தீர்வு, நிரந்தரப் போர் நிறுத்தம்!

இஸ்ரேல் - காஸா இடையிலான போர் நிறுத்தம் குறித்து...
தீர்வு, நிரந்தரப் போர் நிறுத்தம்!
Published on
Updated on
2 min read

இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுகளால் பறிபோய் வந்த காஸா மக்களின் உயிர், இப்போது பசி, பட்டினியால் பறிபோய்க் கொண்டிருக்கிறது. 21 மாதங்களாக இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் ஹமாஸ் படையினருக்கும் நடந்துவரும் போரில் 59,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால், இதுவரை பட்டினியால் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களில் 80 பேர் குழந்தைகள் என்பது துயரத்திலும் பெரும் துயரம்.

இஸ்ரேல்}ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியதிலிருந்தே காஸாவின் 21 லட்சம் மக்களுமே நீண்டகால உணவுப் பற்றாக்

குறையை எதிர்கொண்டிருக்கின்றனர். இவர்களில் 5 லட்சம் பேர் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு, பட்டினி, நோய் போன்ற பேரழிவு சூழ்நிலையில் உள்ளனர். இது உலகின் மிக மோசமான பசி நெருக்கடிகளில் ஒன்றாகும் எனக் கவலை தெரிவிக்கிறது உலக சுகாதார அமைப்பு.

"பஞ்சம்' என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் அந்தச் சூழ்நிலையை எப்போதோ எட்டிவிட்டது காஸா. காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் கிட்டத்தட்ட அனைத்துக் குடியிருப்புகளுமே பொதுமக்கள் வாழத் தகுதியில்லாத நிலைக்குச் சென்றுவிட்ட நிலையில், பெரும்பாலானவர்கள் முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள குடிசைகளில்தான் வசித்து வருகின்றனர். அங்கே ஒருவேளை உணவு, தண்ணீர்கூட கிடைக்காமல் உயிரிழப்புகள் தொடர்வது வேதனையளிப்பதாக உள்ளது.

காஸாவுக்கு உள்ளேயும் வெளியேயும் டன் கணக்கில் நிவாரணப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தும் அவற்றை விநியோகிக்கவிடாமல் இஸ்ரேல் ராணுவம் தடுப்பதாக டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ், சேவ் தி சில்ட்ரன், ஆக்ஸ்ஃபாம் உள்ளிட்ட அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

காஸாவில் ஐ.நா. தலைமையிலான நிவாரணப் பொருள் விநியோக மையங்கள் மூலம்தான் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன. ஆனால், அந்த மையங்களை மூடிவிட்டு காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஎச்எஃப்) அமைப்பு மூலம் உணவுப் பொருள் விநியோகத்தை கடந்த மே மாத இறுதியில் இஸ்ரேல் தொடங்கியது. ஆனால், 20 லட்சம் மக்களுக்கு உணவுப் பொருள் விநியோகிக்க இந்த மையங்கள் போதுமானதாக இல்லை.

இந்த மையங்களில்தான் உணவுப் பொருள்களைப் பெறக் காத்திருந்த 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உணவுப் பொருள் பெறுவதற்காகக் காத்திருக்கும் மக்களை ஹமாஸ் படையினர்தான் சுட்டுக் கொல்வதாக இஸ்ரேல் கூறிவருகிறது. காஸாவுக்குள் போதிய அளவு உணவுப் பொருள்கள் அனுமதிக்கப்படுவதாகவும், அவற்றை ஹமாஸ் அமைப்பினர் திருடி அதிக விலையில் விற்பதாகவும் இஸ்ரேல் கூறும் குற்றச்சாட்டுகளை எந்த அளவு நம்புவது எனத் தெரியவில்லை.

தங்களுடைய போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு ஹமாûஸ இணங்க வைப்பதற்காக இஸ்ரேல் இவ்வாறு நடந்துகொள்வதாக இருந்தால், அப்பாவி பொதுமக்கள், குழந்தைகளின் உயிருடன் விளையாடுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காஸாவில் இஸ்ரேல் அரசின் உணவுப் பொருள் விநியோக முறை ஆபத்தானது என்று பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட

24 நாடுகள் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளன. உணவுப் பொருள் விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் அரசு உடனடியாக நீக்க வேண்டும்; ஐ.நா. மற்றும் பிற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்கள் நிவாரணப் பணிகளைப் பாதுகாப்பாக செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற அந்த நாடுகளின் வலியுறுத்தலை இஸ்ரேல் இதுவரை காது கொடுத்துக் கேட்கவில்லை.

காஸாவில் 60 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல் திட்டத்தை இஸ்ரேலிடம் அமெரிக்கா கடந்த ஜூன் தொடக்கத்தில் அளித்தது. அந்தத் திட்டத்தில், இரு தரப்பினரும் சண்டையை 60 நாள்களுக்கு முழுமையாக நிறுத்திவைத்தல், தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 10 பேரை ஹமாஸ் அமைப்பு இரண்டு கட்டங்களாக விடுவித்தல், உயிரிழந்த 18 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தல், இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,000}க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் செயல் திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டாலும் ஹமாஸ் ஏற்கவில்லை. இந்தத் திட்டம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாக ஹமாஸ் விமர்சித்தது. போரை முடிவுக்குக் கொண்டுவருதல், காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினரை முழுமையாக வெளியேற்றுதல், காஸாவுக்குள் போதிய அளவு நிவாரணப் பொருள்களை அனுமதித்தல் போன்ற தங்களின் அடிப்படை கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் போர் நிறுத்த முன்னெடுப்பில் முட்டுக்கட்டை தொடர்ந்தது.

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவின் போர் நிறுத்த செயல் திட்டம் தொடர்பாக மத்தியஸ்தர்களிடம் ஹமாஸ் வியாழக்கிழமை (ஜூலை 24) தெரிவித்துள்ள தகவல் திருப்தியாக இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃபின் தொடர் முயற்சிகளுக்குப் பின்னரும் இந்தப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.

காஸாவின் துயரத்துக்கு நிரந்தரப் போர் நிறுத்தம்தான் தீர்வாக இருக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com