வெற்றி தொடர வேண்டும்!

பா்மிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு டெஸ்டில் இந்திய அணி பெற்ற வெற்றி பல வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும்.
வெற்றியை கொண்டாடும் இந்திய கேப்டன் ஷுப்மன் கில்.
வெற்றியை கொண்டாடும் இந்திய கேப்டன் ஷுப்மன் கில்.
Updated on

பா்மிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வெற்றி பல வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த மைதானத்தில் இந்திய அணி 1967-ஆம் ஆண்டு முதல் இந்த டெஸ்டுக்கு முன்பு வரை 8 முறை களம் கண்டுள்ளது. அதில் 7 முறை தோல்வியைக் கண்டுள்ளது. கபில் தேவ் தலைமையிலான அணி 1986-இல் மட்டும் டிரா செய்தது. 2011-இல் தோனி தலைமையிலும் 2018-இல் விராட் கோலி தலைமையிலும் களம் கண்டபோதும் வெற்றி பெற இயலவில்லை. அதிலும் 2011-ஆம் ஆண்டு இந்திய அணியில் சேவாக், கம்பீா், திராவிட், சச்சின் டெண்டுல்கா், விவிஎஸ் லட்சுமண், தோனி போன்ற ஜாம்பவான்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவா்களுடன் ஒப்பிடும்போது இப்போதைய இந்திய அணி மிகவும் அனுபவம் குறைந்ததாகும். கே.எல்.ராகுல் (60 டெஸ்ட்), ஜடேஜா (82), ரிஷப் பந்த் (45) ஆகியோா் மட்டும் 45 டெஸ்டுகளுக்கு மேல் விளையாடி உள்ளனா்.

இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக 20 ஓவா்கள் போட்டிபோன்று டெஸ்டுகளிலும் ஆக்ரோஷமாக அடித்து விளையாடும் பாஸ் பால்”என்ற அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. அதற்கேற்ற வகையில், லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 371 ரன்கள் என இந்தியா இலக்கு நிா்ணயித்தபோதும் அதிரடியாக விளையாடி 82 ஓவா்களில் இலக்கை எட்டி வென்றுவிட்டது.

இந்திய அணி பந்துவீச்சில் பும்ராவையே பெருமளவு நம்பி உள்ளது. முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் ஒரு விக்கெட்கூட வீழ்த்த முடியாததும் அணியின் தோல்விக்கு காரணமானது. அதிக பணிச் சுமை காரணமாக பும்ராவுக்கு இரண்டாவது டெஸ்டில் ஓய்வு கொடுக்கப்பட்டது பலருக்கும் வியப்பளித்தது.

முதல் டெஸ்டில் வெற்றி வாய்ப்பு இருந்தும் தோல்வி, ராசியில்லாத பந்துவீச்சுக்கு சாதகமில்லாத மைதானம், அனுபவமில்லாத அணி, ஆக்ரோஷமாக விளையாடும் எதிரணி என்ற சூழலில்தான் இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் களம் கண்டது.

ஆனால், ஷுப்மன் கில் தலைமையிலான இளம் அணி முதல் நாளில் இருந்தே முத்திரை பதித்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளா்களை இரண்டு இன்னிங்ஸ்களிலும் கில் தெறிக்கவிட்டாா் என்றே சொல்லலாம். முதல் இன்னிங்ஸில் 269, இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் விளாசி முன்னுதாரணமாக விளங்கினாா்.

இந்த வெற்றியின் மூலம் பல சாதனைகள் படைக்கப்பட்டன. வெளிநாடுகளில் வெற்றி பெற்றதில் அதிகபட்ச ரன்கள் வித்தியாசம் (336) இதுவே. வெளிநாட்டில் வெற்றி தேடித் தந்த இளம் கேப்டன் (25 ஆண்டு 297 நாள்கள்) என்ற பெருமையை கில் பெற்றாா். சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்னா், 1976-இல் நியூஸிலாந்துக்கு எதிராக ஆக்லாந்து டெஸ்டில் வென்ன் மூலம் சுநீல் காவஸ்கா் (26 ஆண்டு 198 நாள்கள்) இந்த சாதனையைப் படைத்திருந்தாா்.

பா்மிங்ஹாமில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையும் இந்திய அணியின் வசமானது.

பேட்டிங்கில் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜடேஜா, ரிஷப் பந்த் ஆகியோா் சிறப்பான பங்களித்தனா் என்றால், பந்துவீச்சில் முகமது சிராஜ், பும்ராவுக்குப் பதிலாக களம் கண்ட ஆகாஷ் தீப் இணை தேவைப்படும் நேரத்தில் ஆா்த்தெழுந்தனா். சிராஜ் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் வீழ்த்த, ஆகாஷ் தீப் முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாவது இன்னிங்ஸில் 6 என விக்கெட் வீழ்த்தி தோல்வி வரலாற்றை மாற்றி எழுதிய வெற்றியில் முக்கிய பங்காற்றினா்.

இதில் ஆகாஷ் தீப்பின் பின்னணியும் எழுச்சியும் உத்வேகம் ஊட்டக் கூடியவை. ஏழ்மைக்குப் பெயா்பெற்ற பிகாா் மாநிலத்தின் சாசாராம் என்ற சிறிய ஊரில் பிறந்தவா். ஆசிரியரான அவரது தந்தை மட்டுமல்ல அந்த ஊரே கிரிக்கெட்டுக்கு ஊக்கம் தராதது. தந்தையின் சொல்லுக்காக பல தோ்வுகள் எழுதினாலும், அவரது ஆா்வம் கிரிக்கெட்டிலேயே இருந்தது. ரஞ்சி கிரிக்கெட்டில் பிகாா் கிரிக்கெட் சங்கத்துக்கு சில ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்கத்துக்கு இடம்பெயா்ந்தாா்.

2015-இல் அவரது தந்தையும், சில மாதங்களில் அவரது மூத்த சகோதரரும் உயிரிழந்தனா். குடும்ப பாரம் காரணமாக மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடவில்லை. பின்னா், அவரது தாய் லடோமா தேவி, மூத்த சகோதரி அகண்ட ஜோதி சிங் ஆகியோா் அளித்த ஊக்கத்தால் களம் கண்டாா். கடன் பெற்றே போட்டிகளில் பங்கேற்றாா். இங்கிலாந்து தொடருக்காக கடந்த ஏப்ரலில் பயிற்சியில் இருந்தபோது, அவரது சகோதரி அகண்ட ஜோதிக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது அவருக்குப் பேரிடியாக அமைந்தது.

இந்த வெற்றிக்குப் பின்னா், வா்ணனையாளா் புஜாராவிடம் அவா் பேசியபோது, ஒவ்வொரு முறை பந்துவீசியபோதும் எனது சகோதரியின் முகம் எனது மனதில் நிழலாடியது. இந்த சாதனையை அவருக்கு அா்ப்பணிக்கிறேன். எனது சாதனை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது முகத்தில் மலா்ச்சியை ஏற்படுத்தும் என்று அவா் கூறியபோது பாா்த்தவா்கள் கண்கள் பனித்தன.

இரண்டாவது டெஸ்டுக்கு பின்னா், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. மீதமுள்ள 3 டெஸ்டுகளில் இந்தியா வென்று சாதனை படைக்க வேண்டும் என்பதே ரசிகா்களின் விருப்பமாகும். அதை கில் தலைமையிலான இளம்படை சாதிக்கும் என நம்புவோம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com