
டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமான பின்னர், ஐந்து நாள்கள் விளையாடப்படும் டெஸ்ட் ஆட்டங்கள் சலிப்பு தட்டி ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தையும் ஆர்வத்தையும் இழந்து வருகின்றன என்ற வாதத்தை முறியடித்திருக்கிறது கடந்த திங்கள்கிழமை (ஆக. 4) முடிவடைந்த இந்தியா - இங்கிலாந்து தொடர்.
டெஸ்ட் போட்டி நடைபெறும் நாட்டுக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைக்கப்படுவதால், பல டெஸ்டுகள் மூன்று அல்லது நான்கு நாள்களுக்கும் குறைவாகவே நடைபெற்று வந்த நிலையில்,
இந்தத் தொடரின் ஐந்து ஆட்டங்களும் ஐந்தாவது நாள் வரை சென்றது மட்டுமல்லாமல் ஒவ்வொரு டெஸ்டும் கடைசி நாளில் ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரித்து இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்றது என்றால் மிகையில்லை.
விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய ஜாம்பவான்கள் ஒரே நேரத்தில் டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இளம் இந்திய அணி இங்கிலாந்தில் பெரிய அளவில் சாதிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
மறுபுறம், கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து "பாஸ் பால்' என்ற உத்தியைக் கையாண்டு டெஸ்ட் ஆட்டங்களிலும்
20 ஓவர்கள் ஆட்டம்போன்று அதிரடியாக விளையாடி வெற்றி மேல் வெற்றியைக் குவித்து வருகிறது. அதற்கு ஏற்ப, லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 371 என்ற இலக்கை எளிதாக விரட்டி இங்கிலாந்து வென்றது.ஆனால், மனம் தளராத இந்திய அணி மீண்டெழுந்தது.
அதுவரை எட்டு முறை களம் கண்டு வெற்றியே பெறாத பர்மிங்ஹாமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. பந்துவீச்சில் பும்ராவையே பெரிதும் நம்பி இருந்த நிலையில், அவர் இல்லாதபோதும் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் அபாரமாகப் பந்துவீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
இரு அணிகளும் தலா ஒரு வெற்றி என்ற நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் நடைபெற்றது. இதில் படுதோல்வியைத் தழுவும் நிலையில் இருந்த இந்திய அணிக்கு கடைசிக் கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி, ஜஸ்
பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் பேட்டிங்கில் நங்கூரம் பாய்ச்சிய போதும் வெறும் 22 ரன்களில் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 669 ரன்கள் குவித்து அதிர்ச்சி அளித்தது. இப்போதும், ஷுப்மன் கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுத்து சதங்கள் விளாச இந்திய அணி டிரா செய்தது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்டில், முதல் டெஸ்ட் போலவே 374 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்துக்கு ஹாரி புரூக்கின் மின்னல் வேக சதமும், சாதனை மன்னன் ஜோ ரூட்டின் சதமும் இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.
புரூக் ஆட்டமிழந்ததும் ஆட்டத்தின் போக்கே மாறியது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் புயல்வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 35 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் 6 பேர் ஆட்டமிழந்தனர். தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணி 6 ரன்களில் நம்ப முடியாத வெற்றியை ஈட்டியது.
வெளிநாட்டில் கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. ஐந்து டெஸ்டுகளும் ஐந்து நாள்கள் விளையாடப்பட்டது கடந்த ஏழு ஆண்டுகளில் இதுவே முதல் முறை. கடந்த 25 ஆண்டுகளில் நான்காவது முறை.
இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சேதேஷ்வர் புஜாரா, விவிஎஸ்.லட்சுமண், விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஆட்டக்காரர்களே அந்நிய மண்ணில் தடுமாறியபோது, இளம் ஆட்டக்காரர்கள் பயமறியா ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கேப்டன் ஷுப்மன் கில் 754 ரன்கள் (5 டெஸ்டுகள்), கே.எல்.ராகுல் 532 ரன்கள் (5), ரவீந்திர ஜடேஜா (516), ரிஷப் பந்த் 479 ரன்கள் (4), யஷஸ்வி ஜெய்ஸ்வால் 411 ரன்கள் (5) ஆகியோர் அதிக ரன்கள் விளாசினர்.
முதுகுவலி காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா 3 டெஸ்டுகளே விளையாடிய நிலையில், சிராஜ் கடும் உழைப்பை நல்கினார் என்றே கூற வேண்டும். சில நேரங்களில் இங்கிலாந்து பேட்டர்கள் அதிரடி காட்டியபோதும், அசராமல் 185.3 ஓவர்கள் (1,113 பந்துகள்) வீசி 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்கு வகித்தார்.
முன்பெல்லாம், வெளிநாடுகளுக்குச் செல்லும் அணிகள் அந்த நாட்டின் காலநிலை, ஆட்டக்காரர்களின் உத்திகள் போன்றவற்றை அறிவதற்காக பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும். இரண்டு டெஸ்டுகளுக்கு இடையில் கூடுதல் நாள்கள் கிடைக்கும். ஆனால், டி20, ஐம்பது ஓவர் போட்டிகள் காரணமாக அதிக ஆட்டங்கள் விளையாடப்படுவதால் பயிற்சி ஆட்டங்கள், கூடுதல் நாள்களுக்கு வாய்ப்பு இல்லை என்றபோதும் இரு அணிகளின் ஆட்டக்காரர்களின் உடல் தகுதியும், அர்ப்பணிப்பு உணர்வும் மெச்சத்தகுந்ததாகவே இருந்தன.
ஜடேஜா ஓய்வு பெறும் கட்டத்தில் உள்ளார். மாற்று ஆட்டக்காரர்கள் உடனடியாக கண்டறியப்பட வேண்டும். அதேபோன்று, தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் என்று சொல்ல யாரும் இல்லை.
போராடி தொடரை சமன் செய்தபோதும் இந்திய அணியில் பலவீனங்கள் இல்லாமல் இல்லை. இந்தக் குறைகளை சரிசெய்தால் இன்னும் சில ஆண்டுகளுக்கு சர்வதேச அரங்கில் இந்திய அணி கோலோச்சும் நிலை தொடரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.