
இந்தியப் பொருளாதாரம் "முடங்கிவிட்ட பொருளாதாரம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்ணித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்று சர்வதேச நிதியமும் உலக வங்கியும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றன. சொல்லப்போனால், அமெரிக்காவின் வளர்ச்சிதான் தேக்கமடைந்துவிட்டது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்தும்கூட.
இந்தியா மீது முதலில் 25% , அதைத் தொடர்ந்து கூடுதலாக 25% இறக்குமதி வரிவிதித்து இந்தியாவையும் அமெரிக்காவின் முன்னால் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளைப்போல் மண்டியிட வைக்கவேண்டும் என்பது அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நோக்கமாகத் தெரிகிறது. இந்தியாவின் மீது அதிபர் டிரம்ப் காட்டும் வன்மத்துக்கு பின்னால் ரஷியாவின் மீதும் சீனாவின் மீதும் அமெரிக்காவுக்கு இருக்கும் பிரச்னைதான் காரணம்.
ரஷியாவை வழிக்குக் கொண்டுவந்து உக்ரைன் பிரச்னைக்குத் தீர்வு காணமுடிந்தால், அதன் மூலம் சமாதானத்துக்கான நோபல் விருதைப் பெறலாம் என்பது அமெரிக்க அதிபரின் கனவு. ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யாவிட்டால் ரஷியா, சமாதானத் திட்டத்துக்கு அடிபணியும் என்கிற டிரம்ப்பின் பேராசை. கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்கும் பைத்தியக்காரத்தனம்.
அதிபர் டிரம்ப் இந்தியாவைக் குறிவைத்து எடுத்திருக்கும் அதிரடி முடிவுகள் ரஷியாவுக்கு எதிரானது மட்டுமல்ல; சீனாவை எதிர்கொள்ள முடியாத கையறுநிலை காரணமாக எடுக்கப்படுபவை. அமெரிக்காவை ஆசைகாட்டி, தனது சதிவலையில் சீனா விழச் செய்கிறது என்பதை அண்மையில் வாஷிங்டனில் நடந்த "சோய்கான்நெக்ஸ்ட்' என்கிற கருத்தரங்கம் வெளிப்படுத்துகிறது. அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதி கவுன்சில் நடத்திய அந்தக் கருத்தரங்கத்தில், சீனாவால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு குறித்து விவாதிக்கப்பட்டது.
ஏறத்தாழ 15 ஆண்டு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 1997-இல் அமெரிக்காவிலிருந்து சீனா சோயா பீன்ஸ் இறக்குமதி செய்யத் தொடங்கியது. 2014-இல் 145 பில்லியன் டாலர் மதிப்புள்ள சோயா பீன்ஸ் அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதுதான் அதிகபட்ச ஏற்றுமதி. 2015 வரையில் சோயா பீன்ஸ், கோதுமை, சோளம் உள்ளிட்ட அமெரிக்க வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு சீனாதான் மிகப் பெரிய சந்தையாக இருந்து வந்தது. சீனாவும் அமெரிக்க இறக்குமதியை நம்பித்தான் இருந்தது. 2017-18-இல் அமெரிக்காவுடனான தனது முதல் வர்த்தக ஒப்பந்த முரண்பாட்டைத் தொடர்ந்து சீனா விழித்துக் கொண்டது. அதுவரையில் சோயா பீன்ஸ் ஏற்றுமதியில் 60% சீனா மட்டுமே இறக்குமதி செய்தது. சீனா அமெரிக்காவிலிருந்து சோயா இறக்குமதியைத் தவிர்த்தால் அதனால் அமெரிக்காவின் ஏற்றுமதி 45% பாதிப்பை எதிர்கொள்ளும்.
பிரேசிலின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் 2015-16-இல் 95.7 மில்லியன் டன்னாக இருந்த சோயா பீன்ஸ் உற்பத்தியை 176 மில்லியன் டன்னாக 2024-25-இல் உயர்த்தவும் சீனா உதவியது. இதைப் போலவே பல நாடுகளில் சோயா உற்பத்தியை ஊக்குவித்து அங்கிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யும் தந்திரத்தை சீனா முன்னெடுத்தபோது, அமெரிக்க விவசாயிகள் செய்வதறியாது திகைத்தார்கள். சோயா பீன்ஸ் உள்ளிட்ட வேளாண் பொருள்களுக்கு சீனா அல்லாத சந்தையைத் தேட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது அமெரிக்கா.
இன்னும் ஒரு மாதத்தில் அமெரிக்காவில் சோயா பீன்ஸ் சாகுபடி நடக்க இருக்கிறது. அக்டோபரில் கோதுமை, சோளம் சாகுபடிகள் காத்திருக்கின்றன. சோயா பீன்ஸுக்கு செய்ததுபோலவே சீனா கோதுமை, சோளம் உள்ளிட்ட அமெரிக்க வேளாண் பொருள்களைத் தவிர்க்க முற்படலாம் என்கிற அச்சத்தில் இருக்கிறார்கள் அந்த நாட்டின் விவசாயிகளும் வேளாண் பொருள்களின் ஏற்றுமதியாளர்களும்.
இந்தப் பின்னணியில்தான் அமெரிக்க வேளாண் பொருள்களின் ஏற்றுமதி குறித்த கவலையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இருக்கிறது. இந்தியா அமெரிக்காவிலிருந்து 1.8 லட்சம் டன் சோயா பீன் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இது வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும். கால்நடைத் தீவனத்துக்காக சோயா பிண்ணாக்கை அதிக அளவில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.
சீனாவைப்போல் அமெரிக்க வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த இந்தியா ஏற்றுக் கொள்வதில்லை என்பதுதான் அதிபர் டிரம்ப்பின் குற்றச்சாட்டு. இந்தியாவில் நடுத்தர விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்தவித ஒப்பந்தத்திலும் கையொப்பமிடத் தயாராக இல்லை என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் பிடிவாதத்தை அதிபர் டிரம்ப் எதிர்பார்க்கவில்லை. மரபணு மாற்றிய விதைகளை அனுமதிப்பதில்லை என்பதிலும் இந்திய அரசு உறுதியாக இருக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சி அதிபர் டிரம்ப்பின் 50% வரிவிதிப்பால் பின்னடைவைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் ரஷியா, சீனாவைப் போலவே புறந்தள்ள முடியாத பொருளாதார சக்தியாக இந்தியா வளர்ந்திருப்பதை அமெரிக்க அதிபர் மறந்து விடுகிறார்.
இந்திய ஏற்றுமதியில் கணிசமான பங்கு வகிக்கும் மென்பொருள் ஏற்றுமதியை அமெரிக்காவால் மட்டுமல்ல, வேறு எந்த நாடாலும் வரியை அதிகப்படுத்தி முடக்கிவிட முடியாது; அது அவர்களைத்தான் பாதிக்கும்.
இதற்கு முன்னால் இந்தியாவின் முக்கிய இறக்குமதியாளராக இருந்த சோவியத் யூனியன் சிதைந்தபோது நாம் பின்னடைவைச் சந்தித்தோம். சில ஆண்டுகளில் மீண்டெழுந்தோம். அதேபோல இதுவும் கடந்து போகும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.