நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி, வழக்கம்போல எதிர்பாராத திருப்பங்களுடன் கோலாகலமாக முடிவடைந்திருக்கிறது. மகா கும்பமேளா முடிந்து, கூட்டம் கலைந்து காட்சியளிக்கும் பிரயாக்ராஜ் (அலாகாபாத்) போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி முடிந்து விட்டிருக்கும் நிலைமை.
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸியின் மெட்லைஃப் மைதானத்தில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆர்ஜென்டீனாவைத் தோற்கடித்து, ஃபிஃபா உலகக் கோப்பையை 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் கைப்பற்றி இருக்கிறது. ஃபெரான் டோரஸ் 106-ஆவது நிமிஷத்தில் அடித்த கடைசி நேர கோல், ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயினை சாம்பியனாக்கியது.
உலகிலேயே, மிக அதிகமான ரசிகர்களைக் கொண்ட கால்பந்து எல்லைகளை அகற்றி, அரசியல் மனமாச்சர்யங்களைக் கடந்து நிற்கும் பேரதிசயம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஃபிஃபா போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 32-லிருந்து 48-ஆக அதிகரிக்கப்பட்டபோது பல விமர்சனங்கள் எழுந்தன. விளையாட்டின் தரம் குறைந்து விடும் என்று ஐயப்பாடு எழுப்பப்பட்டது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் அதிக அளவில் பங்கேற்கும் உலகளாவிய விளையாட்டுப் போட்டியாகக் கால்பந்து உலகக் கோப்பை இப்போது உயர்ந்திருக்கிறது.
பராகுவே, மொராக்கோ, ஜப்பான், எகிப்து, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் இறுதிச் சுற்றுகளை எட்டவில்லை என்றாலும், உலகக் கோப்பை சாம்பியன்களான ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளை நிலைகுலைய வைத்தன. ஃபிஃபா 2026 போட்டியில் பங்கேற்ற சின்னஞ்சிறிய நாடான கேப் வெர்ட் ஸ்பெயினை 0-0 என்கிற அளவில் சமன் செய்ததையும், பெல்ஜியத்தை 1-1 என்கிற அளவில் எகிப்து சமன் செய்ததையும் ரசிகர்கள் பார்த்துப் பரவசமடைந்ததை மறக்க முடியாது.
எதிர்பாராத திருப்பங்கள் கால்பந்து உலகக் கோப்பைக்குப் புதிதல்ல. 1990-இல் கேமரூன், 2002-இல் தென் கொரியா, 2014-இல் கோஸ்டா ரிக்கா, 2022-இல் மொராக்கோ போல 2026-இல் கேப் வெர்ட், நியூஸிலாந்து, எகிப்து, மொராக்கோ, செனகல் உள்ளிட்ட நாடுகள், நாளைய சாம்பியன்களாகத் தங்களை அடையாளம் காட்டி இருக்கின்றன.
உலகக் கோப்பையின் 96 ஆண்டு வரலாற்றில் இதுவரை எட்டு நாடுகள்தான் கோப்பையை வென்றிருக்கின்றன. பிரேசில் (5), ஜெர்மனி (4), இத்தாலி (4), ஆர்ஜென்டீனா (3), பிரான்ஸ் (2), உருகுவே (2), ஸ்பெயின் (2), இங்கிலாந்து (1) உள்ளிட்ட அந்த எட்டு நாடுகளும் ஐரோப்பா அல்லது தென் அமெரிக்காவைச் சேர்ந்தவை. இனிவரும் காலங்களில் ஃபிஃபா கோப்பையை அந்த நாடுகள் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்பதுதான் கேள்வி.
23-ஆவது ஃபிஃபா போட்டி பல ஏமாற்றங்களை அளிக்காமல் இல்லை. மெஸ்ஸி (ஆர்ஜென்டீனா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) சந்தித்த ஆறாவது உலகக் கோப்பைப் போட்டி. இருவருமே கோப்பையை வெல்லவோ, சாதனை படைக்கவோ முடியாமல் விடைபெறுகிறார்கள்.
இரண்டாவது இடத்தைப் பிடித்தாலும்கூட ஆர்ஜென்டீனாவும், அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸியும் மிகுந்த மன வேதனையுடனும், ஏமாற்றத்துடனும்தான் நாடு திரும்புகிறார்கள் என்பது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. 1978,1986,2022 போட்டிகளில் கோப்பையை வென்ற ஆர்ஜென்டீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாகத் தொடர்ந்து கோப்பையைத் தக்க வைத்துக் கொண்ட அணி என்கிற வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறது. உலகக்கோப்பைப் போட்டிகளில் மிக அதிகமான கோல்களைஅடித்த சாதனையாளராக நினைத்த மெஸ்ஸியின் கனவும் தகர்ந்தது. ஃபிரான்ஸின் கிலியன் பாபே அந்தச் சாதனையைப் படைத்து "கோல்டன் பூட்' பரிசையும் பெற்று விட்டார்.
2022-இல் நழுவ விட்ட கோப்பையை இந்த முறை பிடித்து விட நினைத்த பிரான்ஸின் முனைப்பும், 1966-க்குப் பிறகு கைப்பற்ற முடியாத கோப்பையை இந்த முறை வென்றுவிட வேண்டும் என்கிற இங்கிலாந்தின் முயற்சியும் வெற்றி பெறவில்லை. மூன்றாவது இடத்தை எட்டிப் பிடித்த ஆறுதலுடன் வெளியேறியது இங்கிலாந்து. ஐந்து முறை சாம்பியனான பிரேஸிலும், நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி, இத்தாலியும் அடைய முடியாத வெற்றியை ஸ்பெயின் பெற முடிந்தது எதனால்?
எப்போதும் ஆர்ஜென்டீனா (லயனல் மெஸ்ஸி), பிரான்ஸ் (கிலியன் பாபே), போர்ச்சுகல் (கிறிஸ்டியானோ ரொனால்டோ) அணிகளை அதன் நட்சத்திர வீரர்கள்தான் அடையாளம் காட்டுகிறார்கள். அந்த அணிகளின் வெற்றி நட்சத்திர வீரர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால், ஸ்பெயின் அணி, விளையாடும் அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சியால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. "லா ரோஜா' (சிவப்புச் சட்டைக்காரர்கள்) என்று அழைக்கப்படும் ஸ்பெயின் அணியின் திட்டமிட்ட விளையாட்டுக்குக் கிடைத்த பரிசுதான் ஃபிஃபா 2026 உலகக் கோப்பை!
வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவின
வாகும். மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
திருக்குறள் (எண் 595) அதிகாரம்: ஊக்கம் உடைமை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








