
இந்தியாவின் ஒருங்கிணைந்த எண்ம பணப் பரிவர்த்தனையான யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. குறுகிய காலத்துக்குள்ளேயே யுபிஐ சேவை மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பிரமிக்கத்தக்கது; பிரம்மாண்டமானது. பணப் பரிவர்த்தனையை மிகவும் எளிமையாக்கியதுடன் மட்டுமல்லாமல், பெரும் வர்த்தக நிறுவனங்கள் முதல் சாலையோர கடைகள் வரை ஒரு நிதிப் பொறுப்புடைமைக்குள் கொண்டுவந்திருக்கிறது.
2016-17-ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.7,000 கோடி யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட நிலையில், 2025-26-இல் அது ரூ.314 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இது 4,000 மடங்கு அதிகம். அதிலும் நிகழாண்டு யுபிஐ பரிவர்த்தனை சாதனையின் மகுடமாக கருதப்படுகிறது. முதல்முறையாக 2026, மே மாதத்தில் 2,320 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. ஜூலையில் 2,366 கோடி பரிவர்த்தனைகளுடன் 10 ஆண்டுகளில் இல்லாத வகையிலான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் எண்ம பொது உள்கட்டமைப்பின் முதுகெலும்பாகத் திகழும் யுபிஐ சேவையில் இப்போது வரை 703 வங்கிகள் இணைந்திருக்கின்றன. உலகின் மிகப்பெரும் பரிவர்த்தனை அமைப்பாக யுபிஐ சேவையை சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) அங்கீகரித்திருப்பதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடியும். ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், பூடான், இலங்கை, நேபாளம், சிங்கப்பூர், மோரீஷஸ், கத்தார், கம்போடியா, கிரீஸ் மற்றும் மாலத்தீவு ஆகிய 11 நாடுகளில் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது.
2016-17-ஆம் நிதியாண்டில் 1.78 கோடியாக இருந்த யுபிஐ வருடாந்திர பரிவர்த்தனைகள், 2025-26-ஆம் நிதியாண்டில் 24,162 கோடி பரிவர்த்தனைகளாக அதிகரித்திருக்கிறது.
பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில் இது 13,000 மடங்கு அதிகரிப்பாகும். இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 66 கோடி பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
நாட்டின் எண்ம பணப் பரிவர்த்தனை தளமான யுபிஐ, ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை கண்காணிப்பின்கீழ் செயல்படும் இந்திய தேசிய பணப் பரிவர்த்தனை ஆணையத்தால் (என்பிசிஐ) கடந்த 2016, ஆக.25-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 21 வங்கிகள் உறுப்பினராக இதில் இணைந்தன. அவை யுபிஐ வசதி கொண்ட தங்களின் மொபைல் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது.
2016 டிசம்பரில் "பீம்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இது, பயனர்கள் அறிதிறன்பேசி மூலம் நேரடியாக வங்கியிலிருந்து வங்கிக்குப் பணம் பரிவர்த்தனை செய்ய அனுமதித்தது. 2017-இல் "க்யூஆர் கோடு' மூலம் "ஸ்கேன்' செய்து பணம் அனுப்பும் முறை அறிமுகமானது. இது, பணம் பெறுபவரின் தகவல் மற்றும் சரியான மொத்த தொகை போன்ற பரிவர்த்தனை விவரங்களை தானாகவே உள்ளடக்கி பணப் பரிவர்த்தனையை எளிதாக்கியது.
யுபிஐ சேவையின் அடுத்தகட்ட பாய்ச்சலாக "யுபிஐ 2.0' 2018-இல் தொடங்கியது. 2020-22-இல் சந்தாக்கள், பயன்பாட்டுக் கட்டணங்கள், காப்பீட்டுத் தவணைகள், எஸ்ஐபி, இஎம்ஐ போன்றவற்றுக்காக பணம் செலுத்துவதை மேலும் எளிதாக்கும் "ஆட்டோ பே' வசதி யுபிஐயில் அறிமுகமானது.
"பின்' எண்களைப் பயன்படுத்தாமல் பணம் செலுத்துவதை வேகமாக்கும் "யுபிஐ லைட்', யுபிஐ சேவையில் கிரெடிட் அட்டைகள் இணைப்பு என இந்தியாவின் நிதித் தொழில் நுட்பத்தை நாளுக்கு நாள் எளிமையாக்கி வருகிறது யுபிஐ. யுபிஐயின் சிறப்பே அது பயன்படுத்தும் அனைவருக்கும் முற்றிலும் இலவசம் என்பதுதான். யுபிஐ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் (வணிகர் தள்ளுபடி விகிதம் - எம்டிஆர்) விதிக்க வகை செய்யும் "வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026' இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, யுபிஐ சேவைக்கு கட்டணம் விதிக்கப்படுவதாக வெளியான தகவல்களால் பொதுமக்களுக்கு எழுந்த சந்தேகத்தையும் மத்திய அரசு தீர்த்து வைத்திருக்கிறது.
"யுபிஐ உள்பட பிற மின்னணு பணம் செலுத்தும் நடைமுறைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் அல்லது வரி விதிப்பதை இந்த மசோதா முன்மொழியவில்லை. பரிவர்த்தனைகள் மற்றும் தீர்வை சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள், யுபிஐ அமைப்பின் பாதுகாப்பை பலப்படுத்தவும், இணையவழி மோசடிகளைத் தடுக்கவும், தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்தவுமே செய்யப்பட்டுள்ளன' என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
சாதாரண மற்றும் குறைந்த மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பெரும்பாலான வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு "எம்டிஆர்' கட்டணம் வசூலிக்கப்படாது. வணிகர்கள் தொடர்ந்து கட்டணம் இன்றி யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். மாறாக, குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் குறைந்த எண்ணிக்கையிலான வர்த்தகர்களுக்கு மட்டுமே "எம்டிஆர்' கட்டண விதிப்பு பொருந்தும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது.
சிறு வணிகர்கள் இதில் பாதிக்கப்படக் கூடாது. உலகளாவிய அளவில் இந்தியாவின் பெயருக்கு மகுடம் சூட்டியுள்ள யுபிஐ சேவை மேன்மேலும் வலுப்பெற வேண்டும். அது இலவச சேவையாகத் தொடர வேண்டும்.
திருக்குறள்
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.
திருக்குறள் (எண் 637) அதிகாரம்: அமைச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







