
உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கையும், நல்ல நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெறுவது கடும் போட்டி நிறைந்ததாக மாறியுள்ளது. அது மாணவர்கள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. போட்டி நிறைந்த உலகில் தங்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்கிற தன்னம்பிக்கையின்மை காரணமாக மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும் விபரீத முடிவை எடுக்கின்றனர்.
கடந்த மே 4}ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில், சுமார் ஒரு லட்சம் மருத்துவ இடங்களுக்கு 22 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்றது. வெறும் 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 11.48 லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
கடந்த மார்ச்சில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த மாணவி தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் கடந்த மே 7-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அடுத்த நாள் வெளியான தேர்வு முடிவுகளில் 600-க்கு 413 மதிப்பெண்கள் எடுத்து அந்த மாணவி தேர்ச்சி பெற்றிருந்தார். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் (502) பெற்றிருந்தும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதோ என்ற அச்சத்தில் காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி கடந்த சனிக்கிழமை (ஜூலை 26) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 1,70,924 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 7.6 சதவீதம் பேர் மாணவர்கள். தேர்வில் தோல்வி அடைந்த காரணத்துக்காகவே 2,248 மாணவ, மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் சராசரியாக 34 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரம் "இந்தியாவின் பயிற்சித் தலைநகரம்' என்று கூறுமளவுக்கு 300-க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இங்குள்ள பயிற்சி மையங்களில் சேர்கின்றனர். அங்கு கடந்த 2023-இல் 26 மாணவர்களும், 2024-இல் 17 மாணவர்களும், 2025 ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் 14 மாணவர்களும் விபரீத முடிவுக்கு இரையாகி உள்ளனர்.
தமிழகத்திலும் இதுபோன்ற பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. அவை பல லட்சம் ரூபாய் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு உயர் கல்விக்குப் பயிற்சி அளிக்கின்றன. இதுபோன்ற பள்ளி அல்லது பயிற்சி மையங்களில் பெற்றோரின் நிர்ப்பந்தத்தால் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பெற்றோர்கள் பலரும் லட்சக்கணக்கில் கடன் வாங்கியே பிள்ளைகளை அவற்றில் சேர்க்கின்றனர்.
தாழ்வு மனப்பான்மை, பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பு, பயிற்சி மையங்களில் தரப்படும் அழுத்தம், குடும்பத்தில் இருந்து பிரிந்து இருப்பதால் ஏற்படும் ஏக்கம், பாலியல் ரீதியான துன்புறுத்தல், பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப படிக்க முடியாதது, சக மாணவர்களுடனான ஒப்பீடு, கேளிக்கை அல்லது விளையாட்டு என மனஅழுத்தத்தைக் குறைக்கும் கவனத் திருப்பம் இல்லாமை போன்ற காரணங்களால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சூழலை பயிற்சி மையங்களில் சேரும் மாணவர்கள் மட்டுமல்ல, வீட்டிலேயே இருந்து படிக்கும் மாணவர்களும் எதிர்கொள்கின்றனர்.
தற்கொலை என்பது சமூக, பொருளாதார, சூழலின் அளவுகோல் ஆகும். தற்கொலைகள் அதிகரிப்பது சமூகத்துக்கு இழுக்கு. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் துணைத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 10 மற்றும் 12}ஆம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது ஓரளவு குறைந்துள்ளது. தேசிய தற்கொலை தடுப்பு உத்தியை மத்திய அரசு கடந்த 2022 நவம்பர் 21-இல் அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில், விசாகப்பட்டினத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவரின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவர்களின் தற்கொலைகள், அவர்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க 15 நெறிமுறைகளை கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வெளியிட்டுள்ளது.
"திறன் மிகுந்த மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும், கல்வித் திறன் அடிப்படையில் மாணவர்களைக் குழுக்களாகப் பிரிக்கக் கூடாது, பாலியல் சீண்டல், ராகிங், ஜாதி, மத ரீதியில் பாகுபாட்டைத் தடுக்க வேண்டும், மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பவை அந்த 15 நெறிமுறைகளில் அடங்கும்.
இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது ஒருபுறம் இருக்க, போட்டிகள் நிறைந்த உலகில் குழந்தைகள் மீதான அழுத்தத்தை பெற்றோர்களும் கல்வி நிலையங்களும் குறைக்க முற்பட வேண்டும். மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஆக்கபூர்வ சிந்தனையும் ஏற்பட வழிகோல வேண்டும். தாழ்வு மனப்பான்மைதான் தற்கொலைக்கு வழிகோலுகிறது. அதை அகற்றுவதுதான் இந்தப் பிரச்னைக்கான தீர்வு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.