தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

தொடரத்தான் வேண்டும்!

இந்தியாவும் முடிந்தவரை, மரண தண்டனை வழங்குவதில் மிகவும் கவனமாகவும், கூடியவரையில் தவிர்க்கும் விதத்திலும்தான் செயல்பட்டு வருகிறது.

punishment

மரண தண்டனை - கோப்புப்படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:46 pm IST

மனித உரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் நாகரிக சமுதாயத்தில், மரண தண்டனை தொடரத்தான் வேண்டுமா? என்கிற கேள்வி கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகிறது. மரண தண்டனை மட்டுமல்ல, மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பவர்களைத் தூக்கில் தொங்கவிட்டுத் தண்டனையை நிறைவேற்றும் முறையும் பலராலும் விமர்சிக்கப்பட்டு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.

இரண்டாவது கேள்விக்கு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு அண்மையில் விடையளித்திருக்கிறது. தூக்கிலிட்டு ஒருவருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதிகள், தூக்கு தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டனர். அரசமைப்புச் சட்டம் இந்தியக் குடிமகனுக்கு சட்டப்பிரிவு 21 மூலம் வழங்கி இருக்கும் பாதுகாப்புக்கு எதிரானது என்கிற கருத்தையும் நிராகரித்திருக்கிறார்கள்.

நீண்ட தூக்குக் கயிறுமூலம் முறையாக நிறைவேற்றப்படும் தூக்கு தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, தனிமனித கெüரவத்துக்கு இழுக்கு உள்ளிட்ட வாதங்களை விக்ரம் நாத் அமர்வு நிராகரித்திருக்கிறது. முந்தைய 1983 தீனா வழக்கின் தீர்ப்பை திருத்தி எழுதுவதற்கான காரணங்கள் இல்லை என்றும் தங்களது தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள் நீதிபதிகள். அண்மையில் நாடாளுமன்றம் இயற்றி இருக்கும் "பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா' எனப்படும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 393 (5) பிரிவு, தூக்கு தண்டனையை தவிர்க்காமல் விட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றும்போது, உடனடியாக நினைவிழப்பதில்லை என்றும், அது மனிதாபிமானமற்ற செயல் என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகள் மரண உத்தரவாதத்தை உறுதி செய்வதில்லை என்பது மத்திய அரசின் எதிர்வாதமாக இருந்தது.

தூக்கு தண்டனையை ரத்து செய்ய மறுத்துவிட்டதே தவிர, தூக்கு தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்வதில் தவறில்லை என்று உச்சநீதிமன்ற அமர்வு கருத்துத் தெரிவித்திருக்கிறது. தூக்கு தண்டனை வழங்கப்படுவதாலேயே, குற்றவாளிக்கான அரசியல் சாசனப் பாதுகாப்பு முற்றிலுமாக அகன்று விடுவதில்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

மரண தண்டனை தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்த விவாதத்துக்கும் நாம் விடைகாண வேண்டும். 2003-இல் வெளியான 187-ஆவது சட்ட ஆணைய அறிக்கையில் தூக்குக்குப் பதிலாக ஊசி போட்டு தண்டனையை நிறைவேற்றலாம் என்கிற பரிந்துரை வழங்கப்பட்டது; 2015-இல் வெளியான 262-ஆவது சட்ட ஆணைய அறிக்கை பயங்கரவாதம், போர்க் குற்றங்களைத் தவிர ஏனைய சாதாரண குற்றத்துக்கு மரண தண்டனையை அகற்றிவிடலாம் என்று பரிந்துரைத்திருக்கிறது.

பஞ்சாப் அரசுக்கு எதிரான பக்சன் சிங் வழக்கில், மிக மிக அரிதானதாகத்தான் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், விசாரணை நீதிமன்றங்களில் மரண தண்டனை வழங்குவது தொடர்கிறது. பெரும்பாலான மரண தண்டனைத் தீர்ப்புகள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன அல்லது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன.

2016 முதல் 2025 வரையிலான பத்தாண்டுகளில் 1,279 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், கடந்த இரண்டாண்டுகளாக உச்சநீதிமன்றம் எந்தவொரு மரண தண்டனையையும் உறுதி செய்யவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அதை மாற்ற முடியாது என்பதால் உச்சநீதிமன்றம் இதை மிக கவனமாகக் கையாள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மரண தண்டனை தேவைதானா என்பது உலகளாவிய அளவில் விவாதப் பொருளாகத் தொடர்கிறது. 110-க்கும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக அகற்றி இருக்கின்றன. ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பிரேஸில், சிலி, இஸ்ரேல், பெரு உள்ளிட்ட நாடுகளில் போர்க் குற்றம் உள்ளிட்ட கடுமையான குற்றங்களைத் தவிர, ஏனைய குற்றங்களுக்கு மரண தண்டனை அகற்றப்பட்டிருக்கிறது.

லாவோஸ், ரஷியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் மரண தண்டனை தொடர்ந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் யாருக்கும் அதிகபட்ச தண்டனை விதிக்கப்படவில்லை. அந்தச் சட்டத்தை பயன்படுத்துவதில்லை என்று கொள்கையளவில் முடிவெடுத்திருக்கின்றன. சீனா, இந்தியா, ஈரான், சவூதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட 60-க்கும் குறைவான நாடுகளில்தான் இன்னும் மரண தண்டனை தொடர்கிறது.

இந்தியாவும் முடிந்தவரை, மரண தண்டனை வழங்குவதில் மிகவும் கவனமாகவும், கூடியவரையில் தவிர்க்கும் விதத்திலும்தான் செயல்பட்டு வருகிறது. கடந்த 2003 முதல் இதுவரையில் எட்டு பேருக்கு மட்டும்தான் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நீதிபதி விக்ரம்நாத் அமர்வின் தீர்ப்பு தூக்கு தண்டனையை ரத்து செய்யவில்லை என்றாலும், அதிகபட்ச தண்டனை தொடரத்தான் வேண்டுமா என்பது குறித்த விவாதம் தொடரத்தான் வேண்டும்!

அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.

தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

திருக்குறள் (எண் 203) அதிகாரம்: தீவினை அச்சம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.