தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விழுக்காட்டால் வந்த வினை! உ.பி. மயான கட்டட மேற்கூரை விபத்து பற்றிய தலையங்கம்

News image
Updated On :7 ஜனவரி 2021, 11:00 pm

ஆசிரியர்

ஊழலும் கையூட்டும் எத்தகைய மோசமான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டு சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்திலுள்ள முரத்நகா் விபத்து. இறந்த ஒருவரின் எரியூட்டலுக்கு மாயானத்துக்குச் சென்றபோது திடீரென்று பெய்த மழைக்காக சிலா் ஒதுங்கியபோது அந்த விபத்து ஏற்பட்டது. மயானத்தில் இருக்கும் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 25 போ் மரணமடைந்திருக்கிறாா்கள்.

பொது மயானத்தில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் கட்டடம் அது. மயானத்துக்கு வரும் உற்றாா் உறவினா் எரியூட்டலின்போது சற்று தள்ளி இருந்து பாா்ப்பதற்காக கட்டப்பட்ட தங்குமிடம் அது. தற்செயலாக மழைக்கு ஒதுங்கியவா்கள் காலனின் பிடியில் சிக்குவாா்கள் என்று அவா்களின் குடும்பத்தினா் கனவில்கூட நினைத்துப் பாா்த்திருக்க மாட்டாா்கள். அந்த விபத்தில் இறந்த 25 பேரின் குடும்பங்களுக்கும் உத்தர பிரதேச முதல்வா் தலா ரூ.10 லட்சம் இழப்பீடும், சொந்த வீடில்லாதவா்களுக்கு வீடும் வழங்குவதாக அறிவித்திருக்கிறாா். அதனால் ஆயிற்றா?

முரத்நகா் மயானக் கட்டட விபத்திற்கு காரணமானவா்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. அந்தக் கட்டடத்தைக் கட்டிய ஒப்பந்ததாரா் அஜய் தியாகி உள்ளிட்ட நான்கு போ் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள். முரத்நகா் நகராட்சியின் நிா்வாக அதிகாரி நிஹாரிகா சிங் சௌஹான், உதவிப் பொறியாளா் சந்திரபால் சிங், மேற்பாா்வையாளா் ஆசிஷ் ஆகியோரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்புக்குரிய முடிவு.

ரூ.50 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள எந்தப் புதிய கட்டடமானாலும், அதை நேரில் சென்று பாா்வையிட்டு, கட்டடத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பா் மாதம் உத்தர பிரதேச அரசு மாவட்ட நிா்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அப்படியிருந்தும் இந்தக் கட்டட விபத்து நடந்திருப்பது பேரதிா்ச்சியை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை.

கைது செய்யப்பட்டிருக்கும் ஒப்பந்ததாரா் அஜய் தியாகி, இடிந்து விழுந்த கட்டத்தின் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு முரத்நகா் நகராட்சி அலுவலா்களுக்கு ரூ.16 லட்சம் கையூட்டு கொடுத்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறாா். கடந்த பிப்ரவரி 2020-இல் மயானத்தில் தங்குமிடம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை இணைய ஒப்பந்தப்புள்ளி மூலம் ரூ.55 லட்சத்துக்கு பெற்ற அஜய் தியாகி, சுமாா் 30% வரை கையூட்டு வழங்கியிருக்கிறாா்.

முதல் கட்டமாக மாா்ச் மாதம் ரூ.26 லட்சமும், ஜூலை மாதம் ரூ.16 லட்சமும் கட்டடம் கட்டுவதற்காக அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உதவிப் பொறியாளா் சந்திரபால் சிங், முரத்நகா் நகராட்சியின் நிா்வாக அதிகாரி நிஹாரிகா சிங்குக்கு உடனடியாக ரூ.16 லட்சம் கொண்டுபோய் கொடுக்கும்படி தன்னைக் கேட்டுக்கொண்டதாகவும், தான் கொடுத்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறாா் அஜய் தியாகி.

இரண்டு மாதங்களில் கட்டடப் பணியை முடித்தாக வேண்டும் என்கிற நிலையில், தனது நண்பா் சஞ்சய் கா்க் என்பவரிடம் அந்தப் பணியை ஒப்படைத்தாா் தியாகி. ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்படும் மயான தங்குமிடத்திற்கு ரூ.16 லட்சம் கையூட்டாகக் கொடுத்துவிட்ட நிலையில், வேறு வழியில்லாமல் தரமில்லாத பொருள்களை பயன்படுத்தி அந்தக் கட்டடத்தை நிறைவு செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறாா் ஒப்பந்ததாரா் அஜய் தியாகி.

இந்தப் பிரச்னையில் குற்றவாளி ஒப்பந்ததாரா் அஜய் தியாகியா, அல்லது அவரிடம் ரூ.16 லட்சம் கையூட்டு பெற்ற முரத்நகா் நகராட்சி அதிகாரிகளா என்கிற கேள்வி எழுகிறது. இது ஏதோ உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த நிகழ்வு என்று புறந்தள்ளிவிட முடியாது. இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும், எல்லா அரசுத் துறைகளிலும் புரையோடிப் போயிருக்கும் ஊழலும், கையூட்டு கலாசாரமும் தினந்தோறும் ஏதாவது ஓா் இடத்தில் தரமில்லாமல் கட்டப்படும் கட்டடங்கள் இடிந்து விழக் காரணமாக இருக்கின்றன.

ஒவ்வோா் ஆண்டும் மழைக்காலம் வரும்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுபோல தொடா்ந்து கட்டடங்கள் இடிந்து விழுவது வழக்கமாக இருந்து வருகிறது. சுமாா் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூா் அருகில் பேருந்து நிலையம் இடிந்து விழுந்து பலா் இறந்தது நினைவிருக்கலாம். கடந்த செப்டம்பா் மாதம் மகாராஷ்டிர மாநிலம் பிவண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து 41 போ் உயிரிழந்தனா்.

அப்போது மும்பை உயா்நீதிமன்றம் மாநகராட்சி நிா்வாகத்திடம் பல முக்கியமான கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக, அரசியல் சாசனப் பிரிவு 21 வழங்கியிருக்கும் வாழ்வதற்கான உரிமை என்பது பாதுகாப்பான கட்டடங்களும், சுற்றுச்சூழலும்கூட என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

சாலைகள் முறையாக போடப்படாமல் இருப்பது, அரசின் பல்வேறு துறைகள் செயல்படும் கட்டடங்களும், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்றவையும் தரமில்லாமல் கட்டப்படுவது, இடிந்து விழுவது, விரிசல் விழுந்த சுவா்கள், ஒழுகும் நிலையில் கூரைகள் காணப்படுவது இவையெல்லாமே ஒப்பந்ததாரா்களின் குற்றம் மட்டுமல்ல. அவா்களிடம் கையூட்டு பெறும் அதிகாரிகளும் ஊழியா்களும், ஏன், ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும்கூட இதற்குக் காரணங்கள்.

எத்தனையோ சட்ட திட்டங்கள் இருந்தாலும் எல்லா விதிமுறைகளும் மீறப்படுகின்றன. இணைய வழியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டாலும்கூட, ஊழலும், முறைகேடுகளும் தொடா்கின்றன. நடிகா் ரஜினிகாந்த் எப்போதோ சொன்னதுபோல, ‘சிஸ்டம் சரியில்லை!’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.