
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, பண்ருட்டி பலா, முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிகுளம் சின்ன வெங்காயம், விருதுநகர் சம்பா வற்றல் மிளகாய், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி ஆகியவற்றுக்கு அண்மையில் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டதன் மூலம் தமிழகத்துக்கு மேலும் பெருமை கிடைத்திருக்கிறது. இந்திய அளவில் 79 புவிசார் குறியீடுகளைப் பெற்று உத்தர பிரதேசம் முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக 69 புவிசார் குறியீடுகளைப் பெற்று தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
மத்திய அரசின் தொழில், வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு சட்டம் (பதிவு, பாதுகாப்பு) 1999-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. தேசிய அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் உற்பத்தியாகும் சிறப்புமிக்க பொருள்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதுதான் புவிசார் குறியீடு சட்டத்தின் நோக்கம்.
உணவு, வேளாண் பொருள்கள், கைவினை, கைத்தறி மற்றும் இயற்கைப் பொருள்கள் என ஐந்து வகை உற்பத்திப் பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறலாம். வட்டார அளவில் தனித்துவம் பெற்ற பொருள்களை உலக அளவில் சந்தைப்படுத்த புவிசார் குறியீடு உதவுகிறது. அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் வரும் டிரேட் மார்க், காப்புரிமை ஆகிய இரண்டும் தனிநபர்களுக்கான உரிமையை நிர்ணயிக்கின்றன. இதில் புவிசார் குறியீடு மட்டுமே அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பொதுவான உரிமையாக விளங்குகிறது.
தமிழகத்தின் தனித்துவமான பொருள்களுக்கு இந்தப் புவிசார் குறியீட்டைப் பெற்றுத் தருவதில் தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புவிசார் குறியீட்டுக்காக விண்ணப்பிக்கும்போது, அந்தப் பொருளின் விவரக் குறிப்பு, அதன் சிறப்புத் தன்மை, வேளாண் பொருளாக இருந்தால் அது உற்பத்தியாகும் காலநிலை, கைவினைப் பொருளாக இருந்தால் அதை உருவாக்குபவரின் திறன் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அதன் தொன்மையை விளக்கும் வகையில் இலக்கியங்களில் அது குறித்த குறிப்புகள் இருந்தால் அதுவும் எடுத்துரைக்கப்படுகிறது.
மத்திய அரசு அமைக்கும் குழுவிடம், ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை, பொருள்களின் சிறப்புகளை விளக்க வேண்டும். அந்தக் குழு பொதுமக்களிடம் கருத்தறிந்து புவிசார் குறியீடு தொடர்பான அறிவிப்பை வெளியிடும். இத்தனை படிநிலைகளைக் கடந்து பெறப்படும் இந்த அங்கீகாரம் கிராமப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். தேசிய அளவில் பிரபலமாகும்போது, அதன் விற்பனை அதிகரிக்கும். இதனால், அந்தக் கிராமத்தில் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் வழிவகுக்கிறது.
பொருள்களின் புவிசார் குறியீட்டுக்கு அந்த ஊரின் பெயரை முன்னிலைப்படுத்தியே விண்ணப்பித்து அங்கீகாரம் பெறுவதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கைவினைக் கலைஞர்களே உற்பத்தி, ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். எடுத்துக்காட்டாக, மலைப் பகுதியில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டாலும், கும்பகோணம் வெற்றிலை என்றுகூறி சந்தைப்படுத்த முடியாது. இதனால், கும்பகோணம் வெற்றிலையின் தனித்தன்மை பாதுகாக்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்.4-ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது, தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற வினாவை சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் க.அசோகன் எழுப்பியபோது, பதிலளித்த மாநில குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், "ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டுமெனில், அந்தப் பொருள் குறிப்பிட்ட பகுதியில் தோன்றியிருக்க வேண்டும். அதற்கான வரலாற்றுச் சான்றும் இருப்பது அவசியம். சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி தோன்றியதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. அவை கிடைக்கப் பெறும்பட்சத்தில் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.
புவிசார் குறியீடு பெற்ற பொருள்களைப் பதிவு செய்து 10 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம். அதன்பிறகு புதுப்பித்துக் கொள்ளலாம். இந்திய அளவில் 2004-ஆம் ஆண்டு டார்ஜீலிங் தேயிலை வகையே முதல் புவிசார் குறியீடு பெற்ற பொருளாகும். தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டுச் சேலை அந்தப் பெருமையைக் கொண்டுள்ளது. சட்டபூர்வ பாதுகாப்பு, அங்கீகாரம் இல்லாமல் மற்றவர்கள் அந்தப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது, தரம் குறையாத தயாரிப்புடன் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதால் புவிசார் குறியீடு பெறுவது அவசியமாகிறது.
புவிசார் குறியீடு பெறுவது, பொருள்களுக்கு நல்ல விலையைப் பெற வாய்ப்பாகிறது. வேளாண் உற்பத்தி சார்ந்த பொருளாக இருந்தால் இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. பாரம்பரியம், அதன் நிபுணத்துவம் பாதுகாக்கப்படுவதுடன், சுற்றுலா மேம்பாட்டுக்கும் புவிசார் குறியீடு உதவுகிறது.
புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்று அதைப் பாதுகாக்க உலகளாவிய அமைப்புகள் உள்ள நிலையில், இந்திய அளவில் பாரம்பரியமிக்க பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவது என்பது அவற்றுக்கான தனித்துவத்தைப் பாதுகாக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.