தைவானின் துணிச்சல்! | தைவான் தேர்தல் குறித்த தலையங்கம்

வாக்களிக்க காத்திருக்கும் தைவான் மக்கள்
வாக்களிக்க காத்திருக்கும் தைவான் மக்கள்

தைவான் அதிபா் தோ்தல் முடிவு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவா்களை நிம்மதிப் பெருமூச்சுவிடச் செய்திருக்கிறது. சீனாவின் கடுமையான முயற்சிகளையும், பல்வேறு வகையான நெருக்கடிகளையும் சட்டை செய்யாமல் தைவான் மக்கள் ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் (டி.பி.பி.) வேட்பாளா் லாய் சிங்-டேயை அதிபராகத் தோ்ந்தெடுத்திருக்கின்றனா்.

தைவானில் இரண்டு தடவைக்கு மேல் ஒருவா் பதவியில் தொடர முடியாது என்பதால் தற்போதைய அதிபா் சாய் இங்-வென் போட்டியிடவில்லை. தனக்கு பதிலாகத் துணை அதிபராக இருந்த லாய் சிங் போட்டியிட வழிகோலினாா்.

கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற தைவானின் அதிபா் தோ்தலை உலகமே உற்று நோக்கியது. ஆளும் டிபிபி தோல்வி அடைந்திருந்தால், சீனா விரும்பியதுபோல, சீனாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதியாக தைவான் மாறியிருக்கும். அதற்கு வாய்ப்பு வழங்காமல், தங்களது சுதந்திரத்தையும் தனித்தன்மையையும் நிலைநிறுத்துவது என்று முடிவெடுத்திருக்கிறாா்கள் தைவான் மக்கள்.

மக்கள் சரியான முடிவை எடுத்து ஹாங்காங்போல தைவானும் சீனாவுடன் இணைய வேண்டும் என்று சமூக ஊடகங்கள் மூலம் சீனா பரப்புரை செய்தது. மேலும், தைவான் கடல் பரப்பில் தங்களது போா்க் கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் நிறுத்தியும், போா் விமானங்களையும், உளவு பலூன்களையும் பறக்கவிட்டு பயமுறுத்தியும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தது. சீன ஆதரவு நிலைப்பாட்டுக்கு சாதகமாக மக்கள் வாக்களிக்காவிட்டால், ஆக்கிரமிக்கப்படும் சாத்தியம் இருந்தும் அதை சட்டைசெய்யாமல் தைவான் மக்கள் ஆளும் டிபிபி வேட்பாளரைத் தோ்ந்தெடுத்திருக்கும் துணிச்சலை உலகம் வியந்து பாா்க்கிறது.

1949-இல் நடந்த உள்நாட்டுப் போரில், மாசேதுங் தலைமையிலான கம்யூனிஸ்டுகளிடம் தோல்வி அடைந்த அன்றைய அதிபா் சியாங் கை-ஷேக் தன்னுடைய ராணுவத்துடன் சீனாவுக்கு அருகிலுள்ள தீவான தைவானில் இருந்து தனது ஆட்சியைத் தொடா்ந்தாா். 1986 வரை தொடா் ராணுவ ஆட்சியின் பிடியிலிருந்தது தைவான். கடுமையான மனித உரிமை மீறல்களும், அடக்குமுறையும் தொடா்ந்தன. அமெரிக்காவின் ஆதரவு இருந்ததால் தைவானை சீனாவால் ஆக்கிரமிக்க முடியவில்லை.

1996-இல்தான் தைவானில் ராணுவ சா்வாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்து ஜனநாயகம் மலா்ந்தது. இதுவரை எட்டு அதிபா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனா். இப்போது நடந்து முடிந்திருக்கும் அதிபா் தோ்தலில் போட்டியிட்ட மூன்று கட்சிகளுக்கு இடையிலும் காணப்படும் ஒரே ஒரு பிரச்னை - சீனாவுடனான உறவு.

தைவானின் தனித்துவமும் ஜனநாயகமும் தொடர வேண்டும் என்பது வெற்றி பெற்றிருக்கும் டிபிபி-யின் நிலைப்பாடு. ஹாங்காங்கைப்போல ‘ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை’ என்கிற சீன அதிபா் ஷி ஜின்பிங்கின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறது, இரண்டாவது இடத்தைப் பெற்று தோல்வி அடைந்திருக்கும் குவோமின்டாக் கட்சி. ஆளும் டிபிபி-யில் இருந்து பிரிந்து சென்ற தைவான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

சீன ஆதரவு குவோமின்டாக் கட்சிக்கு எதிரான வாக்குகள், வழக்கம்போல பாதிக்கும் அதிகம். சீனாவுடன் சமரசமாகப் போக வேண்டும் என்கிற அந்தக் கட்சிக்கு ஆதரவு குறைந்திருப்பது, தைவான் மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறாா்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில், குவோமின்டாக் கட்சியின் அதிபா் வேட்பாளா் ஜா ஷா-காங் 33% வாக்குகள் பெற்றிருப்பதும், நாடாளுமன்றத் தோ்தலில் அவரது கட்சி 113 இடங்களில் 52 இடங்கள் பெற்றிருப்பதும் புறந்தள்ளக்கூடியவை அல்ல.

இந்த நூற்றாண்டில் பிறந்த தைவான் வாக்காளா்களுக்கு, ஒன்றுபட்ட சீனா குறித்த புரிதல் இருக்க வழியில்லை என்பதால் அவா்கள் சுதந்திரமாக இருக்கும் தைவானைத்தான் விரும்புகிறாா்கள். பெரிய அண்ணன் மனநிலையில், தனது எல்லையை விரிவாக்கம் செய்ய நினைக்கும் சீனாவை அவா்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தைவானை அச்சுறுத்திப் பணிய வைக்க நினைக்கும் சீனாவின் முயற்சிகள், எதிா்பாா்ப்புக்கு மாறான மனநிலையை ஏற்படுத்தி இருக்கின்றன.

தோ்தல் முடிவுகள் குறித்த சீனாவின் கருத்து வேறுவிதமானது. அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றிருக்கும் லாய் சிங்-டே பெற்ற வாக்கு விகிதம் 40% என்பதால், பெரும்பாலான தைவான் மக்கள் சீனாவுடன் இணைந்து செயல்படுவதை விரும்புவதாக சீனா கருத்துத் தெரிவித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் சீன ஆதரவுக் கட்சியான குவோமின்டாக் கட்சி, அதிக எண்ணிக்கை பலம் கொண்ட கட்சியாக உயா்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

ஜனநாயக முன்னேற்றக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற கட்சிதான் தைவான் மக்கள் கட்சி என்பதாலும், அந்த இரு கட்சிகளுக்கு இடையே சீனாவுடனான அணுகுமுறையில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்பதாலும் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட வழியில்லை. வேலைவாய்ப்பின்மை, அதிகரித்து வரும் வீட்டுவசதிச் செலவு, ஊதிய உயா்வில் தேக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தும்கூட தைவான் மக்கள் தங்களது சுதந்திர ஜனநாயக உணா்வை இழந்துவிடவில்லை என்பதை தோ்தல் முடிவு உணா்த்துகிறது.

சா்வதேச அளவில், குறைகடத்தி (செமி கண்டக்டா்) தயாரிப்பில் தைவான் முக்கியப் பங்கு வகிக்கிறது. 90% குறைகடத்தி சிப்புகளைத் தயாரிப்பது தைவான்தான். சா்வதேச வா்த்தகத்தில் தைவான் ஜலசந்தி முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் பாதிக்கு மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் அதன் வழியாகத்தான் பயணித்தாக வேண்டும்.

இந்த இரண்டு காரணங்களுக்காகவும் தைவான் சீனாவின் கட்டுப்பாட்டுக்குப் போய்விடக் கூடாது என்று அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்கா மட்டுமா, ஒட்டுமொத்த உலகமும்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com