

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தன்மை போன்ற காரணங்களால் மின்சார வாகனங்கள் கவனம் பெறுகின்றன. அரசுத் தரப்பிலிருந்தும் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கு மானிய உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இரு சக்கர மின்சார வாகனங்களைத் தொடர்ந்து, பயணிகள் மின்சார வாகனங்களான கார், பேருந்து போன்றவற்றின் பயன்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், இந்தியாவின் பயணிகள் மின்சார வாகனச் சந்தை கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டில் பயணிகள் மின்சார வாகனப் பதிவுகள் 3,252-ஆக இருந்தது. இது 2025-இல் சுமார் 1.70 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பகுதி தென் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவிலான மின்சார வாகனப் பதிவுகளில் இது மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
இந்தியாவில் 2015-ஆம் ஆண்டு முதல் மின்சார வாகன உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. இது படிப்படியாக வளர்ச்சி கண்டு, 2020-ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களின் முக்கியத்துவம் தெரியத் தொடங்கியது. அப்போது, இதன் விற்பனை பெரிய நகரங்களில் மட்டுமே இருந்துவந்த நிலையிலும், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களும் மின்சார வாகனப் பதிவுகளில் சுமார் 38 சதவீதத்தைக் கொண்டிருந்தன.
அதிக விற்பனை என்ற அளவின் அடிப்படையில் மிகப் பெரிய சந்தையாக உருவெடுத்துள்ள மகாராஷ்டிரத்துடன் இணைந்து, முதல் தரவரிசையில் உள்ள மாநிலங்களில் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகியவை கடந்த 5 ஆண்டுகளாக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
2024, 2025-ஆம் ஆண்டுகளில் தேசிய அளவிலான நான்கு சக்கர மின்சார வாகனப் பதிவுகளில் சுமார் 40 சதவீதத்தை மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை கொண்டுள்ளன. நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துவரும் நிலையில், குறிப்பிட்ட பிராந்தியங்களில் மட்டும் சந்தை வாய்ப்புகள் குவிந்திருக்கின்றன.
மொத்தத்தில் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கவும், பொதுமக்கள் அவற்றை வாங்கிப் பயன்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. இருப்பினும், தொடக்கத்தில் மின்சார வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காணப்பட்டது. வாகனங்களுக்கான மின்னேற்றம், விலை, பராமரிப்பு போன்றவை அதற்கு முக்கியக் காரணங்களாக இருந்தன.
இவற்றைக் களையும் விதமாக மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்கலனின் கொள்ளளவுத் திறன் அதிகரிப்பு, பராமரிப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தந்தன. பொது மின்னேற்ற நிலையங்களை நிறுவ நிதி ஒதுக்கி அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. மின்னேற்று உள்கட்டமைப்பை நிறுவுவதற்கும், மின்சார வாகன உற்பத்தி வளர்ச்சிக்கும் பிரதமரின் "புத்தாக்க வாகன மேம்பாட்டில் மின்சார வாகனப் புரட்சித் திட்டம்' (பி.எம். இ-டிரைவ்) திட்டம் கடந்த 2024-இல் அறிவிக்கப்பட்டது.
சலுகைகள், வசதிகள் மட்டுமே தென்மாநிலங்களில் பயணிகள் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கக் காரணமாக அமைந்து விடவில்லை. நகர்ப்புறங்களின் வளர்ச்சி மற்றும் மக்கள் அடர்த்தி, வாகனப் பயன்பாட்டு முறையில் எளிமை உள்ளிட்டவையும் பிரதான காரணங்களாக இருந்தன.
நகரங்களின் சாலை வசதிகள், நகரங்களுக்குள் பயணிப்பது போன்றவற்றுக்கு பயணிகள் மின்சார வாகனங்கள் ஏற்றவையாகவும், செலவு அடிப்படையில் சிக்கனமாகவும் உள்ளன என்ற கருத்து வலுப்பெறத் தொடங்கியது. இது மட்டுமல்லாது, முக்கிய நகரங்களுக்கு இடையேயான சாலை வசதிகள், குறிப்பாக, பெங்களூரு-சென்னை, பெங்களூரு-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலைகள் போன்றவை மின்சார வாகனங்கள் தடையின்றி பயணிக்கும் விதமாக இருப்பதும், பெட்ரோல், டீசல் பயன்பாடு கார்கள் வாங்க நினைப்போரை மின்சார வாகனங்களை நோக்கி பார்வையைத் திரும்பச் செய்தன.
நாடு முழுவதும் பயணிகள் மின்சார வாகனங்களின் சந்தைப் பங்கு 2024-இல் 2.4 சதவீதமாக இருந்த நிலையில், 2025-இல் 4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக வாகன விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தரவு தெரிவிக்கிறது. கர்நாடகம், தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் மின்சார வாகனப் பதிவுகளில் சுமார் 30 முதல் 35 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
சாலை வரி, பதிவுக் கட்டணத் தள்ளுபடி போன்ற சலுகைகளை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வழங்கினாலும், அவை மட்டுமே விற்பனை அதிகரிப்புக்கு முதன்மைக் காரணங்கள் அல்ல; மின்சார வாகனங்களின் விலை குறைந்து வருவதாலும், வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு அனுபவம், மின்னேற்றம் செய்யும் வசதி மற்றும் பராமரிப்புச் செலவு, அதிக ஊதியம் பெறும் மக்கள் போன்றவையும் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியமான காரணங்கள் என்று மின்சார வாகன உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெட்ரோல், டீசலுக்கான மாற்றை விரைவில் கண்டறிய வேண்டும்; பயணிகள் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பது புவிவெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்டவற்றை எதிர்கொள்வதற்கான அவசரத் தேவைகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.