உயர் கல்வியில் இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், இரண்டு மருத்துவப் பல்கலைக்கழகங்களும் உள்ள முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. பள்ளிக் கல்வியிலும் சரி, உயர் கல்வியிலும் சரி ஏனைய மாநிலங்களைவிடச் சிறப்பான கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாநிலம் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருக்கும் நிலை வருத்தமளிக்கிறது.
புதிதாக அமைந்திருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசும், அதில் உயர் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் பெ.விஸ்வநாதனும் துணைவேந்தர்கள் நியமனப் பிரச்னையை மிகவும் சாதுர்யமாகவும், பொறுப்புணர்வுடனும் கையாள முற்பட்டிருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. மோதல் போக்கைக் கைவிட்டு, ஆளுநருடன் கலந்து பேசித் துணைவேந்தர்களை நியமிப்பதில் அரசு முனைப்புக் காட்டுவது வரவேற்கத்தக்கது.
உயர் கல்வித் துறை எதிர்கொள்ளும் இன்னொரு முக்கியமான பிரச்னை போதிய அளவில் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது. தேசிய அளவிலும் பிரச்னையாக இருக்கும் ஆசிரியர் பற்றாக்குறை தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களையும் பாதித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரத்தில், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முனைப்பில், உடனடியாக ஏற்படும் பாதிப்புகளைக் கடந்து போவது புத்திசாலித்தனமாகாது.
ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் பிரச்னை பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது. சீரான இடைவெளியில் உதவிப் பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், ஆராய்ச்சி மாணவர்களின் உயர் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
தேசிய அளவில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்னைக்கு இடைக்காலத் தீர்வு காணும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு 2007-இல் ஒரு பரிந்துரையை அனுப்பியது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 65-ஆக உயர்த்தலாம் என்பதுதான் அந்தப் பரிந்துரை. இதை ஏற்றுக்கொண்ட பல மாநிலங்களில் பல்கலைக்கழக ஆசிரியர்களின் பணிஓய்வு வயது 65-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் ஏனோ இந்த நடைமுறை அமல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாகப் பல ஆண்டுகளாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அரசுகள் எந்த முடிவும் எடுக்காமல் இந்தப் பிரச்னையைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தன. இந்தப் பிரச்னை குறித்து கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பேராசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் மாணவர்களின் உயர்கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்டவை மட்டுமல்லாமல் கல்வியின் தரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதை அந்த மனுவில் கூட்டமைப்பு சுட்டிக்காட்டி இருந்தது. பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆசிரியர்கள்கூட பல கல்வி நிறுவனங்களில் இல்லை என்பதையும், தற்போது பணியில் உள்ள பல பேராசிரியர்கள் அடுத்த சில ஆண்டுகளில் பணிஓய்வு பெறும்போது ஆசிரியர் பற்றாக்குறை மேலும் தீவிரமடையும் என்பதையும் அந்த மனு தெளிவாக விளக்கியிருக்கிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பணிஓய்வு வயதை 65-ஆக உயர்த்தும் பரிந்துரை பரிசீலனைக்கு உரியது என்று நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. பணிஓய்வு வயதை 60-இல் இருந்து 65-ஆக உயர்த்தும் கோரிக்கையை அடுத்த எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்துத் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகப் பல்கலைக்கழகங்களில் அதிக அளவு உதவிப் பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போதாதென்று அடுத்த இரண்டு ஆண்டுகளில் 378 பேராசிரியர்கள் பணிஓய்வு பெற இருக்கின்றனர். அதையும் சேர்த்துப் பார்த்தால் மொத்தக் காலிப் பணியிடங்கள் 50% அளவில் உயரும் என்பதை நாம் உணர வேண்டும்.
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவது என்பது எளிதானதல்ல. அதற்கான தகுதித் தேர்வும், நடவடிக்கைகளும் பல விதிமுறைகளுக்கு உட்பட்டவை. அதற்காகக் காத்திருந்தால், பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். பேராசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்தால், உயர் கல்வி பெறும் மாணவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களது ஆராய்ச்சிகளும் தடைபடும்.
பணிஓய்வு வயதை 65-ஆக உயர்த்தித் தற்போதுள்ள பேராசிரியர்களைத் தக்கவைத்துக் கொள்வதன்மூலம், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைப்பதுடன், மேலும் பல ஆராய்ச்சி மாணவர்களைக் கல்வித் துறைக்கு ஈர்க்கவும், ஆசிரியர்களை உருவாக்கவும் முடியும். 60 வயதை நிறைவு செய்த, அதே நேரத்தில் உடல், மனதளவில் பணியாற்றத் தகுதியானவர்களைத் தக்கவைத்துக் கொள்வது உயர் கல்வியின் தரத்தை மேலும் உயர்த்தும்.
பணியிடங்கள் நிரப்பப்படும் வரை, 60 வயது நிறைவடைந்து பணிஓய்வு பெறும் பேராசிரியர்களின் பணிக்காலத்தை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதும், புதிய நியமனங்கள், பதவி உயர்வுகளை மேற்கொள்வதும் தாமதமாகலாகாது.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும்
உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.
திருக்குறள் (எண் 637) அதிகாரம்: அமைச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதவிப் பேராசிரியர்கள் தேர்வில் சிலரது மதிப்பெண்களில் மட்டும் வண்ண அடையாளம் ஏன்? - அன்புமணி

அரசுப் பள்ளிகளில் 18,107 காலிப் பணியிடங்களை நிரப்புக! அன்புமணி ராமதாஸ்






