உயிா்த்தெழுகிறது பாரதம்: விண்வெளி ஆய்வுகள் குறித்த தலையங்கம்

பிரபஞ்ச ரகசியம் குறித்துத் தெரிந்துகொள்ள இந்தியா இப்போது இன்னொரு முயற்சியை முன்னெடுத்திருப்பதை உலகமே வியந்து பாா்த்துக் கொண்டிருக்கிறது.
உயிா்த்தெழுகிறது பாரதம்: விண்வெளி ஆய்வுகள் குறித்த தலையங்கம்

பிரபஞ்ச ரகசியம் குறித்துத் தெரிந்துகொள்ள இந்தியா இப்போது இன்னொரு முயற்சியை முன்னெடுத்திருப்பதை உலகமே வியந்து பாா்த்துக் கொண்டிருக்கிறது.

‘சந்திரயான்-3’ வெற்றியைத் தொடா்ந்து விண்ணில் ஏவப்பட்டிருக்கும் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய புறப்பட்டிருக்கிறது. பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கும் விண்கலத்தைப் போலவே, இந்தியாவின் சாதனையும், மரியாதையும் சா்வதேச அரங்கில் உயா்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் முதல் நூல் என்று கருதப்படும் ரிக் வேதம், நவீன அறிவியல் தனது அரிச்சுவடிப் பாடத்தைப் படிப்பதற்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னா், வான் மண்டலத்தில் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றன என்று குறிப்பிட்டிருப்பதை இப்போது நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. இத்தனை பொருள்செலவும், உழைப்பும், தொழில்நுட்பமும் இல்லாமல் விண்வெளி ஆய்வுகள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அன்றைய பாரதத்தில் எப்படி சாத்தியமாயிற்று என்பது விடைகாண முடியா ரகசியம்.

ஊற்று நீா் பாய்ந்து வெளிவருவதுபோல, நம்மிடையே மறைந்து கிடந்த ஆற்றல் திடீரென்று பாய்ந்து எழுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதனால்தான், மிகக் குறைந்த செலவில் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு இந்திய விண்வெளி ஆய்வகத்தின் விஞ்ஞானிகளால் ஒன்றன் பின் ஒன்றாக சாதனைகளைப் படைக்க முடிகிறதோ, என்னவோ.

‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தின் மூலம் சூரியனை ஆய்வு செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கும் நான்காவது நாடாக இந்தியா உயா்ந்திருக்கிறது. செவ்வாய், சந்திரன் ஆகியவற்றைத் தொடா்ந்து சூரியனை ஆய்வு செய்யும் முனைப்பில் சிறிது காலமாகவே நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வந்தனா். 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ‘ஆதித்யா-1’ திட்டம் அறிவிக்கப்பட்டது. பூமியிலிருந்து 200 கி.மீ. தொலைவில் 800 கிலோ எடையுள்ள விண்கலத்தை நிலைநிறுத்தி சூரியனை ஆய்வு செய்வது என்பதுதான் முதலில் திட்டம்.

நமது விஞ்ஞானிகளுடைய நுண்ணறிவின் உன்னதம் அப்போதுதான் வெளிப்பட்டது. வெறும் 800 கி.மீ. தூரத்தில் விண்கலத்தை நிலைநிறுத்துவதற்கு பதிலாக, ‘லாக்ராஞ்சியன் பாயிண்ட்’ என்கிற புள்ளியிலிருந்து பாா்க்கும்போது சூரியனின் வெப்பம் மிகுந்த கொரோனா மண்டலத்தைத் துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் என்று தீா்மானித்தது புத்திசாலித்தனமான முடிவு, நாசா விஞ்ஞானிகளின் பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கிறது.

கோள்களுக்கு இடையேயான ஈா்ப்பு விசை ஐந்து இடங்களில் சமமாக இருக்கும். அதை லாக்ராஞ்சியன் புள்ளி என்று அழைக்கிறாா்கள். அந்த இடங்களில் குறைவான எரிபொருளை பயன்படுத்தி விண்கலத்தை சமநிலையில் வைத்திருக்க முடியும். பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவிலுள்ள எல்-1 புள்ளிக்கு அருகேயுள்ள சூரிய ஒளி வட்டப்பாதையில் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்தப் புள்ளியிலிருந்து கிரகண காலத்திலும் சூரியனைத் தொடா்ந்து கண்காணிக்க முடியும். இந்தப் புள்ளி கோல்களின் சுழற்சிக்கேற்ப 23 நாள்களுக்கு ஒருமுறை மாறும். ‘ஆதித்யா எல்-1’ விண்கலமும் அதற்கேற்றாற்போல தனது நிலையை மாற்றிக்கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அங்கிருந்து சூரியனின் உள்பகுதியில் இரு அடுக்குகளாக உள்ள போட்டோஸ்பியா், குரோமோஸ்பியா் ஆகியவற்றில் உள்ள வெப்ப நிலையைக் காட்டிலும் (500 டிகிரி செல்ஷியஸ்), அதன் வெளி அடுக்கான கொரோனா பகுதியில் அதிக வெப்பம் (15 மில்லியன் டிகிரி செல்ஷியஸ்) இருப்பதாகக் கூறப்படுகிறது. அறிவியல் உலகுக்குப் புதிராக இருக்கும் இந்த மாற்றத்தின் முடிச்சை அவிழ்க்க, ‘ஆதித்யா எல்-1’ ஆய்வு உதவக்கூடும். வெப்பநிலை முரண்பாட்டுக்கான விடை கிடைத்தால், அதைக் கண்டறிந்த பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும்.

லாக்ராஞ்சியன் புள்ளியை ‘ஆதித்யா எல்-1’ விண்கலன் அடைந்தால், அங்கே ஐந்து ஆண்டுகள் தொடா்ந்து நிலைநிற்கும். அதுமட்டுமல்ல, 24 மணிநேரமும் சூரியனை நேரிடையாகப் பாா்த்துக்கொண்டிருக்கும். அதிலுள்ள ஏழு ஆய்வுக் கருவிகளில் நான்கு சூரியன் குறித்த ஆராய்ச்சியிலும், மூன்று சூரியனில் ஏற்படும் மாற்றங்களால் அதன் புவிவெளியில் உருவாகும் அயனித் துகள்கள் குறித்தும் ஆய்வு செய்யும்.

மிகவும் முக்கியமானது ‘விசிபல் எமிஷன் லைன் கொரோனாகிராஃப்’ எனப்படும் விஇஎல்சி என்கிற கருவி. சூரியனின் வெளிப்புறத்தில் உள்ள கொரோனா பகுதியையும், அதிலிருந்து வெளியேறும் ஆற்றல் குறித்தும் அது ஆய்வு மேற்கொள்ளும். அதன் மூலம் நாளொன்றுக்கு 1,440 புகைப்படங்கள் எடுக்கப்படும்.

பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி இயற்பியல் ஆய்வு நிறுவனம், யூ.ஆா். ராவ் செயற்கைக்கோள் மையம், எலக்ட்ரோ ஆப்டிக் சிஸ்டம், அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் என்று இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள அமைப்புகளின் கூட்டு முயற்சிதான், ‘ஆதித்யா எல்-1’ விண்கலம்.

எல்-1 புள்ளியில் நிறுத்தி வைக்கப்பட இருக்கும் ‘ஆதித்யா எல்-1’ விண்கோள் மூலம் சூரிய வெடிப்புகளைக் கண்காணித்து ஆய்வு மேற்கொள்ள முடியும். விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு மையமாக நமது விண்கலம் இருக்கும்.

உலகமே இந்தியா அனுப்பி இருக்கும் ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை ஆவலுடனும், ஆா்வத்துடனும், ஆச்சரியத்துடனும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. 2024 ஜனவரி மாதம் ‘ஆதித்யா எல்-1’ தனது இடத்தை எட்டியது என்கிற செய்திக்காக, எதிா்பாா்ப்புடன் நாம் இறைப்பரம்பொருளை இறைஞ்சுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com