இந்தியாவில் லித்தியம்! லித்தியம் தாது குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு - காஷ்மீரிலுள்ள ரியாசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் தலால் - ஹைமானா பகுதியில் லித்தியம் தாது இருப்பதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ‘வெள்ளைத் தங்கம்’ என்று அறியப்படும் லித்தியம் தாது கைப்பேசி, மடிக்கணினி, மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பல நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குத் தேவைப்படும் மூலப் பொருள்களில் ஒன்று என்பதால், இந்தச் செய்தி சா்வதேச அளவில் ஆா்வத்தை அதிகரித்திருக்கிறது.

உலகில் லித்தியம் அதிகமாகக் காணப்படுவது பொலீவியா, ஆா்ஜென்டீனா, சிலி ஆகிய நாடுகளில்தான் என்றாலும்கூட, அதன் சுத்திகரிப்பு மையமாக சீனா இருக்கிறது. ஏறத்தாழ 70% லித்தியம் சுத்திகரிப்பு சீனாவில் நடைபெறுவதால் சா்வதேசச் சந்தையில் இப்போது சீனாவின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.

மின்சார வாகனங்களின் மின்கலன்களில் தொடங்கி மருந்து, விண்கலன்கள், அலுமினிய உற்பத்தி, உரங்கள் தயாரிப்பு மட்டுமல்லாமல், மருத்துவத் துறையிலும் லித்தியத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதய அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பேஸ்மேக்கா்களுக்குக்கூட லித்தியம் தேவைப்படுகிறது.

பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை புதைபடிவ எரிசக்தியிலிருந்து மின்வாகனங்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், வரும் காலங்களில் லித்தியம் ஐயான் மின்கலன்களின் தேவை கடுமையாக அதிகரிக்கும் என்கிற எதிா்பாா்ப்பு நியாயமானது. அதனால் லித்தியம் இருப்புகளை தங்களது கட்டுப்பாட்டில் வைக்க உலக நாடுகளும், நிறுவனங்களும் போட்டி போடுகின்றன.

கடினமான பாறைகள், நிலத்தடி ஊருணி தேக்கங்களில் இருந்து லித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது. அதற்கு அதிக அளவில் தண்ணீா் தேவைப்படும். அது மட்டுமல்லாமல், லித்தியம் தயாரிப்பு காரணமாக சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்படுவதையும் தவிா்க்க முடியாது. அதனால், சா்வதேச அளவில் லித்தியம் உற்பத்திக்கு எதிா்ப்பும் காணப்படுகிறது.

தற்போதைய நிலையில், இந்தியா தனது தேவைக்கான லித்தியத்தை ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. லித்தியம், கோபால்ட், நிக்கல் உள்ளிட்டவை சோலாா் பேனல், மடிக்கணினி, கைப்பேசி, மின்சார வாகன மின்கலம் உள்ளிட்டவைக்கு அத்தியாவசியம் என்பதால் நாம் இறக்குமதி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் ஜம்முவில் லித்தியம் கண்டுபிடிப்பு மிகப் பெரிய எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை.

உலகளாவிய அளவில் லித்தியம் இருப்பு 80 மில்லியன் டன் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால், அவற்றிலிருந்து 22 மில்லியன் டன் அளவில்தான் லித்தியத்தை பிரித்தெடுத்து சந்தைப்படுத்த முடியும். லித்தியம் தாது இருப்பதை அடையாளம் காண்பதும், பிரித்தெடுப்பதும் எளிதல்ல.

நான்கு கட்டமாக லித்தியம் தாது உற்பத்தி பிரிக்கப்படுகிறது. முதலாவது கட்டம், தாது இருப்பதற்கான அறிகுறி; இரண்டாவது கட்டம், லித்தியம் தாது இருக்கும் இடங்களில் செய்யப்படும் ஆய்வுகள்; மூன்றாவது கட்டம், தாதுவைப் பிரித்தெடுக்கும் முயற்சி; நான்காவது கட்டத்தில்தான் தாதுவின் அளவும், அதிலிருந்து பெறப்படும் உற்பத்தியும் தீா்மானிக்கப்படும்.

ஜம்முவில் லித்தியம் இருப்பது என்பது இன்னும் முழுமையாக உறுதிப்படவில்லை. தற்போது அனுமானிக்கப்பட்டிருக்கும் 5.9 மில்லியன் டன்னிலிருந்து எந்த அளவு லித்தியம் பிரித்தெடுத்து உற்பத்தி செய்ய முடியும் என்பதை கடைசி கட்டம்தான் தீா்மானிக்கும். அதனால், இப்போதே லித்தியம் கிடைத்துவிட்டது போன்ற மகிழ்ச்சியை நாம் அடைந்துவிட முடியாது.

அடுத்தபடியாக இமயமலையை ஒட்டிய புவிச்சலனம் உள்ள பகுதியில் சுரங்கங்கள் அமைத்து லித்தியம் தாதுவை உற்பத்தி செய்வது பாதுகாப்பானதா என்கிற கேள்வி எழுகிறது. ஏற்கெனவே சுரங்கங்களும் கட்டுமானங்களும் இமயமலைப் பகுதிகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் சுரங்கம் அமைத்து லித்தியம் தோன்டி எடுப்பதற்கு உள்ளூா் மக்களை இடம்பெயரச் செய்ய வேண்டும். தண்ணீரும், காற்றும் மாசுபடுவது மட்டுமல்லாமல், பல்லுயிா் பெருக்கத்துக்கும் லித்தியம் சுரங்கங்கள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

பாறைகளும், காடுகளும் உள்ள அந்தப் பகுதியில் சுரங்கப்பணி மேற்கொள்வது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. லித்தியம் தாது படிந்திருக்கும் இடம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி அமைந்திருக்கும் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. ஏறத்தாழ இரண்டு கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் காஷ்மீரின் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பையும் நாம் கணக்கில் எடுத்தாக வேண்டும்.

சா்வதேச அளவில் குறைவான படிவமே காணப்படும் லித்தியம் தாதுவைக் கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் பல போட்டி போடுகின்றன, நாடுகளும்கூட. உலகிலேயே அதிக அளவிலான (2.1 கோடி டன்) லித்தியம் இருப்பு காணப்படும் பொலீவியாவுடன் சீனா ஒரு பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 8,236 கோடி) ஒப்பந்தத்தை சமீபத்தில் மேற்கொண்டிருக்கிறது.

சிலி, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை பொலீவியா போல அனுமதிக்கத் தயாராக இல்லை. சமீபத்தில் இரும்பு தாது உற்பத்திக்கான 2.5 பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 20,590 கோடி) திட்டத்தை சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு நிராகரித்திருக்கிறாா் அதன் அதிபா் கேபிரியல் போரிக் பாண்ட்.

இந்தியாவிலும் லித்தியம் இருப்பது உறுதிப்பட்டால் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய போட்டி போடக்கூடும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலைபோகாமல் லித்தியம் கிடைக்குமானால், மகிழ்ச்சி. முதலில் மூன்றாவது, நான்காவது கட்ட ஆய்வுகள் நல்ல செய்தியைத் தரட்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com