போதைப் பொருள் தடுப்பு முகமையின் 2026-ஆம் ஆண்டு அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 26) வெளியிட்டார். நமது அண்டை நாடான மியான்மரில் இருந்து போதைப் பொருள்கள் இந்தியாவுக்குள் கடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது போதைப் பொருள் தடுப்பு முகமை (நார்கோட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோ - என்சிபி) வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னர் வரை அந்த நாட்டில் இருந்து அதிக அளவிலான போதைப் பொருள்கள் பல நாடுகளுக்கும் கடத்தப்பட்டன.
தலிபான் அரசு 2022-இல் போதைப் பொருள்களுக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து அவற்றின் உற்பத்தி, விநியோக மையமாக மியான்மர் உருவெடுத்துள்ளது. கடந்த 2021 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் மட்டும் மியான்மரில் போதைப் பொருள் பயிரிடும் பரப்பளவு 56 சதவீதம் அதிகரித்துள்ளது. 45,200 ஹெக்டேர் அளவுக்கு அங்கு போதைப் பொருள்கள் பயிரிடப்படுகின்றன.
மியான்மருடன் இந்தியா 1,643 கி.மீ. தொலைவுக்கு எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. மியான்மரில் இப்போதுள்ள ராணுவ அரசுக்கு எதிராகப் போராடி வரும் ஆயுதம் தாங்கிய குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஷான் மாகாணத்தில் இருந்து மணிப்பூருக்கும், சின் மாகாணத்தில் இருந்து மிúஸôரம் மாநிலத்துக்கும் அதிக அளவு போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன.
போதைப் பொருள் கடத்தலையும் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதக் குழுக்கள் சுலபமாகச் சென்று வருவதையும் தடுக்க எல்லை முழுவதிலும் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், உள்ளூர் மக்கள் எதிர்ப்பு, பல நடைமுறை சிக்கல்கள் காரணமாக இதுவரை 100 கி.மீ. தொலைவுக்குக்கூட வேலி அமைக்கப்படவில்லை.
கலாசார ரீதியாக தொடர்புள்ள, இருநாட்டு எல்லைப்புற கிராமங்களில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் அதிக கட்டுப்பாடுகள் இல்லாமல் 16 கி.மீ. தொலைவு வரை சென்றுவர இரு நாட்டு அரசுகளும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதுவும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது. மணிப்பூரில் தொடர்ந்து நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் பணமும் ஒரு காரணமாக உள்ளது.
தரை மார்க்கமாக மியான்மரில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன என்றால், கடல் மார்க்கமாகவும் ட்ரோன்களை பயன்படுத்தி வான் வழியாகவும் போதைப் பொருள்கள் இந்தியாவுக்கு கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. கடலோர மாநிலமான குஜராத்தில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.13,600 கோடி மதிப்புள்ள 1.36 லட்சம் கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5,346 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப்புக்கு அதிக அளவில் ட்ரோன்கள் மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன. ட்ரோன் மூலம் போதைப் பொருள் கடத்தப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை 2021-இல் வெறும் மூன்றாக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து 2024-இல் 178-ஆகவும், 2025-இல் 305-ஆகவும் உயர்ந்துள்ளது. ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீரிலும் ட்ரோன்கள் மூலம் போதைப் பொருள் கடத்துவது அதிகரித்து வருகிறது.
போதைப் பொருள் கடத்தல் இளைஞர்களை சீரழித்து வருகிறது. அவர்கள் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவதுடன் பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகிய குடும்ப அங்கத்தினர்களுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது, அதனால் அமைதியின்மை, விவாகரத்து அதிகரித்தல், முறையற்ற உறவுகள் அதிகரித்தல், போதைக்கு அடிமையானவர்களின் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுதல், அக்கம்பக்கத்தவர்களுடன் தகராறு, பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், கொலை போன்றவற்றுக்கு போதைப் பழக்கம் காரணமாகிறது.
போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தர சிறப்பு நீதிமன்றங்கள், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்களின் நடைமுறைகளைக் கண்டறிந்து முடக்குதல் போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கிய தொலைநோக்கு ஆவணத்தை புது தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 26) வெளியிட்டுள்ளார். நக்ஸல் பயங்கரவாதம் எப்படி கெடு விதித்து ஒடுக்கப்பட்டதோ, அதேபோன்று போதைப் பொருள்களையும் மூன்று ஆண்டுகளில் முற்றிலும் அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் காவல் துறையால் நாள்தோறும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதையும் மீறி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப் பொருள்கள் விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், எதிர்கால தலைமுறையைக் காக்க, மத்திய, மாநில அரசுகள் இணைந்து போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வது காலத்தின் கட்டாயம்.
இளைதுஆக முள்மரம் கொல்க; களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும்.
திருக்குறள் (எண் 879 ) அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

போதைப் பொருள் தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



