இதுவும் கடந்து போகும்...

இந்தியா மீது அமெரிக்கா அறிவித்துள்ள வரி விதிப்பு குறித்து....
இதுவும் கடந்து போகும்...
Published on
Updated on
2 min read

அதிர்ச்சி வைத்தியம் அளிப்பது என்பது அதிபர் டிரம்ப்பின் ராஜதந்திர அணுகுமுறையாக மாறியிருக்கிறது. உலக நாடுகளை எல்லாம் இறக்குமதி வரி விதிப்பின் மூலம் அச்சுறுத்தி அமெரிக்காவில் தனது வாக்குவங்கியை திருப்திப்படுத்தும் அவரது அணுகுமுறைக்கு இந்தியா பலியாகி இருக்கிறது. "புலி வருகிறது, புலி வருகிறது' என்பதுபோல அச்சத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் நிஜமாகவே வந்து விட்டது.

அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின்னர், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிப்பை அறிவித்தார். பின்னர், அந்த வரி விதிப்பை 90 நாள்களுக்கு, அதாவது ஜூலை 9-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தினார். மேலும், இந்தியா உள்பட பல்வேறு நாடுளுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சு மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், இந்த நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை நிறுத்தி வைக்கும் காலத்தை ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும்; இந்தியாவுடன் மிகப் பெரிய அளவில் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளதால் வரியுடன் அபராதமும் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, அதனால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்த விவாதங்கள் எழுந்திருக்கின்றன. வரி விதிப்பு அறிவிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், ஏற்கெனவே சரிந்து போயுள்ள இந்திய, ரஷிய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் எனவும், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஒருநாள் ஏற்படும் எனவும் டிரம்ப் கருத்து தெரிவித்திருக்கிறார்.

டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய தொழில், வர்த்தகத் துறையில் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த அனைத்துப் பிரிவினரின் நலனைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அந்த வகையில், தேசத்தின் நலனைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் எனவும் நாடாளுமன்றத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியளித்திருக்கிறார்.

ரஷியா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மீறி ரஷியாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய்கொள்முதல் செய்துவருவதும், இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் நீடிப்பதும்தான் டிரம்ப்பின் இந்தத் திடீர் சீற்றத்துக்குக் காரணம்.

இந்தியா- அமெரிக்கா இடையே இதுவரை ஐந்து சுற்று பேச்சுகள் நடைபெற்றுள்ளன. வேளாண் மற்றும் பால் பொருள்கள் மீது வரிச் சலுகையை அமெரிக்கா தொடர்ந்து கோரி வருகிறது. ஆனால், அதை அளிக்க முடியாத இந்தியாவின் கடினமான சூழலையும், எந்த நாட்டுக்கும் இதில் வரிச் சலுகை அளிக்கப்படாததையும் இந்தியக் குழு எடுத்துரைத்ததைத் தொடர்ந்து,பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் தொடர்கிறது. இந்திய விவசாயிகளின் நலன் கருதி வேளாண் பொருள்களை தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா நீண்ட காலமாகவே நீக்கி வைத்திருக்கிறது.

வேளாண் பொருள்கள், பால் பொருள்கள், மரபணு மாற்ற உற்பத்திப் பொருள்களுக்கு வரிவிலக்கு இல்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அமெரிக்காவின் அத்தகைய பொருள்களுக்கு வரியைக் குறைத்து அதை இந்தியச் சந்தையில் அனுமதித்தால், வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்கு அது பேராபத்தை ஏற்படுத்தும் என்பது இந்தியாவின் கவலை. அதனால், அதுதொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இந்தியா விட்டுக்கொடுக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது அமெரிக்கா விதித்துள்ள 25% வரியால் வேளாண்மை, எரிசக்தி, ஜவுளி, மின்னணுப் பொருள்கள், ரத்தினங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. மருந்துப் பொருள்கள், மின்னணுப் பொருள்கள் உள்ளிட்ட இந்தியாவின் ஏற்றுமதிப் பொருள்கள் அமெரிக்காவின் வரிவிலக்கு பிரிவில் (பிரிவு 232) ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன. அதனால், அவை இந்த 25% வரிவிதிப்பின் கீழ் வராது.

2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 131.8 பில்லியன் டாலர். அதில் ஏற்றுமதி 86.5 பில்லியன் டாலர், இறக்குமதி 45.3 பில்லியன் டாலர். பிரிவு 232-இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள வரிவிலக்குகளின்படி இந்தியாவின் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியே 25% வரி விதிப்பால் பாதிப்பை எதிர்கொள்ளும் எனவும் தெரியவந்துள்ளது.

இந்தியா ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தடையற்ற வர்த்தக அமைப்பு (இஎஃப்டிஏ) நாடுகள் ஆகியவற்றுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்காவின் 25% வரிவிதிப்பை எதிர்கொள்ள பிற நாடுகளுடனான வர்த்தகத் தொடர்பை இந்தியா வலுப்படுத்தி ஆகவேண்டும். அமெரிக்காவுடனான அடுத்த சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முனைப்பு காட்டி சில சமரசங்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com