‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தாக்குதல்கள் தீர்வாகாது!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 2,000 படுக்கை வசதி கொண்ட ஒமித் மருத்துவமனை மீது பாகிஸ்தான் கடந்த திங்கள்கிழமை இரவு (மார்ச் 16) நடத்திய வான்வழித் தாக்குதலில் நோயாளிகள் உள்ளிட்ட 400 பேர் உயிரிழந்தனர்; மேலும் 250 பேர் காயமடைந்தனர்.

News image

வானவழித் தாக்குதலில் தீப்பற்றி எரிந்த மருத்துவமனையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.

படம்: ஏபி.

Updated On :21 மார்ச் 2026, 1:42 am

ஆசிரியர்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 2,000 படுக்கை வசதி கொண்ட ஒமித் மருத்துவமனை மீது பாகிஸ்தான் கடந்த திங்கள்கிழமை இரவு (மார்ச் 16) நடத்திய வான்வழித் தாக்குதலில் நோயாளிகள் உள்ளிட்ட 400 பேர் உயிரிழந்தனர்; மேலும் 250 பேர் காயமடைந்தனர். ஈகைப் பெருநாளையொட்டி மூன்று நாள்களுக்கு தாக்குதலில் ஈடுபடுவதில்லை என்று பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஏற்றுக்கொண்டிருப்பது சற்று ஆறுதல்.

ஒருபுறம் உக்ரைன் - ரஷியா போர், மறுபுறம் இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போரால் தலைவர்கள், பொதுமக்கள் நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பு, எரிபொருள் தட்டுப்பாடு, விமான சேவைகள் ரத்தால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு எனப் பல நாடுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் தனது அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நேரடிப் போரை அறிவித்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

தெஹ்ரீக் - ஏ - தலிபான் அமைப்பினர் பாகிஸ்தானின் பல பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் இப்போதைய ஆட்சியை அகற்றிவிட்டு முழுவதும் ஷரியத் சட்ட அடிப்படையிலான ஆட்சியை நிறுவுவதை லட்சியமாகக் கொண்ட தெஹ்ரீக் - ஏ - தலிபான் (பாகிஸ்தான்) என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அமைப்பினர் ஆதரவும், அடைக்கலமும் கொடுத்து வருகின்றனர் என்று பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் கடந்த பிப். 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்; மேலும் 169 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரீக் - ஏ- தலிபான் அமைப்பினர்தான் காரணம் என பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியது.

அதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய, பாகிஸ்தானின் பாஜூர் மாவட்டத்தில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை பாதுகாப்பு சோதனைச்சாவடி மீது தெஹ்ரீக் - ஏ - தலிபான் பயங்கரவாதிகள் கடந்த பிப். 16-ஆம் தேதி மோதியதில் 11 வீரர்களும் ஒரு சிறுமியும் உயிரிழந்தனர். இந்தத் தொடர் தாக்குதல்களால் கடும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், இவற்றுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தானுடன் நேரடிப் போர் என கடந்த பிப். 26-ஆம் தேதி அறிவித்து தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

காபூல், காந்தஹார், பக்தியா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 274 தலிபான்களைக் கொன்றதாகவும் 73 எல்லைச்சாவடிகள் தரைமட்டமாக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது. அதேநேரம், இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 55 பேர் உயிரிழந்ததாகவும் அந்த நாட்டின் 19 எல்லைச்சாவடிகளைக் கைப்பற்றியதாகவும் தலிபான்கள் அறிவித்தனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே கடந்த பல ஆண்டுகளாகவே பொருளாதார ரீதியாக தள்ளாட்டத்தில்தான் இருக்கின்றன. ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போரையடுத்து, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் லிட்டருக்கு ரூ.320-ஆக உள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலோ கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையில்லாத ஆட்சியின் காரணமாகவும், தலிபான்களின் ஆதிக்கம் காரணமாக உலக நாடுகள் பலவற்றின் ஆதரவின்மையாலும் அந்நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாகச் சிதைந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ஆம் ஆண்டில் அமெரிக்கா வெளியேறுவதற்கு முன்பே அந்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா பெரிய அளவில் பங்களித்து வந்தது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பும் அதை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. மருத்துவமனை, சாலை வசதி போன்றவற்றுக்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை இந்தியா செலவழித்து வருகிறது.

ஒருபுறம் தெஹ்ரீக் - ஏ -தலிபான் தாக்குதல், மறுபுறம் இந்தியாவுடன் தலிபான்களின் மேம்பட்ட உறவு ஆகியவையே பாகிஸ்தானின் இந்த நேரடிப் போர் அறிவிப்புக்கு வழிவகுத்துள்ளன. பாகிஸ்தானின் தாக்குதல் காரணமாக, கடந்த மார்ச் முதல் வாரம் வரை, ஆப்கானிஸ்தானில் 1.15 லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வேறு இடங்களுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். இந்தப் போரால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களும், பெண்களும், குழந்தைகளும்தான்.

ஆப்கானிஸ்தானை இந்தியாவின் காலனியாக தலிபான்கள் மாற்றிவிட்டனர் என்பது பாகிஸ்தானின் குற்றச்சாட்டு. தலிபான் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது என அமெரிக்கா கூறிவிட்டது. பாகிஸ்தானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்பதால், அமெரிக்கா தவிர்த்த உலகின் பிற நாடுகளைத் தொடர்பு கொண்டு போரை நிறுத்துவதற்கு பாகிஸ்தானை நிர்ப்பந்திக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஆதரவுக் கரம் நீட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.