ஜார்க்கண்டில் 6-வது கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மாணவர்களின் சில கோரிக்கைகளை அரசு ஏற்காததால் அவர்கள் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (ஜேபிஎஸ்சி), ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (ஜேஎஸ்எஸ்சி) நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டு தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் எழுப்பியிருந்தனர். இதுதொடர்பாக, சிஐடி விசாரணை நடத்தப்பட்டது.
சிஐடி விசாரணையின் முடிவிலும் முறைகேடுகள் குறித்து எந்தவொரு தகவலும் மாணவர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் முண்டா திடலில் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேடுகள் குறித்து உரிய முறையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஆள்சேர்ப்பில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைக் விசாரிப்பதற்காக ஜார்க்கண்ட் அரசு பலமுனைச் செயல் திட்டம் ஒன்றை அறிவித்தது.
இதன்படி, 14-வது ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் மற்றும் 2023-25 காலகட்டத்திற்கான நிலுவை ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிஐடி (CID) விசாரணை நடத்துதல், சந்தேகத்திற்குரிய நிதி முறைகேடுகள் குறித்து அமலாக்க இயக்குநரகம் (ED) விசாரணை மேற்கொள்ளுதல், விரைவு நீதிமன்றம் ஒன்றை அமைத்தல் மற்றும் ஆள்சேர்ப்பு நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான நிபுணர் குழு அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஜார்க்கண்ட் அமைச்சர் சுடிவா குமார் சோனு தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் 3 உறுப்பினர் பதவி ராஜிநாமாவுக்கு அம்மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் இன்று (ஆக. 9) ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம் அஜிதா பட்டாச்சார்யா, அனிமா ஹன்ஸ்டா, ஜமால் அஹமது ஆகியோரின் ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மூன்று உறுப்பினர்களும் ஆகஸ்ட் 10, 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தனித்தனியே விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சிஜிஎல் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் சிபிஐ விசாரணை கோரும் மாணவர்களின் கோரிக்கை அரசால் ஏற்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் இதற்குத் தீர்வு காணப்படவில்லை என கூறப்படுகிறது.
"14வது ஜே.பி.எஸ்.சி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்பட, எங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், சிபிஐ விசாரணை கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை நாங்கள் சமரசம் செய்யமாட்டோம்" என்று மாணவர் அமைப்பின் தலைவர் ரவீந்திர பஸ்வான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தங்கள் போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்துள்ள மாணவர்கள், நாளை (ஆகஸ்ட் 10) ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்போவதாகத் தெரிவித்தனர்.
Summary
Jharkhand exam irregularities! Students announce continuation of protests!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு! 3 அதிகாரிகள் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு அரசு ஒப்புதல்!

இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு: அரசுடன் போராட்டக்குழு பேச்சுவார்த்தை!





