விபத்துகள் அல்ல, அலட்சியம்!

சாலை விபத்துகளை முற்றிலுமாகத் தடுக்க முடியாது என்றபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.
கிணற்றுக்குள் விழுந்த காரை மீட்கும் மீட்புக்குழுவினர்.
கிணற்றுக்குள் விழுந்த காரை மீட்கும் மீட்புக்குழுவினர்.
Updated on
2 min read

சாலை விபத்துகளை முற்றிலுமாகத் தடுக்க முடியாது என்றபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதில் அரசு உயர் அதிகாரிகளும், அலுவலர்களும் முழுமனதுடன் கவனம் செலுத்தியிருந்தால், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சாலையோரக் கிணற்றுக்குள் கார் விழுந்த விபத்தைத் தடுத்திருக்க முடியும்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள வெள்ளாளன்விளை பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ். இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கோவை அருகேயுள்ள துடியலூரில் கடை வைத்து வியாபாரம் செய்துவந்தார். இவர் தனது சொந்த ஊரில் அண்மையில் நடைபெற்ற கிறிஸ்தவ தேவாலய பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்ள தனது குடும்பத்தினருடன் காரில் கோவை துடியலூரிலிருந்து புறப்பட்டு வந்தார்.

சாத்தான்குளம் அருகேயுள்ள மீரான்குளம் பகுதியில் நள்ளிரவு வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவர் இல்லாத சாலையோரக் கிணற்றுக்குள் விழுந்தது. இதில், காரிலிருந்த மோசஸ் குடும்பத்தினர் 5 பேர் உயிரிழந்தனர்; ஏனைய மூவர் உயிர்தப்பினர்.

இதேபோன்ற மிக மோசமான விபத்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 25}4}1995 அன்று அதிகாலை தற்போதைய திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகேயுள்ள மாந்தபுரம் பகுதியில் நிகழ்ந்தது. அப்போது ஆள்களை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரக் கிணற்றுக்குள் விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர்.

அந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொடுமுடி காவிரியாற்றிலிருந்து புனித நீரை எடுத்துவந்து, பழனி தண்டாயுதபாணி கோயிலில் வழிபடுவது வழக்கம். அந்த விபத்து நிகழ்ந்தபோது, லாரியில் 89 பேர் பயணம் செய்தனர்; இவர்களில் 30 பேர் உயிரிழந்தனர்; ஏனைய 59 பேர் பல மணிநேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர்.

இத்தகைய பெரும் விபத்து நிகழ்ந்த பிறகு, கடந்த 30 ஆண்டுகளில் சாலையோரக் கிணற்றுக்குள் பல வாகனங்கள் விழுந்திருக்கின்றன; பலர் உயிரிழக்கவும் நேரிட்டது. இதுபோன்ற விபத்துகள் நிகழ்ந்த பிறகும் அரசு உயர் அதிகாரிகளும், அலுவலர்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியப்போக்குடன் செயல்பட்டு வருகின்றனர் என்பதுதான் உண்மை.

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் விழுந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு, மாவட்ட ஆட்சியர்கள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

"சாலையோரக் கிணறுகளைச் சுற்றி உயரமான தடுப்புச் சுவர்களைக் கட்டவேண்டும். இது சாத்தியப்படாவிட்டால், இத்தகைய கிணறுகள் இருக்கும் இடங்களில் சாலையோரங்களில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையோரக் கிணறுகள் இருக்குமானால், அவற்றை நிரந்தரமாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' -தலைமைச் செயலர் அனுப்பிய சுற்றறிக்கையின் சாராம்சம் இதுதான்.

கடந்த 1995}ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் அருகே லாரி கிணற்றுக்குள் விழுந்த சம்பவத்துக்குப் பிறகும் இதேபோன்றதொரு அறிக்கை அரசு சார்பில் வெளியிடப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகள் கடந்தபிறகும், சாலையோரக் கிணறுகளுக்குள் வாகனங்கள் விழுந்து விபத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்னமும் முழுவீச்சில் நடைபெறவில்லை. இதற்கு அரசு உயர் அதிகாரிகள், அலுவலர்களின் மெத்தனப்போக்குதான் காரணம் என்பதைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்து பல நாள்களாகியும், தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதிகாரிகள் உரிய அக்கறை செலுத்தாவிடில், இதுபோன்ற விபத்துகள் தொடரத்தான் செய்யும்.

ஏற்கெனவே சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது. கடந்த 2022}ஆம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த 64,105 சாலை விபத்துகளில் 17,884 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், அந்த ஆண்டு அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்தது.

இதேபோல, தமிழகத்தில் கடந்த 2023}ஆம் ஆண்டில் நிகழ்ந்த 17,526 சாலை விபத்துகளில் 18,347 பேரும், 2024}ஆம் ஆண்டில் நிகழ்ந்த 17,282 சாலை விபத்துகளில் 18,074 பேரும் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு (2024) அதிக அளவில் சாலை விபத்துகள் நிகழும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்குப் பின்னேறியது என்பது சிறிய ஆறுதல்.

அதிவேகத்திலும், மது போதையிலும், தூக்கக்கலக்கத்துடனும் வாகனங்களை இயக்குவதால்தான் பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, சாலை விபத்துகள் நிகழாமல் தடுக்க அரசு மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால் போதாது. வாகன ஓட்டிகளும் விழிப்புடன் செயல்பட்டு, அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தால் மட்டுமே சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com