இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஆய்வறிக்கையின் எச்சரிக்கை!

கல்வியும் வேலைவாய்ப்பும் ஒன்றையொன்று கைகோத்துச் சென்றால்தான், வேலையில்லாத் திண்டாட்டம் என்கிற பிரச்னையை எதிர்கொள்ள முடியும்.

News image
Updated On :24 மார்ச் 2026, 11:07 pm

ஆசிரியர்

கல்வியும் வேலைவாய்ப்பும் ஒன்றையொன்று கைகோத்துச் சென்றால்தான், வேலையில்லாத் திண்டாட்டம் என்கிற பிரச்னையை எதிர்கொள்ள முடியும். விவசாயம் மட்டுமே வேலைவாய்ப்புக்கான ஒரே வழி என்கிற நிலையைத் தொழில் புரட்சி மாற்றி அமைத்தது. தொழிற்சாலைகள் வேலைவாய்ப்புகளை வழங்கின. தொழில்நுட்ப வளர்ச்சி கல்வியின் தரத்தைப் புதிய தளத்துக்கு உயர்த்தியது.

தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்தது போலவே, கல்விச் சாலைகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் அதிகரித்தனர். பட்டம் பெறும் பட்டதாரிகளுக்கு, அவர்களது கல்வித் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அண்மையில் இந்தப் பிரச்னை குறித்த ஆய்வை அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மேற்கொண்டது. படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கும், பொருளாதார எதார்த்தத்துக்கும் மிகப் பெரிய இடைவெளி காணப்படுவதை அந்த ஆய்வு சுட்டிக்காட்டி இருக்கிறது.

15 முதல் 59 வயது வரையிலானவர்களை உழைக்கும் வயதினர் என்று குறிப்பிடுகிறார்கள். 2030-இல் உலகிலேயே உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை நூறு கோடிக்கும் அதிகமாக இருக்கும் நாடாக இந்தியா உயரும் என்று கூறப்படுகிறது. இவர்கள் அதிகமாகக் காணப்படுவதை "மக்கள்தொகை வலிமை' (டெமாக்ரஃபிக் டிவிடெண்ட்) என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள். 2030-இல் உச்சத்தை எட்டி, அதன் பிறகு இந்தியாவில் "மக்கள்தொகை வலிமை' படிப்படியாகக் குறையும் என்றாலும்கூட, 2055 வரை இந்தியப் பொருளாதாரம் அதனால் பயனடையும்.

பிரச்னை என்னவென்றால், படித்த இளைஞர்களின் எண்ணிக்கை வலிமை மட்டுமே, பொருளாதார வலிமையை உறுதிப்படுத்தாது. படித்த இளைஞர்களுக்கு அவர்களது கல்வித் தகுதிக்கும், தொழில்நுட்பத் திறமைக்கும் ஏற்ப வேலைவாய்ப்பு காணப்பட்டால்தான், பொருளாதார ரீதியாக அதனால் பயனடைய முடியும்.

இந்தியாவில் உள்ள 6.3 கோடி இளைஞர்களில் 1.1 கோடி பேர் வேலையில்லாதவர்கள். 15 முதல் 25 வயதினரில் 40%, 25 முதல் 29 வயதினரில் 20% வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள். ஒருபுறம் நாம் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி வந்தோம் என்றாலும், பட்டம் பெறும் இளைஞர்களுக்கு அதற்கேற்ப வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவாக, இன்று வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களில் 67% பேர் பட்டதாரிகள்.

2023-இல் பட்டம் பெற்ற இளைஞர்களில் 7% மட்டுமே நிரந்தரப் பணியில் சேர முடிந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறது அந்த ஆய்வு.

இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்கு கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஆனால், அதற்கேற்ப உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதா என்றால் இல்லை. இன்னும்கூட உழைக்கும் பருவத்தினரில் 42% முதல் 45% வரையில் விவசாயத்தில்தான் ஈடுபடுகிறார்கள். படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு விவசாயமல்லாத வேலைவாய்ப்பை நம்மால் ஏற்படுத்தித்தர முடியவில்லை.

ஆண்டொன்றுக்கு சுமார் 50 லட்சம் பேர் பட்டம் பெறுகிறார்கள் என்றால், சுமார் 28 லட்சம் வேலைவாய்ப்புகள்தான் விவசாயம் அல்லாத துறைகளில் உருவாகின்றன. வேலையில்லாத இளைஞர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பட்டதாரிகள் எனும்போது, அதிகம் படிக்காத, உயர் கல்விக்குச் செல்லாதவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதை அந்த ஆய்வு சுட்டிக்காட்டத் தவறவில்லை.

ஜாதி, பாலின, வருமானப் பாகுபாடுகளை மீறி லட்சக்கணக்கான பட்டதாரிகள் உருவாகிறார்கள் என்பது நமது கல்வித் துறையின் மகத்தான சாதனை. கடந்த 35 ஆண்டுகளில் உயர் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை 1,644-இல் இருந்து 69,534-ஆக அதிகரித்திருக்கிறது. 2010-இல், லட்சம் இளைஞர்களுக்கு 29 கல்லூரிகள் என்றிருந்த நிலை இப்போது 45 கல்லூரிகளுக்கும் அதிகமாகி இருக்கிறது.

அதே நேரத்தில் கல்வியின் தரமும், பட்டம்பெற்று வெளிவரும் மாணவர்களின் வேலைக்கான தகுதிகளும் கேள்விக்குறியாகி இருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 46% முதல் 50% வரையிலான மாணவர்கள் உற்பத்தித் துறையின் அதாவது தொழிற்சாலைகளின் தேவைக்குத் தகுதியானவர்களாக இல்லை. பாடத்திட்டங்களும் சரி, காலத்துக்கு ஏற்றவாறு மாற்றம் காணாமல் தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருக்கின்றன.

பெரும்பாலான பட்டதாரிகள், தங்கள் கல்வித் தகுதிக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வேலைக்காக காத்திருக்கிறார்கள். கடைசியில், வேறு வழியில்லாமல் சில ஆண்டுகளை வீணடித்துவிட்டு, முன்பு நிராகரித்ததைவிடக் குறைந்த ஊதியத்தில் சேர்பவர்கள் ஏராளம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

படித்துவிட்டுத் தகுதிக்கேற்ற வேலைக்காக இளைஞர்கள் காத்திருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, உழைக்கும் வயதில் இருப்பவர்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.