யார் குற்றவாளி?

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி தயாரித்தது மட்டுமல்லாமல், பல வளர்ச்சி அடையும்
யார் குற்றவாளி?
Updated on
2 min read

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி தயாரித்தது மட்டுமல்லாமல், பல வளர்ச்சி அடையும், அடையாத நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்கியபோது, இந்தியாவுக்கு சர்வதேச அளவில் ஏற்பட்ட மரியாதை சாதாரணமானதல்ல. ஆனால், அதையெல்லாம் ஒரு நொடியில் தகர்க்கும் விதத்தில் அமைகின்றன, இந்திய மருந்துகளின் தரம் குறித்த செய்திகள்.

கடந்த சில ஆண்டுகளாகவே, போலி மருந்துகளாலும், தரம் குறைந்த மருந்துகளாலும் பல நோயாளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு இருக்கிறது என்பதுதான் நம்மைத் தலைகுனிய வைக்கிறது. குறிப்பாக, ஹிமாசல பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தரக்குறைவான மருந்துகளையும், போலி மருந்துகளையும் தயாரித்து இந்தியாவில் சந்தைப்படுத்துவதோடு, ஏற்றுமதியும் செய்கின்றன.இந்திய மருந்துகளின் தரம் குறித்தும், சில மருந்து நிறுவனங்களின் போலி மருந்து தயாரிப்பு குறித்தும் வெளிவரும் குற்றச்சாட்டுகள் புதிதொன்றுமல்ல. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய - மாநில அரசுகள் முனைப்புடன் நடவடிக்கை எடுக்காததால் சர்வதேச அளவில் இந்திய மருந்து தயாரிப்புகள் குறித்த நம்பிக்கை தகர்ந்து கொண்டிருக்கிறது. 

ஆறு மாதங்களுக்கு முன்னர், ஹரியாணா மாநிலம் சோனேபட்டில் உள்ள மெய்டன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தால், காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரியவந்தது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக வெளியிட்டார். அதுவும், இந்தியாவில் தயாரான அந்த இருமல் மருந்தை சோதனைக்கு உட்படுத்திக் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டது.

இருமல் மருந்தில் அளவுக்கு அதிகமாக டை எதிலின் கிளைகால், எதிலின் கிளைகால் மூலப் பொருள்கள் கலக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக அவை சேர்க்கப்பட்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். அப்படி இருந்தும் அந்த மருந்து நிறுவனம் மாநில மருத்துவக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஒப்புதலுடன் இருமல் மருந்து தயாரித்தது மட்டுமல்ல, அதனை ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குத் தொடர்ந்து ஏற்றுமதியும் செய்து வந்திருக்கிறது.

சமீபத்தில், மெய்டன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், இன்னொரு குற்றச்சாட்டுக்காக கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறது. தரம் குறைந்த ரானிடிடின் என்கிற மாத்திரையைத் தயாரித்ததாக அதன் இரண்டு இயக்குநர்களுக்கு இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்திருக்கிறது எனும் அதிர்ச்சியைவிட இந்த வழக்கு ஏன் தொடரப்பட்டது என்பது அதிக அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

2013 டிசம்பர் மாதம், வியத்நாமிலுள்ள இந்திய தூதரகம், இந்திய மருந்துக் கட்டுப்பாடு ஆணையருக்கு ஒரு தகவல் அனுப்பியது. மெய்டன் பார்மசூட்டிகல்ஸ் உள்ளிட்ட 46 இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், தரமற்ற மருந்துகளுக்காக வியத்நாம் அரசால் தடை செய்யப்பட்டிருக்கின்றன என்பதுதான் அந்தத் தகவல். அதனடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளும், விசாரணைகளும் அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியதால், பத்தாண்டுகளுக்கு முன்னர் மெய்டன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டது. 

காம்பியாவில் 70 குழந்தைகளின் மரணத்துக்கு சோனேபட் நிறுவனம் காரணம் என்றால், உஸ்பெகிஸ்தானில் குழந்தைகளின் மரணத்துக்கு நொய்டாவில் உள்ள நிறுவனமும், தரமற்ற சொட்டு மருந்து காரணமாகப் பார்வை இழப்பு ஏற்பட்டதற்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனமும் காரணங்களாகும். 2022-இல் காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் போலி மருந்தால் பல குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றனர். 

அரசு, இப்போது திடீரென்று விழித்துக்கொண்டு நாடு தழுவிய அளவில் சோதனை நடத்தி இருக்கிறது. அதில் 97 நிறுவனங்கள் தரமற்ற மருந்துகளைத் தயாரிப்பதாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன; 26 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது; 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வியத்நாம் புகார் தெரிவித்தபோதே, மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் முனைப்புடன் களமிறங்கி இருந்தால், காம்பியா சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். அந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தபோதே, ஏன் அதன் உரிமம் முடக்கப்படவில்லை என்பதற்கு யார் விளக்கம் தரப் போகிறார்கள்?

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின்போது "ஃபவி பிரவிர்' மருந்தின் போலித் தயாரிப்புகள் பலரின் உயிரைக் குடித்தது, வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டது. விலை உயர்ந்த எல்லா மருந்துகளின் போலிகளும் தயாரித்து சந்தைப்படுத்தப்படுவது உலகத்திற்கே தெரியும். தரமற்ற மாத்திரைகளும், காலாவதியான மருந்துகளும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிந்தேதான் நடக்கிறது. 

தரமற்ற மருந்துகளையும், போலி மருந்துகளையும் தயாரிக்கும் நிறுவனங்கள் தண்டிக்கப்படுகின்றன. ஆனால், அதைத் தடுப்பதற்காகவே இருப்பவர்கள் தங்கள் கடமையைச் செய்யாமல் இருந்ததற்கு தண்டனை பெறுவதில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com