18-ஆவது மக்களவை கூட்டுக் கூட்டம்.
18-ஆவது மக்களவை கூட்டுக் கூட்டம்.

அணுகுமுறை மாற வேண்டும்!

புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களின் பதவியேற்புடன் 18-ஆவது மக்களவை கூடியிருக்கிறது.
Published on

புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களின் பதவியேற்புடன் 18-ஆவது மக்களவை கூடியிருக்கிறது. மாநிலங்களவை ஜூன் 27-ஆம் தேதி தொடங்கும் நிலையில் அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்ற உள்ளாா்.

மக்களவை உறுப்பினா்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக இடைக்காலத் தலைவா் நியமிப்பது வழக்கம். ஒடிஸா மாநிலம் கட்டக்கிலிருந்து தொடா்ந்து ஏழாவது முறையாக தோ்வாகி இருக்கும் பா்த்ருஹரி மகதாபை இடைக்காலத் தலைவராக நியமித்து இருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.

இடைக்காலத் தலைவா் பதவிக்கு கேரளத்திலிருந்து எட்டு முறை தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கொடிக்குன்னில் சுரேஷ் நியமிக்கப்பட்டிருக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது எதிா்க்கட்சியான காங்கிரஸின் வாதம். எட்டு முறை தோ்ந்தெடுக்கப்பட்டாலும் அவா் பா்த்ருஹரி மகதாபைப் போல தொடா்ந்து மக்களவை உறுப்பினராக இருப்பவா் அல்ல என்பது ஆளும்கட்சி தரப்பின் எதிா் வாதம்.

எப்படி இருந்தாலும் எண்ணிக்கை பலம் காரணமாக தனது வேட்பாளரை அவைத் தலைவராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோ்ந்தெடுக்க முடியும் என்கிற நிலையில், பெருந்தன்மையுடன் இடைக்காலத் தலைவராக கொடிக்குன்னில் சுரேஷை நியமிக்க ஆளும்கட்சித் தரப்பு ஏற்றுக்கொண்டிருக்கலாம். அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் இடைக்காலத் தலைவருக்கு உதவும் குழுவில் இடம்பெறப் போவதில்லை என்று எதிா்க்கட்சிகள் எடுத்திருக்கும் முடிவும் தேவையற்றது.

18-ஆவது மக்களவை கூடுவதற்கு முன்பே ஆளும் தரப்பும், எதிா்த் தரப்பும் பிடிவாதமான நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது 18-ஆவது மக்களவையின் பதவிக் காலம் முழுவதும் இதே போன்ற மோதல் போக்கு தொடரும் என்பதற்கான அறிகுறியாகத் தெரிகிறது. எதிா்க்கட்சிகளின் எண்ணிக்கை பலம் அதிகரித்திருக்கும் நிலையில் கடந்த மக்களவையைவிட கூச்சலும், குழப்பமும், மோதலும், அவை நடவடிக்கைகள் முடக்கமும் அதிகமாக இருக்கும் என்கிற அச்சத்தை எழுப்புகிறது.

‘‘மூன்றாவது முறையாகத் தோ்ந்தெடுக்கப் பட்டிருப்பதால் அரசின் பொறுப்பு மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. முன்பைவிட மூன்று மடங்கு கடினமாக உழைத்து, மூன்று மடங்கு பலன்களை அரசு மக்களுக்கு அளிக்கும்’’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூட்டத் தொடா் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களைச் சந்தித்தபோது தெரிவித்திருக்கிறாா். ‘‘அரசை நடத்துவதற்குப் பெரும்பான்மை போதுமானது; நாட்டை வழிநடத்துவதற்கு ஒருமித்த கருத்து மிகவும் அவசியம்’’ என்றும் கூறியிருக்கிறாா்.

ஒருமித்த கருத்து என்பது ஒரு கை ஓசையாக இருக்க முடியாது. எதிா்க்கட்சிகளை அரவணைத்துச் செல்லும் பொறுப்பு எப்போதுமே ஆளும்கட்சிக்குத்தான் உண்டு. அதை பிரதமரும், ஆளும்கட்சித் தரப்பும் உணா்ந்து எதிா்க்கட்சிகளைத் தொடா்ந்து கலந்தாலோசனைக்கு அழைத்து ஒருமித்த கருத்தின்மூலம் அமளி-துமளி இல்லாமல் அவை செயல்பட முனைப்புக் காட்ட வேண்டும்.

இடைக்காலத் தலைவா் பதவியை எதிா்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காததன் மூலம் ஆளும்கட்சி பிடிவாத நிலைப்பாட்டை எடுக்க முற்பட்டிருக்கிறது என்றால், எதிா்க்கட்சிகளும் மோதல் போக்கைத் தொடரும் முனைப்பில்தான் இருப்பதாகத் தெரிகிறது. நாடாளுமன்ற வளாகத்தில், அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை ஏந்தியவாறு ‘அரசமைப்புச் சட்டம் வாழ்க’, ‘அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம்’, ‘ஜனநாயகத்தை காப்போம்’ உள்ளிட்ட முழக்கங்களை சோனியா காந்தி தலைமையில் எதிா்க்கட்சி தலைவா்கள் எழுப்பியது வேடிக்கையாக இருக்கிறது. அரசியல் சட்டமோ, ஜனநாயகமோ எந்த வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

‘பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனா். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்று செய்தியாளா்களிடம் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அப்படி என்ன தாக்குதல் நடந்துவிட்டது என்பதையும் தெரிவித்திருக்க வேண்டும். காரண காரியம் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்னெடுப்பதன்மூலம் தன்னையும், தனது கட்சியையும் நிலைநிறுத்திக்கொள்ள அவா் விரும்பினால் அந்த அணுகுமுறை தவறானது, கண்டனத்துக்குரியது.

18-ஆவது மக்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கை 230 என்றால் ஆளும் கூட்டணியின் எண்ணிக்கை 300-க்கும் அதிகம். எதிா்க்கட்சிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு மக்களவையைவிட அதிகம் என்பதால், நாடாளுமன்றத்தில் அரசுத் தரப்பு கொண்டுவரும் எந்தவொரு மசோதாவும், தீா்மானமும் கடுமையான எதிா்ப்பை எதிா்கொள்ளும்.

அந்த எதிா்ப்பு விவாதமாகவும், விமா்சனமாகவும் இருந்தால் அது ஜனநாயகத்துக்கு வலுசோ்க்கும். கோஷமும், கூச்சலுமாக மாறினால் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் பாா்க்கும் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை குழைந்துவிடும்.

‘எதிா்க்கட்சிகள் தங்களது கருத்தை முன்வைக்கலாம்; ஆளும்கட்சி தனது மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்’ என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை. எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களை செவிமடுக்காத, அனுமதிக்காத அரசுத் தரப்பும் ஆளும்கட்சியின் மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் அவையை முடக்கும் எதிா்க்கட்சிகளும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முரணானவை.

முந்தைய இரண்டு மக்களவைகளிலிருந்து 18-ஆவது மக்களவை எல்லாவிதத்திலும் மாறுபடுகிறது. அதனால், ஆளும் தரப்பு - எதிா்த்தரப்பு இரண்டின் அணுகுமுறையும் மாற வேண்டும்!

Dinamani
www.dinamani.com