இது தொடரக் கூடாது!

கிரிக்கெட்டில் அரசியல் தொடர்பான செயல்கள் நுழைவது குறித்து...
ஆசிய கோப்பையின்றி வெற்றியைக் கொண்டாடும் இந்திய அணி வீரர்கள்
ஆசிய கோப்பையின்றி வெற்றியைக் கொண்டாடும் இந்திய அணி வீரர்கள்படம் | பிசிசிஐ
Published on
Updated on
2 min read

செப்டம்பர் 28-ஆம் தேதி நிறைவடைந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதற்கு முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டத்திலும் சூப்பர் 4 பிரிவு ஆட்டத்திலும் வென்று ஆடுகளத்தில் தங்களுக்கு பாகிஸ்தான் அணி நிகர் இல்லை என்பதையும் இந்திய அணி நிரூபித்தது.

ஆட்டத்தின்போது நடைபெற்ற சில நிகழ்வுகள் பாராட்டக்கூடியதாக இல்லை. கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தின்போது, டாஸ் போட்ட சமயத்தில் இரு கேப்டன்களும் கைகுலுக்கவில்லை. அதேபோன்று, ஆட்டத்தின் நிறைவிலும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஆனால், மற்ற அணிகளுடன் விளையாடியபோது கைகுலுக்கிக் கொண்டனர்.

முதல் ஆட்டத்தில் வென்றபோது, பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு துணை நிற்பதாகவும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு வெற்றியை அர்ப்பணிப்பதாகவும் கூறி இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்ச்சையைக் கிளப்பினார்.

இந்திய அணியுடனான கைகுலுக்கல் பிரச்னைக்காக, ஐக்கிய அரபு அமீரகத்துடனான ஆட்டத்தில் தாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று முதலில் தெரிவித்த பாகிஸ்தான் அணி பின்னர் இறங்கிவந்து விளையாடியது.

அடுத்து செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 பிரிவு ஆட்டத்தின்போது, ஆறு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பொய்யாக கூறிவருவதை சுட்டிக்காட்டும் வகையில் ஹாரிஸ் ரெளஃப் ஆறு என்று விரல்களாலும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு தரையில் வீழ்வதுபோன்றும் சைகை செய்தார்.

அதே ஆட்டத்தில் அரை சதம் அடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடிய சாஹிப்ஸôதா ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவதுபோன்று சைகை செய்தார். இரண்டு செயல்களும் பெரும் சர்ச்சையைக் கிளப்பின.

இந்நிலையில், சூர்யகுமார், ஹாரிஸ் ரெüஃப் ஆகியோரின் செயல்களுக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆட்ட ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்தது. சாஹிப்ஸôதாவுக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோன்று, இறுதி ஆட்டத்துக்குப் பின்னர் நடைபெற்ற சில நிகழ்வுகள் திகழ்ந்தன.

வெற்றிபெறும் அணிக்கு பொதுவாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர்தான் கோப்பையை வழங்குவார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும், அந்நாட்டின் உள்துறை அமைச்சருமாக உள்ள மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மாட்டோம் என்று இந்திய அணி தெரிவித்தது.

பரிசளிப்பு நிகழ்ச்சி 75 நிமிஷங்களுக்கு மேல் தாமதமானது. இந்திய அணி வராததால் கோப்பையை எடுத்துச் சென்றுவிட்டார் மோசின் நக்வி. வென்ற அணி கோப்பை இல்லாமல் கொண்டாடியது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

இரண்டாம் இடத்துக்கான பரிசுத் தொகைக்கான காசோலை மாதிரியைப் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா, அதை அடுத்த விநாடியே தூக்கி எறிந்தது அநாகரிகத்தின் உச்சம் ஆகும்.

ஆசிய கோப்பை போட்டியில் 7 ஆட்டங்களுக்கான தனது முழு ஊதியமான ரூ.28 லட்சத்தை பாதுகாப்புப் படைக்கு அளிப்பதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்தார். அவருக்குப் போட்டியாக, முழு ஆசிய போட்டியிலும் பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் அனைவரது ஊதியத்தையும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பங்களுக்கு அளிப்பதாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா அறிவித்து அரசியல் போட்டியை நிறைவு செய்தார்.

பொதுவாகவே, இந்தியாவும், பாகிஸ்தானும் கிரிக்கெட் போட்டியில் விளையாடினால் போருக்குச் சமமாக அந்த ஆட்டம் மாற்றப்படுகிறது. பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நிலையில்லாமல் இருக்கும் பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு இந்திய எதிர்ப்பு என்பதே மூச்சுக்காற்று.

இந்தச் சூழலில் விளையாட்டுப் போட்டிகளில் இரு அணியின் ஆட்டக்காரர்களும் இப்படித்தான் செயல்படுவார்கள் என்றால் அது விளையாட்டுக்கே இழுக்கு.

அரசியல் காரணங்களுக்காக போட்டியைப் புறக்கணிப்பது என்பது புதிதல்ல. 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியை 12 நாடுகளும், 1976 மான்ட்ரியால் ஒலிம்பிக் போட்டியை 37 நாடுகளும், 1980 மாஸ்கோ போட்டியை 67 நாடுகளும் 1984 லாஸ் ஏஞ்சலீஸ் போட்டியை 19 நாடுகளும் புறக்கணித்தன.

ஒன்று, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாத வரை பாகிஸ்தானோடு எந்தப் போட்டியிலும் எந்த இடத்திலும் விளையாட மாட்டோம் என்று மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். அல்லது, பல்லாயிரம் கோடிகளில் பணம் கொட்டும் என்று கருதி வெளிநாடுகளில் மட்டும் விளையாடுவோம் என்று முடிவெடுத்தால், அங்கு அரசியல் தொடர்பான செயல்களுக்கு இடம் இல்லை என்பதை ஆட்டக்காரர்களுக்கு இரு அரசுகளுமே உணர்த்த வேண்டும்.

இரு நாட்டு உறவுக்கும் விளையாட்டு பாலமாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் பகடைக்காயாக மாறக் கூடாது. அதுவிளையாட்டுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் இழுக்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com