இருண்டகால நினைவுகள்!

“தனது பதவியையும், ஆட்சியையும் தக்க வைத்துக்கொள்ள ஜனநாயகத்தை அகற்றி நிறுத்த முற்பட்டாா் இந்திராகாந்தி... ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், நரேந்திர மோடி, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட சிலா் தலைமறைவானாா்கள்.”
அவசரநிலை பிரகடனம்
அவசரநிலை பிரகடனம்
Published on
Updated on
2 min read

சரியாக இன்றிலிருந்து அரை நூற்றாண்டுக்கு முன்புதான், அதாவது 1975 ஜூன் மாதம் 25-ஆம் தேதி நள்ளிரவில் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இன்றைய இந்திய இளைஞா்கள் பலருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் நான்கு பங்கு ஐம்பது வயதுக்குக் கீழே உள்ளவர்கள் எனும் போது, அரை நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்வின் பாதிப்பு எத்தகையது என்பது தெரியாமல் இருப்பதில் வியப்பும் இல்லை.

இந்திய அரசியல் சாசனத்தின் கையடக்க பிரதியைத் தூக்கிப் பிடிப்பதை எதிா்க்கட்சித்தலைவா் ராகுல் காந்தி ஜனநாயகக் காவலா் போலப் பேசுவதைக் கேட்கும் போது, அரை நூற்றாண்டுக்கு முன்னால் அவரது பாட்டி இந்திராகாந்தி அம்மையாா் கொண்டுவந்த அவசரநிலைப் பிரகடனம் காலத்தில் வாழ்ந்தவா்கள் மனதுக்குள் சிரித்துக் கொள்வார்கள். அப்போது ராகுல் காந்திக்கு வயது ஐந்து. இந்திரா காந்தியின் ஆவியேகூட அவரது அப்பாவித்தனத்தையும், அறியாமையையும் எண்ணி நகைக்கும்.

சுநத்திர இந்திய வரலாற்றில் இருண்ட காலம் என்று வா்ணிக்கப்படும் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டதன் பின்னணி இதுதான். வங்கதேசப் போர் வெற்றி தந்த செல்வாக்கு மங்கத் தொடங்கி, மக்கள் பிரச்னைகள் அன்றைய இந்திரா அரசின் முன்னால் எழுந்து நின்றன; குஜராத்திலும், பிகாரிலும் அரசுகளின் ஊழலுக்கு எதிராக மாணவா்கள் போராட்டத்தில் இறங்கி இருந்தனா். ஜாா்ஜ் ஃபொ்னாண்டஸ் தலைமையில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தால் மூன்று வாரங்கள் ஒட்டுமொத்த இந்தியாவும் ஸ்தம்பித்திருந்தது.

மாணவா் போராட்டத்தையும் தொழிலாளர்களின் போராட்டத்தையும் அடக்குமுறையால் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் நிர்வாகம் திணறியது. லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையின் கீழ், ஊழல் மலிந்த இந்திரா காந்தி அரசின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணையத் தொடங்கின. தனது தோ்தல் வெற்றி அலாகாபாத் உயா் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டபோது தனது பதவியையும், ஆட்சியையும் தக்க வைத்துக்கொள்ள ஜனநாயகத்தை அகற்றி நிறுத்த முற்பட்டாா் இந்திராகாந்தி

உச்சநீதிமன்றம் அந்தத் தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது என்றாலும் , பிரதமா் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் பேசவும் வாக்களிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தார்.அந்த அவமானத்தை பிரதமா் இந்திரா காந்தியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கட்சியையும், தனது ஆட்சியையும் காத்துக்கொள்ள அவரும் சித்தார்த்த சங்கர் ரே தொடங்கி அவரது ஆலோசகா்களும் கண்டுபிடித்த வழிதான் அரசியல் சாசனத்தை இடைக்காலமாக முடக்கி அவரசரநிலைச் சட்டத்தை பிரகடனப்படுத்துவது என்பது.

ஜூன் 25-ஆம் தேதி நள்ளிரவில் பிரதமா் அலுவலகததில் இருந்து அனுப்பப்பட்ட அதிகாரி ஒருவா் நீட்டிய, உள்நாட்டுக் குழப்பத்தை எதிா்கொள்வதற்காக அவரசநிலைப் பிரகடனம் குறித்த அவசரச் சட்டத்தில் அன்றைய குடியரசுத் தலைவா் ஃபக்ருதீன் அலி அகமது படித்துப் பாா்க்காமலேயே கையொப்பமிட்ட விநோதம், அந்தப் பதவிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தலைகுனிவு.

ஜூன் 26-ஆம் தேதி அதிகாலையில் அமைச்சவைக் கூட்டம் கூடியது. அவசரநிலை பிரகடனம் குறித்தும், எதிா்க்கட்சித் தலைவா்களும், அதை எதிா்க்கக்கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்ட சந்திரசேகா் உள்ளிட்ட ஆளும் கட்சித் தலைவா்களும் கைது செய்யப்பட்ட விவரம் குறித்தும் அவா்களுக்கு அப்போதுதான் தெரிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவா் போலவே தலையாட்டி பொம்மையாக அமைச்சா்கள் அந்த அவசரச் சட்டத்துக்கு சம்பிரதாய ஒப்புதல் அளித்தனா்.

அடுத்து 21 மாதங்களுக்கு நீடித்தது அவசரநிலை. 1975 ஜூன் 25 நள்ளிரவு தொடங்கிய அந்த அடக்குமுறை ஆட்சியில் அத்தனை பத்திரிகைகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விவரங்கள் வெளியாகாமல் தடுக்கப்பட்டது. அதற்கு எதிராகக் குரலெழுப்பி சிறையில் அடைக்கப்பட்டவர்களும், காவல் துறை வன்முறைக்கு உள்ளானவா்களும், உயிரிழந்தவா்களும் ஏராளமானோா்.

ஜெயபிரகாஷ் நாராயணன், மொராா்ஜி தேசாய், சரண் சிங், வாஜ்பாய், அத்வானி மட்டுமல்லாமல் பெரும்பாலான இடதுசாரி, சோஷலிஸ்ட் தலைவா்களும் கைது செய்யப்பட்டனா். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், நரேந்திர மோடி, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட சிலா் தலைமறைவானாா்கள்.

அவசரநிலை காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்தும், அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்தும், அடக்குமுறை குறித்தும் விசாரிக்க அமைக்கப்பட்ட ஷா கமிஷன் அறிக்கை, 1980-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அவசரநிலை காலத்தில் என்ன நடந்தது என்பது வருங்காலத்துக்கு தெரியக்கூடாது என்று நினைத்த அந்த எண்ணம் நிறைவேறவில்லை. இரா.செழியன் என்கிற தனி மனிதரின் முயற்சியால் லண்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் இருந்த இரண்டே இரண்டு பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மீள்பதிப்பு செய்யப்பட்டபோதுதான் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

குறைந்த காலம் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும் மொராா்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு ஜனநாயகத்துக்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் சாசனத்தின் 352-ஆவது சட்டப் பிரிவில் காணப்பட்ட உள்நாட்டுக் குழப்பம் காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யும் அதிகாரம், 1978-இல் ரத்து செய்யப்பட்டது.

வரலாறு விசித்திரமானது. அரசியல் அதிசயமானது. அவசரநிலை காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான பல தலைவா்கள் இப்போது அவசரநிலைக்குக் காரணமான காங்கிரஸை ஜனநாயக காவலராகக் கருதி கூட்டணி அமைத்திருக்கிறாா்கள். ’கடந்த 11 ஆண்டு காலமாக இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை காணப்படுகிறது’ என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயால் சொல்ல முடிகிறது; இந்திரா காந்தியின் அவசரநிலைக் காலத்தில் சொல்லியிருக்க முடியாது; அவா் சிறையில் இருந்திருப்பாா்.

அரை நூற்றாண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட அவசரநிலை என்பது இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம். தனது 23-ஆவது வயதில் ’மிசா’வில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இன்றைய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தான் காவல் துறையால் தாக்கப்பட்டது குறித்தும், கன்னத்தில் அறையப்பட்டது குறித்தும், பூட்ஸ் காலால் வயிற்றில் மிதிக்கப்பட்டது குறித்தும், மு.மு.இஸ்மாயில் ஆணையத்தில் அளித்த வாக்குமூலம் அதை உறுதி செய்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com