அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

ஆக்கிரமிப்புகளுக்கு எச்சரிக்கை!

ஸ்ரீவில்லிபுத்தூர் -மேகமலை புலிகள் காப்பக பகுதிகளில் அதிகபட்சமாக 5,072 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

 Warning against encroachments!

களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதியில் உலா வரும் புலி (கோப்புப் படம்)

Published On :24 ஆகஸ்ட் 2026, 8:10 am IST

தமிழகத்தின் "களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்', "ஸ்ரீவில்லிபுத்தூர் -மேகமலை புலிகள் காப்பகம்' மற்றும் "கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம்' ஆகியவை அடங்கிய அகத்தியமலை நிலப்பரப்பின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தும் பெருகியும் வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் -மேகமலை புலிகள் காப்பக பகுதிகளில் அதிகபட்சமாக 5,072 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்துக்காக பழங்குடியினரும், ஏழைத் தொழிலாளர்களும் இதுபோன்ற பகுதிகளில் குடிசை அமைத்துக் கொள்வார்கள். பெரும் பணக்காரர்கள் ஓய்வு விடுதிகளையும் சொகுசு விடுதிகளையும் அமைத்துக் கொள்வது புதிதல்ல. ஆனால், இந்த விவகாரத்தில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, ராணுவம், காவல் துறை, சிஆர்பிஎஃப், வனத் துறை, வருவாய்த் துறை, மின்சார வாரியம், பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பணிபுரியும் அல்லது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களான 118 பேர் 15 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், 116 அரசு மற்றும் பொதுப் பயன்பாட்டுக் கட்டமைப்புகள் முன் அனுமதியின்றி இந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ளன.

இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை (ஆக. 19) நடைபெற்றது. அப்போது, அகத்தியமலை சூழலியல் நிலப்பரப்பின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏற்கெனவே உத்தரவிட்டபடி விரைந்து அகற்றாவிட்டால் துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும் என்று உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா "ஸ்ரீவில்லிபுத்தூர் -மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் 4,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு பல ஏக்கர் நிலங்களில் இலவம் பஞ்சு பயிரிடப்பட்டுள்ளது. அவர்களில் சில குடும்பத்தினர் பல தலைமுறையாக அந்தப் பகுதியிலேயே வசித்து வருபவர்கள். எனவே, அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகே அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியும். இங்கு இயங்கி வந்த விடுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது' என்று கோரிக்கை விடுத்தார்.

இந்தப் பின்னணியில்தான் "ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்றால் துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்' என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிந்தே நடைபெறுகின்றன. இவை அகற்றப்படாவிட்டால் எதிர்காலத்தில் பாதிப்புகளை அனைவருமே சந்திக்க நேரிடும்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வனப் பகுதியில் தொடர்ந்து விதிகளை மீறி கட்டுமானங்கள் எழுப்பப்படுவதால் அதன் விளைவை மக்கள் இப்போது எதிர்கொண்டு வருகிறார்கள். வன விலங்குகளின் வாழ்விடங்கள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படுவதால் அவை பாதை மாறி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது இப்போது வாடிக்கையாகவே ஆகிவிட்டது.

நீலகிரி மாவட்டத்தில் 2026 ஜனவரி முதல் கடந்த 8 மாதங்களில் மட்டும் காட்டு யானைகள் தாக்கியதில் குறைந்தபட்சம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் புலி தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் தங்கும் விடுதிகள் கட்டுவது, மலைகளைக் குடைந்து சாலைகள் அமைப்பது போன்றவை பேரழிவுக்கே வழிவகுக்கும் என்று சூழலியல் நிபுணர் மாதவ் காட்கில் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு கடந்த 2011-ஆம் ஆண்டிலேயே எச்சரித்துள்ளது.

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் 4,000 குடும்பங்களை அகற்ற வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த 2020-ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அந்த

எச்சரிக்கை காற்றில் பறக்கவிடப்பட்டதால் 2024 ஜூலையில் முண்டக்கை, சூரல்மலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன.

இமயமலை அடிவாரத்தில் உள்ள "தேவபூமி'யான உத்தரகண்ட் மற்றும் ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாடற்ற கட்டுமானங்களால் நிலச்சரிவு என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஜோஷிமட் என்ற நகரமே புதையக்கூடிய அபாயத்தைச் சந்தித்து வருகிறது. இந்தப் பின்னணியில், அகத்தியமலை வனப் பகுதிகளில் வாழும் 4,600 குடும்பங்களுக்கும் மாற்று ஏற்பாடுகள் விரைந்து செய்யப்பட வேண்டும். வனப் பகுதி என்று தெரிந்தே ஆக்கிரமித்த 118 அரசு ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வாக்கு வங்கிக்காக அல்லது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்காக அஞ்சி வன ஆக்கிரமிப்பாளர்களை அரசு பாதுகாக்காது என்ற எண்ணம் ஏற்படும்படி அரசின் நடவடிக்கை அமைய வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் நடைபெறாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.