கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மானுடம் தோற்குதம்மா...

எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறையாததைப் பற்றி...

News image

மானுடம் தோற்குதம்மா...

Updated On :1 மே 2026, 10:30 pm

எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைவதாகத் தெரியவில்லை. அதிலும் 18 வயதுக்குக் குறைவான சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் என்பது கொடூரத்தின் உச்சம்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டாலும் இந்தக் கொடுமை தொடர்வது மனிதகுலத்துக்கே மிகப்பெரும் அவமானம். 18 வயதுக்குக் குறைவான சிறுமிகள் பாலியல் வன்கொடுமையின்போது கருவுறும் விவகாரம் பெரிய சமூகப் பிரச்னையாக மாறியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு சிறுமிகள் கருவுறும்போது, அந்தக் கருவைக் கலைப்பதற்கான மருத்துவரீதியான கால அளவுகோலை நீக்க உரிய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏப்ரல் 30-ஆம் தேதி அளித்திருக்கும் தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.

கர்ப்பத்தை மருத்துவ ரீதியாகக் கலைக்கும் திருத்தச் சட்டம் 2021-இன்படி கருவைக் கலைப்பதற்கான கால அளவுகோல் 20 வாரத்திலிருந்து 25 வாரங்களாக அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், கால அளவுகோலே இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதன்மூலம் சிறுமிகள் மீதான அழுத்தமும், வாழ்நாள் முழுவதும் சமூகத்தை ஒரு குற்றவுணர்வுடன் எதிர்கொண்டு வாழும் கொடுமையும் விலக வழியேற்பட்டிருக்கிறது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கருவுற்ற 15 வயது சிறுமியின் கருவைக் கலைப்பது தொடர்பான வழக்கை ஏப். 24-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு, சுமார் 30 வார கால கருவைக் கலைக்க அந்தச் சிறுமிக்கு அனுமதியளித்து தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு மேற்கண்ட கால அளவுகோலை நீக்கும் யோசனையைக் கூறியுள்ளது.

=

'பாலியல் வன்கொடுமையால் கருவுறும் விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு எது நல்லது என்று மருத்துவர்களோ, அரசோ தேர்வு செய்ய முடியாது. அதை பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோரின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் கருவைக் கலைப்பது குறித்து அந்தச் சிறுமி முடிவெடுக்கட்டும்' என உச்சநீதிமன்றம் தெரிவித்த பல்வேறு கருத்துகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பு நியாயத்தை வலுப்படுத்துகின்றன.

தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகளின்படி, இந்தியா முழுவதும் 2018-ஆம் ஆண்டு 18 வயதுக்குக் குறைவான 9,312 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். அதிகபட்சமாக, மத்திய பிரதேசத்தில் 2,830 சம்பவங்களும், உத்தர பிரதேசத்தில் 1,353 சம்பவங்களும் வழக்குகளாகப் பதிவாகியிருக்கின்றன.

தமிழகத்தில் 6 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. கல்வியில் முன்னேறிய மாநிலமாக கருதப்படும் கேரளத்தில் 1,137 வழக்குகள் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல். 2019-இல் 18 வயதுக்குக் குறைவான 4,936 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வழக்குகளாகப் பதிவாகியிருக்கின்றன. அந்த ஆண்டில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 1,313 வழக்குகளும், அதற்கு அடுத்ததாக கேரளத்தில் 1,262 வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன.

2018-இல் அதிக வழக்குகள் பதிவான மத்திய பிரதேசத்தில் 2019-இல் ஒரு வழக்குகூட பதிவாகவில்லை என்பது ஆறுதலான விஷயம். தமிழகத்தில் 9 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. 2020-இல் 18 வயதுக்குக் குறைவான சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2,640-ஆக குறைந்தது. அந்த ஆண்டில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 1,279 வழக்குகளும், அதற்கு அடுத்ததாக ஆந்திரத்தில் 577 வழக்குகளும் பதிவாகியிருந்தன. உத்தர பிரதேசத்தில் 204 வழக்குகள் பதிவாகியிருந்தன.

தமிழகம், கேரளத்தில் ஒரு வழக்குகூட பதிவாகவில்லை. 2021-இல் இந்த வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 3,033-ஆக பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 1,452 வழக்குகளும், அதற்கு அடுத்ததாக ஆந்திரத்தில் 614 வழக்குகளும், ஜார்க்கண்டில் 295 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 256 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழகம், கேரளத்தில் ஒரு வழக்குகூட பதிவாகவில்லை. 2022-இல் 18 வயதுக்குக் குறைவான சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 1,004-ஆக பதிவாகியுள்ளன. அந்த ஆண்டில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 458 வழக்குகளும், அதற்கு அடுத்ததாக ஹிமாசல பிரதேசத்தில் 213 வழக்குகளும், ஜார்க்கண்டில் 184 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் 5 வழக்குகள் பதிவான நிலையில், கேரளத்தில் ஒரு வழக்குகூட பதிவாகவில்லை. இவையெல்லாம் பதிவான வழக்குகள் மட்டுமே. வெளியில் சொல்லப்படாத ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது மட்டுமன்றி, இதுபோன்ற பாலியல் வன்கொடுமை வழக்குகளின் நீதிமன்ற விசாரணையை ஒரே வாரத்தில் முடிக்கும் வகையிலும் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஒட்டுமொத்த சொத்துகளும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வாய்மொழியாகத் தெரிவித்திருக்கிறார். பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கையுமே விரைவாக அமல்படுத்தப்பட வேண்டும். தாமதித்து வழங்கப்பட்ட நீதி என்பது, ஒரு வகையில் அநீதிதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.