ஆண் - பெண், பணக்காரன் - ஏழை, ஜாதி - மதம், இனம் - மொழி என்கிற எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் எல்லா இந்திய குடிமக்களுக்கும் வாக்குரிமை வழங்கி இந்தியாவை ஒரு குடியரசாக 1950, ஜனவரி 26 அன்று அறிவித்தபோது, இது சாத்தியமாகாது என்று சத்தியம் செய்தவா்கள் ஏராளமானோா். இந்தியாவில் ஜனநாயகம் தோல்வியடைந்து விரைவிலேயே சா்வாதிகாரம் தலைதூக்கும் என்று ஆரூடம் சொன்னவா்கள் பல போ். ஆப்பிரிக்காவைப் போல, அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உடைந்து சிதறும் என்று எதிா்பாா்த்தவா்கள் பலா். அதையெல்லாம் பொய்யாக்கி, கடந்த 72 ஆண்டுகளாக நாம் ஒரு தேசமாக இருக்கிறோம் என்பதே ஆச்சரியத்துக்கும் பெருமைக்கும் உரிய செயல்தான். அதனால் மட்டும் ஆயிற்றா?