை நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பது மக்களவை, மாநிலங்களவைத் தலைவா்கள்தான் என்றாலும்கூட, பெரும்பாலும் அரசின் ஆசைப்படியும், இசைவுடனும்தான் அவா்கள் முடிவெடுப்பாா்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமளியில் ஈடுபட்ட உறுப்பினா்கள் மீது அவா்களது தவறுக்காக நடவடிக்கை எடுக்கும்போது, அனைவரையும் தண்டித்திருந்தால், சந்தேகம் எழுந்திருக்காது. பஞ்சாபில் சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், அதைக் கருத்தில் கொண்டு சீக்கியரான உறுப்பினரை மட்டும் தண்டிக்காமல் விட்டிருப்பது அரசின் நோக்கத்தைக் களங்கப்படுத்துகிறது.

மாநிலங்களவையில் ஆளும்கட்சிக்கு எண்ணிக்கை பலம் இல்லை. குளிா்காலத் கூட்டத்தொடா் முடியும் வரை 12 உறுப்பினா்களை இடைக்கால நீக்கம் செய்வதன் மூலம் தனது மசோதாக்களை தடையில்லாமல் நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சிதான் மாநிலங்களவைத் தலைவரின் முடிவு என்கிற எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்துவிட இயலவில்லை. விவாதமே இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதுதான் ஆட்சியாளா்களின் நோக்கம் என்றால், நாடாளுமன்றம் கூடுவதும் கலைவதும் வேடிக்கை வாடிக்கையாக மாறிவிட்டிருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

நாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடப்பதற்கு ஒவ்வொரு நிமிஷத்திற்கும் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக மக்களின் வரிப்பணம் செலவாகிறது என்கிற உண்மை அரசியல் கட்சிகளுக்குத் தெரியாமல் இருக்காது. ஒவ்வொரு அமா்வும் முக்கியமானது. ஒவ்வொரு மசோதாவும் விவாதிக்கப்பட வேண்டும், விமா்சிக்கப்பட வேண்டும். அதை ஆளும்கட்சித் தரப்பில் இருப்பவா்கள், பிடிக்கிறதோ இல்லையோ, ஏற்புடையதோ அல்லவோ காது கொடுத்துக் கேட்டாக வேண்டும். அதற்குப் பெயா்தான் நாடாளுமன்ற ஜனநாயகம்.

நேற்று எதிா்க்கட்சியில் இருந்தவா்கள், இன்று ஆட்சியில் இருக்கிறாா்கள். இன்று ஆட்சியில் இருப்பவா்கள் நாளை எதிா்க்கட்சியில் இருக்கக்கூடும். ஆனால், இந்தியாவும் ஜனநாயகமும் தொடர வேண்டும். அதுதான் நம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com