‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

நீறுபூத்த நெருப்பு!

ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பற்றிய தலையங்கம்....

News image

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - PTI

Updated On :13 ஆகஸ்ட் 2026, 4:32 am IST

தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது என்பது ஒரு வகையில் ஆறுதல். அதே நேரத்தில், அந்தப் போராட்டம் குறித்த பின்னணியும், அந்தப் போராட்டத்துக்கான காரணங்களும் இன்னும் விவாதப் பொருளாகத் தொடர்கிறது என்பது கவலைக்குரியது.

போராட்டத்தின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமே தவிர, இந்தியாவில் அவ்வளவு எளிதில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. அதற்கு இந்தியா-வங்கதேசமோ, நேபாளமோ, இலங்கையோ, ஏன் பாகிஸ்தானோ அல்ல; இதுபோன்ற பல போராட்டங்களை இந்தியா சந்தித்திருக்கிறது. அந்தப் போராட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றனவே தவிர ஆட்சி மாற்றத்தை எளிதில் ஏற்படுத்திவிட முடியவில்லை. ஜனநாயகம் என்பது மாரத்தான் ஓட்டம்; 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் அல்ல.

ஜந்தர் மந்தரில் கூடிய இளைஞர்கள் முன்வைத்த கோரிக்கை அபத்தமானது. அவர்கள் முன்னெடுத்த நியாயமான பிரச்னைகளுக்கும், அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கும் தொடர்பில்லை. முறைகேடில்லாத தேர்வு முறை என்பது மிகவும் நியாயமான கோரிக்கை. தேர்வு முறைகேட்டில் நேரடித் தொடர்பு உள்ள அதிகாரிகள் மீது ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தார்மிகப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியது அரசியல். அதனால் போராட்டத்தை விலக்கிக் கொள்ள அரசுக்கு ஒரு காரணம் கிடைத்ததே தவிர, தேர்வு முறையில் நேர்மையை ஏற்படுத்த அது வழிகோலவில்லை.

தேர்வு வினாத்தாள் கசிவது, தேர்வு முறையில் முறைகேடு நடப்பது இரண்டுமே புதிதல்ல. சட்டம் போட்டுத் தடுக்கக் கூடியவையும் அல்ல. இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் தேர்வு முறைகேடுகள் குறித்த முன்னுதாரணங்கள் ஏராளம் உண்டு. முதலாவது தேர்வு முறைகேடு சீனாவில் "மிங்' அரசர்களின் ஆட்சியில் நடந்ததாக வரலாற்றில் பதிவு இருக்கிறது. 1397-இல் சீனாவின் தென் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பது வடக்கு மாநிலங்களில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

போராட்டம் எழுந்ததைத் தொடர்ந்து மிங் மன்னர் 12 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள் தேர்வுத் தாள்களைப் பரிசோதித்து, எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று தெரிவித்தும், வடக்கு மாநிலங்களில் உள்ள மாணவர்கள் அமைதி அடைவதாக இல்லை.

விசாரணைக் குழு ஏமாற்றுகிறது என்று போராடத் தொடங்கிய மாணவர்களைத் திருப்திப்படுத்த, விசாரணைக் குழுத் தலைவரை மன்னர் நாடு கடத்தினார்; தேர்வாணையத் தலைவருக்கு சிறைத் தண்டனை விதித்தார்; வட மாநிலங்களைச் சேர்ந்த 61 பேருக்கு அரசுப் பணி வழங்கினார். அமைதி ஏற்படுத்தப்பட்டது.

இனி இந்தியாவுக்கு வருவோம். கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போட்டித் தேர்வுகளும், தகுதித் தேர்வுகளும் அவற்றில் முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. தேர்வு முறைகேடுகளைத் தடுக்க பல மாநில அரசுகள் சட்டங்கள் இயற்றி இருக்கின்றன. அப்படி இருந்தும் தேர்வு முறைகேடுகள் தடுக்கப்பட்டனவா என்றால் இல்லை.

2005 முதல் கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 10 கோடி மாணவர்கள் 220 தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறைகேட்டைத் தொடர்ந்தும் கூடுதல் தண்டனை, கூடுதல் அபராதம் விதித்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.

2022 ராஜஸ்தான் பொதுத் தேர்வுச் சட்டமும், 2023-இல் திருத்தச் சட்டமும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது; 2023 குஜராத் சட்டம் 10 ஆண்டு சிறையும் அபராதமும் விதித்தது; 2024 பிகார் சட்டம் 10 ஆண்டு சிறையும் ரூ. 1 கோடி அபராதமும் விதித்தது; ஒடிஸôவும் இதுபோன்ற சட்டம் இயற்றியது. 2024-இல் பல முறைகேடுகள் எழுந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு பொதுத் தேர்வுகள் சட்டம் இயற்றி வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கணினித் தகவல் திருட்டு உள்ளிட்டவற்றுக்கு 10 ஆண்டு சிறையும், ரூ. 1 கோடி அபராதமும் விதிக்க முற்பட்டது.

இப்போது தேர்வு முறைகேடுகள் சட்டத்தை மேலும் கடுமையாக்கி, முறைகேடு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதை உள்படுத்தி மத்திய அரசின் சட்டம் கடுமையாக்கப்பட்டிருக்கிறது; இதன்மூலம் தீர்வு கிடைத்து விடுமா என்றால் சந்தேகம்தான்.

முதலில் குற்றவாளி அடையாளம் காணப்பட வேண்டும்; அவர் மீது பலவீனமான பிரிவுகளில் குற்றத்தைப் பதிவு செய்து காவல் துறை தனது கடமையிலிருந்து தடம் புரளக் கூடாது; அரசு வழக்குரைஞர்கள் குற்றத்தை நிரூபிக்கும் விதத்தில் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வாதிட வேண்டும்; நீதிபதி தயவு தாட்சண்யம் இல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டும்.

தண்டனைகளைக் கடுமையாக்குவதன் மூலம் குற்றங்களைத் தடுத்துவிட முடியாது. குற்றவாளிகளுக்குத் தண்டனையை உறுதி செய்வதன் மூலம்தான், குற்றச் செயலில் ஈடுபடுபவர்களைத் தடுக்க முடியும். சட்டத்தை இயற்றுவதைவிட, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் முக்கியம். அது இல்லாத வரை அருவருப்பான கரப்பான் பூச்சிகள் இந்திய ஜனநாயகத்தை

அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கும்!

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்.

நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த

போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.

திருக்குறள் (எண் 637) அதிகாரம்: அமைச்சு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.