கோடை வெப்பத்தின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பது, ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதித்திருக்கிறது. ஏப்ரல் மாதக் கடைசியிலேயே இந்த அளவுக்குக் கோடையின் தாக்கம் காணப்படுமானால், அடுத்துவரும் இரண்டு மாதங்களில் கோடையின் தாக்கம் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை நினைத்தால் பதற்றம் மேலிடுகிறது.
கேரளத்தில் தொடங்கிப் படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து, இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வியாபிப்பதுதான் கோடைப் பருவத்தின் வழக்கம். இப்போது, ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் அனலில் தகித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. வழக்கத்துக்கு முன்னதாகவே இந்த ஆண்டில் கோடைப் பருவம் தொடங்கி இருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.
விதர்பா, சத்தீஸ்கர், ஒடிஸா, தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட மத்திய மற்றும் தெற்கு இந்தியப் பகுதிகளில் கோடையின் கடுமை மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஒடிஸô, தெலங்கானா, கேரளம், ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் என்றால், தமிழ்நாடும், கர்நாடகமும் அதில் விதிவிலக்காக இல்லை. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து விட்டது வெப்பம்.
கேரள மாநிலத்தில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மக்கள் வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் பல பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதால், "சுய ஊரடங்கு' கடைப்பிடிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதிலிருந்து, கோடையின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். அண்டை மாநிலமான கேரளத்தின் நிலைமை விரைவிலேயே, அதாவது ஒரு சில நாள்களிலேயே, தமிழ்நாட்டுக்கும் வரக்கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அதிகரித்த கோடை வெப்பம் ஏற்படுத்தும் உடல் ரீதியிலான பாதிப்புகள் சொல்லி மாளாது. "ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் "வெப்பத் தாக்குதல்' மூலம் மயக்கம் அடைபவர்கள் பலர் என்றால், அவர்களில் முதியோரும் குழந்தைகளும் உயிரிழப்பதும்கூட உண்டு. "ஹீட் ஸ்ட்ரோக்' மரணங்கள் என்பது ஆண்டுதோறும் இந்தியாவில் அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
தேசிய கடல்சார் மற்றும் வளி மண்டல நிர்வாக அமைப்பு (நேஷனல் ஓஷியானிக் அண்ட் அட்மாஸ்ஃபெரிக் அட்மினிஸ்ட்ரேஷன்) இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட முன்பாகவே "எல் நினோ' உருவாகக்கூடும் என்று கணித்திருக்கிறது. ஜூன்} ஆகஸ்ட் மாதங்களில் உருவாக இருக்கும் "எல் நினோ' இந்த முறை வீரியம் அதிகம் கொண்ட "சூப்பர் எல் நினோ'வாக உருவாகும் என்று தெரிகிறது. அதன் காரணமாக வறட்சி, வெள்ளப் பெருக்கு, அதிகரித்த வெப்பம் உள்ளிட்ட பல தாக்கங்களை இந்தியத் துணைக் கண்டம் எதிர்கொள்ளும் என்று அந்த அமைப்பு முன்னெச்சரிக்கை விடுக்கிறது.
"எல் நினோ' காரணமாக அதிகரிக்கும் கடல்மட்ட வெப்பம் ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் கடுமையான கோடையை உருவாக்கும். வழக்கத்தைவிட கடுமையான கோடை என்பது எளிதாகக் கடந்துபோகக் கூடியதல்ல. விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் 123 கோடி மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது. பயிர்கள், கால்நடைகள், நீர்வாழ் உயிரினங்கள், காடுகள் என்று அதன் தாக்கமும் பாதிப்பும் நீள்கிறது.
உணவு உற்பத்தியில் அதிகரித்த கோடை வெப்பம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 2023}24}ஆம் நிதியாண்டில், தொடர்ந்து வெப்ப அலை நீடித்ததால், பிரேசிலின் சோயாபீன்ஸ் உற்பத்தி 10% குறைந்தது மட்டுமல்லாமல், காட்டுத் தீ பரவியதையும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு இப்போதே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
அதிக அளவில் அரிசி, கோதுமை தானியங்களை அடிப்படை உணவாகக் கொண்ட இந்தியாவில் கோடை வெப்பத்தின் பாதிப்பு நெல், கோதுமை சாகுபடியை மட்டுமல்ல, ஏனைய பயிர்களின் உற்பத்தியையும் பாதிக்கும். 2022}ஆம் ஆண்டு வெப்ப அலை காரணமாக கோதுமை சாகுபடி 34% குறைந்தது என்பதுடன், காய்கறி உற்பத்தி 50% பாதிப்பை எதிர்கொண்டது. பால் உற்பத்தியும் வெப்பம் அதிகரிக்கும்போது கணிசமாகக் குறையும்.
பலவீனமான இதயம் உள்ளவர்களும், முதியவர்களும் அதிகரித்த கோடையாலும், வெப்ப அலையால் தாக்கப்படுவதாலும் மாரடைப்பால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதை நாம் ஏற்கெனவே உணர்ந்திருக்கிறோம். கோடைக்கால நோய்கள் ஒருபுறம் இருக்க, உடலில் நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிப்பதும் வழக்கம். அவற்றை எதிர்கொள்ள சுகாதாரத் துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.
எந்தவொரு தெருவும் குடிநீர் பந்தல் இல்லாமல் இருக்கக் கூடாது; நிழல் தரும் மரங்கள் இல்லாவிட்டால், சற்று நேரம் இளைப்பாற பாதுகாப்பான தங்குமிடங்களை ஆங்காங்கே அமைக்க வேண்டும்; எல்லாப் பகுதிகளிலும் முதலுதவி அளிக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கிளைகள் காணப்பட வேண்டும்; தன்னார்வ அமைப்புகளும், அரசியல் கட்சித் தொண்டர்களும் நீர்-மோர் பந்தல் அமைத்துக் கோடையின் தாக்கத்தை மக்கள் எதிர்கொள்ள உதவ வேண்டும்.
இவையெல்லாம் நம்மால் உடனடியாகச் செய்ய முடியும் அடிப்படை வசதிகள்; கோடையின் தாக்கத்தில் இருந்து பயிர்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பது அரசின் பொறுப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹீட் ஸ்ட்ரோக் - அறிகுறிகள் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

கோடை நோய்களுக்கு பாராசிட்டமால் கூடாது: பொது சுகாதாரத் துறை

அதிகரிக்கும் கோடை வெப்பம்: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

