

கோவை மருதமலை வனப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 20) உயிரிழந்த 18 வயதுப் பெண் யானையின் வயிற்றில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் இருந்தது வன விலங்கு ஆர்வலர்களைக் கவலைகொள்ளச் செய்திருக்கிறது. யானையின் பெருங்குடலில் சாணத்துடன் நெகிழிக் கழிவுகள், அலுமினிய தாள்கள் (ஃபாயில்), உணவுப் பொருள்கள் அடைக்கப் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் உள்ளிட்டவை இருந்ததே அது உயிரிழக்க காரணம் என, யானைக்கு நான்கு நாள்களுக்கும் மேல் சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, கோவை மாவட்டத்தையொட்டி உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களுக்குள் உணவு, தண்ணீர் தேடி யானைகள் வருவது தொடர்கதையாகவே மாறிவிட்டிருக்கிறது. மருதமலை அடிவாரப் பகுதி யானையின் வலசைப் பாதை என வனத் துறையின் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், மாநகரப் பகுதிகளில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் மருதமலை அடிவாரப் பகுதி போன்று மலையையொட்டி உள்ள பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
மருதமலை வனப் பகுதி அருகே சோமையம்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டுவந்துள்ளது. இந்த குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும் என வன ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தபோதும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்தக் கிடங்கு யானையின் உயிருக்கு உலை வைத்துள்ளது. யானையின் இறப்புக்குப் பின்னர் இந்தக் கிடங்கு மூடப்பட்டுள்ளது.
சபரிமலை மலைப்பாதையில் கொட்டப்படும் குப்பைகளை உண்ட இரு யானைகள், இரு மிளா மான்கள் உயிரிழந்ததை அடுத்து இது தொடர்பான வழக்கை தானாகவே எடுத்துக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம், சந்நிதானம், பம்பை, நிலக்கல், பம்பை முதல் சந்நிதானம் வரையிலான பாதையில் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தப்படுவதை சமரசமில்லாமல் முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என்று அண்மையில் உத்தரவிட்டது.
சபரிமலை வனப் பாதையில் பல்வேறு வகையான குரங்குகள், மான்கள், இந்திய பெரு அணில், பறவைகளும்கூட நெகிழிக் கழிவுகளை உண்டதால் பாதிக்கப்பட்டுள்ளதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகரில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மட்டும் 5 பசுக்கள், 7 ஆடுகள் வயிற்றில் இருந்து நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம், நந்தியால் நகரத்தில் கடந்த 2023 ஜூனில் உயிரிழந்த சினைப் பசுவின் வயிற்றில் இருந்து 60 கிலோ நெகிழிக் கழிவுகளை மருத்துவர்கள் அகற்றினர். அதேபோன்று, ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாதில் கடந்த 2021 மார்ச்சில் உயிரிழந்த சினைப் பசுவின் வயிற்றில் இருந்து 71 கிலோ நெகிழிக் கழிவுகள் எடுக்கப்பட்டன. இது நாடு முழுவதும் காணப்படுகிறது.
நெகிழி அறிமுகமான பின்னர், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட எல்லா குப்பைகளையும் அதில் அடைத்து முடிச்சுபோட்டு கண்ட இடங்களில் தூக்கி எறிகிறோம். உணவு தேடி அலையும் விலங்குகள் முடிச்சை அவிழ்க்க முடியாமல் நெகிழிப் பையையும் சேர்த்து உண்கின்றன.
விலங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பலவிதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது நெகிழி. மனிதனின் மூளை, சிறுநீரகம், கல்லீரல், ரத்தம், விந்தணு, தொப்புள்கொடி, தாய்ப்பால் ஆகியவற்றிலும் நுண் நெகிழித் துகள்கள் இருப்பது அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ பல்கலைக்கழகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மூளையில் படியும் நுண் நெகிழித் துகள் மறதி நோய்க்கு காரணமாகிறது என்ற அந்த ஆய்வு முடிவை அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு குறிப்பிட்டிருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இது மட்டுமின்றி, நெகிழி பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள குடிநீரை ஆபத்தான உணவுப் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு கடந்த டிசம்பரில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ரூ.10, ரூ.20 என விற்கப்படும் நெகிழியாலான குடிநீர் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஓடைகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நெகிழி உறைகள் தூக்கி எறியப்படுவதால், மழைக்காலங்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வடிய வழிஇல்லாமல் நகரமே வெள்ளக்காடாகி வருவதை சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கண்டுவருகிறோம்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 9 லட்சம் டன் நெகிழி பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், சுமார் ரூ. 18,000 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது. 8,000-த்துக்கும் மேற்பட்ட குறு, சிறு நிறுவனங்கள் மூலம் 10 லட்சம் பேர் நெகிழி உற்பத்தித் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக நெகிழிப் பயன்பாட்டைக் கைவிடுதல் சாத்தியமில்லை என்பது மட்டுமல்ல, அவசியமும் இல்லை. ஆனால், நெகிழிப் பைகளையும் , குடிநீர் பாட்டில்களையும் நம்மால் தவிர்க்க முடியும். தமிழக முதல்வர் முன்மொழிந்த "மஞ்சப்பைத் திட்டம்' முனைப்புடன் செயல்வடிவம் பெறாதது துரதிருஷ்டவசமானது.
நெகிழிப் பைகளைப் பயன்படுத்த மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதியேற்பது மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.