இடைவெளி குறைய வேண்டும்!

பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரி குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரி குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. 2026 மார்ச் மாதம் வரை உளுந்து, துவரை பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரிவிலக்கு தொடரும். வரும் மே மாதம் வரை மஞ்சள் பட்டாணிக்கான இறக்குமதி வரிவிலக்கும் தொடரும். ஏனைய பருப்பு வகைகளின் மீது 10 % இறக்குமதி வரி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே பருப்பு வகைகளைப் பொருத்தவரை மிகப் பெரிய இடைவெளி காணப்படுகிறது. இந்த இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகள் வெற்றி அடையவில்லை என்றே சொல்லலாம். அதேநேரத்தில் தொடர்ந்து இறக்குமதிகளை ஊக்குவிப்பது என்பது, விவசாயிகளை பருப்பு வகைகளைப் பயிரிடுவதில் உற்சாகம் இழக்கத் தூண்டக் கூடும். இறக்குமதிகள் இல்லாமலும், பொதுமக்களின் அன்றாடத் தேவையை ஈடுகட்ட முடியாது என்பதால் பிரச்னையை மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இப்போது அரசு அறிவித்திருக்கும் இறக்குமதி குறித்த அறிவிப்பு இன்னொரு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட இறக்குமதி செய்யப்படும் உளுந்து, துவரம் பருப்புகள் விலை குறைவாக இருப்பது விவசாயிகளுக்கு உற்சாகம் அளிப்பதாக இருக்காது. வரவிருக்கும் காரிஃப் பருவத்தில் உளுந்து, துவரை சாகுபடிப் பரப்பு குறைந்து, தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளியை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படக் கூடும். அதனால், இறக்குமதிகளைக் குறைப்பதில் அரசு சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை இறக்குமதிகள் தொடர்வது பாதிக்கும். அதேநேரத்தில் வரியை அதிகரித்து, இறக்குமதிகளைக் குறைப்பதன் மூலம் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். நமது உணவில் புரதச் சத்துக்கான முக்கியப் பங்கு வகிப்பவை பருப்பு வகைகள் என்பதால், அதன் விலையேற்றமோ, தட்டுப்பாடோ நுகர்வோரை கடுமையாகப் பாதிக்கும். அதனால் பருப்பு வகைகளின் இறக்குமதிகளை உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் கவனமாகக் கையாள வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

வேளாண் அமைச்சகம் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. முந்தைய 2024 நிதியாண்டின் 2.43 கோடி டன் பருப்பு உற்பத்தியைவிட சற்று கூடுதலாகவே 2025 நிதியாண்டின் உற்பத்தி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான ராபி பருவச் சாகுபடி கணிப்பின்படி, பருப்பு வகைகளின் உற்பத்தி 1.58 கோடி டன்னாக இருக்கும். அதில், கடலைப் பருப்பின் உற்பத்தி அதிகமாகவும், ஏனைய பருப்பு வகைகள் சுமார் 18 லட்சம் டன்னாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரிஃப் பருவ பருப்பு உற்பத்தி 71 லட்சம் டன் என்று முன்னோட்ட எதிர்பார்ப்பு தெரிவிக்கிறது.

2027 நிதியாண்டில் பருப்பு வகைகளின் இறக்குமதி 65 லட்சம் டன்னைக் கடக்கும் என்பது எதிர்பார்ப்பு. மஞ்சள் பட்டாணி இறக்குமதி மட்டுமே அதில் 30 லட்சம் டன்னாக இருக்கும். கடலைப் பருப்பு மற்றும் ஏனைய பருப்பு வகைகளுக்கு மாற்றாக சமீபகாலமாக மஞ்சள் பட்டாணி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதால், அதன் இறக்குமதி கணிசமாக அதிகரித்திருக்கிறது.

அதுவரை இல்லாத அளவிலான பருப்பு வகைளின் உற்பத்தி 2022 நிதியாண்டில் 2.73 கோடி டன் உச்சத்தைத் தொட்டது. அதற்குப் பிறகு தொடர்ந்து உற்பத்தி குறைந்து வருகிறதே தவிர, அதிகரிக்கவில்லை. உற்பத்திக்குப் பதிலாக இறக்குமதிகள் அதிகரித்துவருகின்றன. அதிகரித்த மக்கள் தொகையும், நுகர்வோர் மத்தியில் தானியங்களைவிட பருப்பு வகைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கூடுதல் தேவையும் இறக்குமதிகளைத் தவிர்க்க முடியாதவையாக்கி இருக்கின்றன. இதுகுறித்தெல்லாம் முறையான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் வேளாண் அமைச்சகத்தில் இல்லாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, நபார்டு அமைப்பும் இந்தியாவின் பருப்பு உற்பத்தி குறித்த ஆய்வை மேற்கொண்டது. அவற்றின் அடிப்படையில்தான் நமது இப்போதைய தேவை 2.8 கோடி டன் என்று பருப்பு வகைகளுக்கான புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் பார்த்தால், இப்போதைய உற்பத்தியின் அடிப்படையில் 50 லட்சம் டன்னுக்கும் அதிகமான பருப்பு வகைகளின் இறக்குமதி வியப்பை ஏற்படுத்தவில்லை.

வேளாண் உற்பத்திகளைப் பொருத்தவரை நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சோளம் உள்ளிட்டவை குறித்த பாசனப் பரப்பு, சாகுபடிப் பரப்பு, உற்பத்தி அளவு போன்றவற்றின் தரவுகள் ஓரளவுக்கு மேற்கொள்ளப்படுகின்றன. எண்ணெய் வித்துகள் குறித்த கவனமும் இல்லாமல் இல்லை. தோட்டப் பயிர்களான காபி, தேயிலை, ரப்பர் உள்ளிட்டவை குறித்தும் ஓரளவுக்குத் தரவுகள் காணப்படுகின்றன. ஆனால், பருப்பு வகைகள், காய்கறிகள், பழவகைகள் போன்றவை குறித்த கவனம் போதுமானதாக இல்லை என்று கூற வேண்டும்.

முறையான தரவுகள் திரட்டப்பட்டு, தேவையும் உற்பத்தியும் நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப பருப்பு வகைகளின் பாசனப் பரப்பை அதிகரிக்க ஊக்கம் அளிப்பதன் மூலம்தான் நாம் தன்னிறவை அடைய முடியும். பருப்பு வகைகளின் இறக்குமதிக் கொள்கையில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால்தான் உள்நாட்டு, வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் முறையாகத் திட்டமிடவும், ஊக வணிகம் நடைபெறாமல் தடுக்கவும் முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com