சந்தர்ப்பவாதம்! - மகாராஷ்டிர அரசியல் குறித்த தலையங்கம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
2 min read

 மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் அதிரடி மாற்றங்கள், நமது சமகால அரசியலின் தரம் எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதன் அடையாளம். தார்மிக நெறிமுறைகளும், கட்சிகளின் கொள்கைகளும் சந்தர்ப்பவாத அரசியலின் முன்பு மண்டியிடுகின்றன என்பதன் வெளிப்பாடு.
 தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து 32 எம்எல்ஏக்களுடன் விலகி ஆளும் பாஜக - சிவசேனை (ஷிண்டே) கூட்டணியை ஆதரித்திருக்கும் அஜீத் பவார், ஆட்சி அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். கட்சியின் தேசியத் தலைவரும் தனது சித்தப்பாவுமான சரத் பவாரையே எதிர்க்கவும் அஜீத் பவார் துணிந்திருப்பது இரண்டாவது முறை.
 மகாராஷ்டிரத்தில் மட்டுமல்லாது, தேசிய அரசியலிலும் பிரதான இடம் வகித்துவரும் சரத் பவாருக்கு இந்த அதிரடியான கட்சிப் பிளவு நிச்சயமாக மாபெரும் சறுக்கலாக இருக்கும். பவாரின் முன்முயற்சியில் உருவாகிவரும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் தேசிய அளவிலான கூட்டணிக்கும் இது பெரும் பின்னடைவு.
 தனது கட்சிக்குள் கலகம் நிகழ வாய்ப்புள்ளது என்பதை அறிந்ததால், சில மாதங்களுக்கு முன் தனது மகள் சுப்ரியா சுலேயை செயல் தலைவராக நியமித்து, அஜீத் பவாரின் அதிகாரத்துக்கு கடிவாளம் போட்டார் பவார். ஆனால், கட்சியின் முன்னணித் தலைவர்களான பிரஃபுல் படேலும், சுனில் தத்காரேயும் அஜீத்துடன் சேர்ந்து அணி மாறுவார்கள் என்று சரத் பவார் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
 பிரதமர் மோடிக்கு தேசிய அளவில் சவால் விடுக்கும் பவாருக்கு நெருக்கடி கொடுக்கவே, பாஜக தேசியத் தலைமை, இந்த நாடகத்தை மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு அரங்கேற்றி இருக்கிறது. இந்த நாடகத்தின் மைய நாயகர் மகாராஷ்டிர துணை முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ்தான்.
 இப்போதைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜீத் பவார் அணிக்கே பெரும்பான்மை வலு இருக்கிறது. தவிர, ஆளும் கூட்டணியில் துணை முதல்வராகவும் அவர் பொறுப்பேற்றிருக்கிறார். கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய சட்டப்பேரவைத் தலைவர் ஆளும் கூட்டணிக்கே சாதகமாக இருப்பார் என்பது அனுபவபூர்வமான உண்மை.
 ஏற்கெனவே சிவசேனை கட்சியை உடைத்து பாஜகவுடன் அணி சேர்ந்து முதல்வரான ஏக்நாத் ஷிண்டே மீதான புகாரில் இன்னமும் பேரவைத் தலைவர் ராகுல் நார்வேகர் முடிவெடுக்காமல் உள்ளார். சிவசேனை எம்எல்ஏக்கள் 16 பேர் மீதான தகுதிநீக்கம் குறித்து, சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சியின் கோரிக்கை மீது அவர் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த விவகாரத்தில் அவர் ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
 சிவசேனை கட்சிப் பிளவு விவகாரத்தில் பேரவைத் தலைவர் எந்த முடிவெடுத்தாலும் அதில் உச்சநீதிமன்றம் தலையிட வாய்ப்புள்ளது. இந்த நிலையில்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் பிளவை ஏற்படுத்தியிருக்கிறது பாஜக. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் பலத்தை அழித்திருப்பதாக பாஜக மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால், சித்தாந்த அடிப்படையில் வித்தியாசமான கட்சி என்ற நற்பெயரை அக்கட்சி இழந்து பல ஆண்டுகளாகிவிட்டன.
 இந்த விவகாரத்தில் சரத் பவாருக்கும் சரிபாதி பங்குண்டு. 2019-இல் பாஜக - சிவசேனை கூட்டணி வென்று ஆட்சிப் பொறுப்பேற்றபோது, ஃபட்னவீஸ் முதல்வராவதைத் தடுப்பதற்காக, அந்தக் கூட்டணியை உடைத்து, கொள்கையற்ற கூட்டணியாக மகா விகாஸ் அகாடியை உருவாக்கியவர் பவார்தான். அதுவரை பாஜகவுடன் நெருங்கிய கூட்டாளியாக இருந்த சிவசேனையை காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அணியில் சேர்க்கவும் அவர் தயங்கவில்லை.
 அந்த முயற்சியில் வெற்றி பெறுவதற்காக அஜீத் பவாரை பாஜகவுக்கு ஆதரவளிக்குமாறு நாடகமாடச் செய்ததும் பவாரேதான். அதை நம்பி பாஜக ஆட்சி அமைத்ததும், அஜீத் பவாரை துணை முதல்வராக்கியதும், பிறகு ஃபட்னவீஸ் அரசு கவிழ்ந்ததும், மகாராஷ்டிர அரசியலில் கேலிக்குரிய நிகழ்வுகளாகப் பதிவாகிவிட்டன.
 அன்று அவர் விதைத்த வினைக்கு இன்று அறுவடை செய்திருக்கிறார். அன்று அவரால் அவமானப்பட்ட பாஜக இன்று தருணம் பார்த்து, அரசியல் சாணக்கியரான பவாருக்கு பாடம் புகட்டி இருக்கிறது. எனினும் இந்த அணி எத்துணை காலம் நீடிக்கும் என்பது பல்வேறு காரணிகளைப் பொருத்து அமையும். இப்போதைக்கு மகாராஷ்டிரத்தில் பாஜக அணி மிகவும் வலுவாக இருக்கிறது.
 வாரிசு அரசியலுக்கும் ஊழலுக்கும் எதிராக தொடர்ந்து பேசிவரும் கட்சியான பாஜக, இதுவரை தங்களால் குற்றம் சாட்டப்பட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை அரவணைத்திருப்பதுதான் சுட்டிக்காட்ட வேண்டிய நகைமுரண். ஆனால் அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்பது சாணக்கிய நீதி.
 மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த நான்காண்டுகளாக நடந்துவரும் அதிரடி திருப்பம் கொண்ட அரசியல் நாடகங்கள், நமது கட்சித்தாவல் தடைச்சட்டத்தை மறுசீரமைத்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முன்னரும் இதேபோன்ற காட்சிகள் பல மாநிலங்களில் நிகழ்ந்திருந்தாலும், அவை அனைத்தையும் விஞ்சிவிட்டது மகாராஷ்டிரம்.
 கட்சித் தாவல் தடை சட்டத்தில் பேரவைத் தலைவரின் பங்கு, அரசியல் கட்சிகளின் நேர்மை, உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பு ஆகிய பல துணைக்கூறுகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கட்சித் தாவல் தடை சட்டம் குறித்து தேசிய அளவில் விரிவான பொது விவாதம் தேவை.
 மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களின் அடிப்படையில் இந்திய அரசியல் குறித்த ஆக்கபூர்வ விவாதம் முன்னெடுக்கப்படுவது அவசியம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com