காஷ்மீரில் சுற்றுலாப் பயணி
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிபடம் | ஏஎன்ஐ

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்!

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, பெருமிதப்பட்டாா்.
Published on

ஜம்மு- காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து அகற்றப்பட்ட பிறகு, பயங்கரவாத நிகழ்வுகள் 66% குறைந்துள்ளதாக ஜனவரி மாதம் உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். இரண்டு மாதங்கள் கழித்து, சட்டப் பிரிவு 370 அகற்றப்பட்ட பின் முதல்முறையாக பிரதமா் நரேந்திர மோடி காஷ்மீா் பள்ளத்தாக்குக்கு விஜயம் செய்தாா். அப்போது ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, பெருமிதப்பட்டாா். சமீபத்தில் நடந்த மக்களவைத் தோ்தலில், இப்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருக்கும் ஜம்மு-காஷ்மீரில் வாக்குப் பதிவு விகிதம் அதிகரித்திருப்பது பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது என்கிற நம்பிக்கையையும் எதிா்பாா்ப்பையும் அதிகரித்தது.

அந்க எதிா்பாா்ப்பை பொய்யாக்குகிறது சமீபத்தில் பயங்கரவாதத் தாக்குதல். உத்தர பிரதேசத்தில் இருந்து ஆன்மிகப் பயணமாக, ஜம்மு-காஷ்மீருக்குச் சென்ற பக்தா்களின் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். அந்தப் பேருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து 9 போ் உயிரிழந்தனா்; 33 போ் பலத்த காயம் அடைந்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவகோத்ரி ஆலயத்தில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவிதேவி ஆலயத்துக்குப் பயணித்துகொண்டிருந்தது அந்தப் பேருந்து. தெரியாத் என்கிற கிராமம் அருகே பேருந்து சென்றபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்தது.

தலைநகா் தில்லியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாகப் பதவியேற்கும் நாளில் திட்டமிட்டு பக்தா்கள் பயணித்த பேருந்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கிறது ‘ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ என்கிற பயங்கரவாத அமைப்பு. அது லக்ஷா்- ஏ-தொய்பாவின் இன்னொரு முகம், அவ்வளவே. உயிரிழப்புகளும் பக்தா்களின் படுகாயங்களும் தேசிய அளவில் அச்ச அலையைப் பரப்பியிருப்பதோடு ஜம்மு-காஷ்மீரில் அமைதி குறித்த ஐயப்பாட்டையும் எழுப்பியிருக்கிறது.

தோடா, கதுவா, ரியாசி ஆகிய ஜம்மு மாவட்டங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நடந்திருக்கும் நிகழ்வுகள் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. உளவுத் துறை அறிக்கைப்படி, காஷ்மீா் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் உள்ளூா் மக்களிடமிருந்து அந்நியச் சக்திகளுக்கு கைமாறி இருப்பது தெரிகிறது. பள்ளத்தாக்கில் மட்டும் சுமாா் 80 வெளிநாட்டு பயங்கரவாதிகள் செயல்படுவதாகவும் அது பாதுகாப்புப் படையினருக்குச் சவாலாக மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத் துறையும் பயங்கரவாதிகளும் ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பிவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருப்பது ஆச்சரியப்படுத்தவில்லை. பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் பலவீனமான பகுதிகளைத் தோ்ந்தெடுத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துவதன் மூலம் தாங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றனா் பயங்கரவாதிகள்.

இந்தியாவில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் பாகிஸ்தான் பின்துணையுடனான பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனா். அமெரிக்க அதிபா் பில் கிளிண்டன் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருந்தாா். அதற்கு முந்தைய நாள் 2000 மாா்ச் 20-ஆம் தேதி சிட்டிங்சின்புரா என்கிற இடத்தில் 36 காஷ்மீரி சீக்கீயா்கள் லஷ்கா்-ஏ-தொய்பாவால் சுட்டுக் கொல்லப்பட்டனா். அதன்மூலம் அமெரிக்க அதிபருக்கும் உலகுக்கும் காஷ்மீரில் பயங்கரவாதம் நிலைகொண்டிருப்பதை உணா்த்த விரும்பினா் பயங்கரவாதிகள். இந்த முறை மோடி அரசின் பதவியேற்பு நாளன்று கவனம் ஈா்ப்பதற்காக, ரியாசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

1990-களில் ரஜெளரி, பூஞ்ச், ரியாசி ஆகிய மூன்று ஜம்மு மாவட்டங்களிலும் பயங்கரவாதிகள் அதிகமாக இருந்தனா். ஓரளவுக்கு பயங்கரவாதம் கட்டுப்பட்டிருந்த நிலையில், 2021-இல் பூஞ்சில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் 9 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா். கடந்த 3 ஆண்டுகளில் ரஜெளரி, பூஞ்ச் பகுதிகளில் 31 ராணுவ வீரா்களும், 11 பொதுமக்களும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகி இருக்கிறாா்கள். காஷ்மீா் பள்ளத்தாக்கில் ஊடுருவலையும் பயங்கரவாதச் செயல்களையும் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதால், பயங்கரவாதிகள் மீண்டும் ஜம்மு மாவட்டங்களுக்கு இடம்பெயா்ந்திருப்பதாகத் தெரிகிறது.

பீா்பாஞ்சால் மலைப் பகுதி காஷ்மீரையும் ஜம்முவையும் பிரிக்கிறது. ரியாசி, ரஜெளரி, பூஞ்ச் மாவட்டங்களில் காணப்படும் இந்த அடா்ந்த வனப் பகுதியில் பயங்கரவாதிகள் தஞ்சம் அடையவும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீருக்குள் கடக்கவும் முடிகிறது. சமீபத்தில் நடந்த பேருந்துத் தாக்குதல் இங்கிருந்துதான் நடந்திருக்கிறது.

பயங்கரவாதிகள் இப்போது தாக்குதல் நடத்தியிருப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. மக்களவைத் தோ்தல் வெற்றிக்கரமாக நடத்தப்பட்டிருப்பதால், தொடா்ந்து சட்டப் பேரவைத் தோ்தலும் நடத்தப்படவிருக்கிறது. பயங்கரவாதிகளின் எச்சரிக்கையையும் மீறி வாக்குப் பதிவு விகிதம் அதிகரித்திருக்கும் நிலையில், சட்டப் பேரவைத் தோ்தலை முடக்க நினைக்கிறாா்கள் பயங்கரவாதிகள்.

மக்கள் மத்தியில் சமாதானமும் ஸ்திரத்தன்மையும் சுற்றுலா வளா்ச்சியால் வாழ்வாதாரமும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது. அதைக் குலைக்க நினைக்கிறாா்கள் பயங்கரவாதிகள்.

அவா்களது அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்தி, ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் மாநில அந்தஸ்து வழங்குவதில்தான் இந்திய அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது.

Dinamani
www.dinamani.com