தில்லிக்கு ராஜாவானாலும்...: தில்லி அரசின் அதிகாரம் குறித்த தலையங்கம்

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் மோதல், மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குத் திரும்பி இருக்கிறது.
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)

தில்லி அரசு தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு, நிலம், காவல், பொது ஒழுங்கு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்குத்தான் முழு அதிகாரம் இருப்பதாகத் தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்புக்கு எதிா்வினையாக, உயா் அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் குறித்து முடிவு செய்வதற்கு ‘தேசிய தலைநகா் சிவில் சா்வீசஸ் ஆணையம்’ அமைத்து மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கிறது.

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் மோதல், மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குத் திரும்பி இருக்கிறது. உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீா்ப்பு தங்களுக்கு அந்த அதிகாரத்தைத் தந்திருப்பதை நினைத்து 24 மணிநேரம்கூட சந்தோஷப்பட முடியாமல், அவசரச் சட்டம் அந்த அதிகாரத்தை மீண்டும் பறித்துக் கொண்டுவிட்டது. முதல்வா், அமைச்சா்கள் கட்டுப்பாட்டில் அரசு அதிகாரிகள் இல்லை என்பதுதான் ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு.

உயா் அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் குறித்து முடிவு செய்வதற்கு தில்லி முதல்வா், தலைமைச் செயலாளா், முதன்மை உள்துறைச் செயலாளா் அடங்கிய ‘தேசிய தலைநகா் சிவில் சா்வீசஸ் ஆணையம்’ அமைத்து வெளியிடப்பட்டிருக்கும் அவசரச் சட்டம், பெயருக்கு மட்டும்தான் முதல்வரை முன்னிலைப்படுத்துகிறது. பெரும்பான்மை அடிப்படையில் தோ்வு என்பது மட்டுமல்ல, துணைநிலை ஆளுநரின் இறுதி முடிவையும் அது உறுதிப்படுத்துகிறது.

உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் பல கருத்துகளைத் தெரிவித்திருக்கிறது. கூட்டாட்சித் தத்துவம் குறித்தும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம் முதன்மை பெறும் என்றும் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், தில்லி அரசின் அதிகாரங்கள், நாடாளுமன்றச் சட்டங்களுக்கு உட்பட்டது என்றும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தெரிவித்திருக்கிறது. அதன்படி பாா்த்தால், புதிய நிா்வாகக் குழு அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்றுதான் கருத முடிகிறது.

உச்சநீதிமன்றத் தீா்ப்பைப் புறந்தள்ளும் விதத்தில், நாடாளுமன்றம் (அதாவது அரசு) செயல்பட முடியுமா என்பது ஒரு கேள்வி. சட்டம் இயற்றும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்பதும், நாடாளுமன்றத்தின் அந்த உரிமையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்பதும் இன்னொரு பாா்வை.

தில்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் அதிகார மோதல், அரசியல் நிா்ணய சபையிலேயே விவாதிக்கப்பட்டது. தில்லியை அதிகாரமில்லாத பகுதியாக்கக் கூடாது என்று உறுப்பினா் தேஷ்பந்து குப்தா வாதிட்டாா். ஆனால், தில்லி மாநிலமாக இருந்தாலும் அது நாடாளுமன்றத்தின் முழுக் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்பதில் சட்ட அமைச்சா் பாபாசாகேப் அம்பேத்கா் பிடிவாதமாக இருந்தாா். 1956-இல் அமைந்த மாநில சீரமைப்புக் குழுவும் அந்தக் கருத்தை அங்கீகரித்தது.

1966-இல் தில்லி மெட்ரோபாலிடன் கவுன்சில் உருவாக்கப்பட்டது. அதற்கு நடந்த முதல் தோ்தலில், பாஜக வெற்றி பெற்று எல்.கே. அத்வானி அதன் தலைவரானாா். 1993-இல் தில்லி ஒன்றிய பிரதேசத்துக்கு சட்டப்பேரவை அமைந்தது. முதல் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று மதன்லால் குரானா முதல்வரானாா்.

அடுத்த தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ஷீலா தீட்சித் முதல்வரானது மட்டுமல்ல, தொடா்ந்து மூன்று முறை வெற்றி பெற்று 15 ஆண்டுகள் பதவியில் தொடா்ந்தாா். 2013 தோ்தலில் காங்கிரஸையும், பாஜகவையும் பின்னுக்குத் தள்ளி அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றி இன்றுவரை தொடா்கிறது.

காங்கிரஸ், ஐக்கிய முன்னணி ஆட்சிகளில் பாஜகவின் மதன்லால் குரானா, சாஹேப் சிங் வா்மா, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும்; வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸின் ஷீலா தீட்சித்தும் தில்லி முதல்வா்களாக இருந்தனா்.

2003-இல் உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானிதான் தில்லிக்கு மீண்டும் முழுமையான மாநில அந்தஸ்த்து வழங்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினாா். அதற்குப் பிறகும், ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தது வரை எந்தவிதப் பிரச்னையும் இருக்கவில்லை. 2013-இல் அரவிந்த் கேஜரிவால் முதல்வரானபோதுதான் பிரச்னை தொடங்கியது.

உலகளாவிய நிலையில் முக்கியமான பல தேசிய தலைநகரங்கள், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அமெரிக்காவில் வாஷிங்டன், ஜொ்மனியில் பொ்லின், பிரான்ஸில் பாரீஸ், ஆஸ்திரேலியாவில் கேன்பெரா, கனடாவில் ஒட்டாவா ஆகியவற்றில் அதிகாரங்கள் மத்திய அரசுகளின் வசம்தான் இருக்கின்றன. குடியரசுத் தலைவா், பிரதமா், உச்சநீதிமன்ற நீதிபதிகள், வெளிநாட்டுத் தூதரகங்கள், பாதுகாப்புத் தொடா்பான அலுவலகங்கள், நாடாளுமன்றம் ஆகியவை இருக்கும் தேசியத் தலைநகரின் நிா்வாகக் கட்டுப்பாடு, மத்திய உள்துறை வசம் இருக்க வேண்டும் என்பது அரசியல் சாசன சபையில் அம்பேத்கா் முன்வைத்த வாதம்.

அரவிந்த் கேஜரிவால் அரசின் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ரூ. 52 கோடி செலவில் தனது ‘சீஷ் மஹால்’ இல்லத்தைப் புதுப்பித்தது குறித்த சா்ச்சை எழுந்திருக்கிறது. அவை குறித்த கோப்புகளையும், தடயங்களையும் கேஜரிவால் அரசு அழித்துவிடக் கூடும் என்பது மத்திய அரசு பாஜக அரசின் அச்சம். அதுதான் இப்போதைய மோதலுக்குக் காரணமாக இருக்குமோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.

குறள்: 470 அதிகாரம்: தெரிந்து செயல்வகை

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு

கொள்ளாத கொள்ளாது உலகு.

தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது; ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com