கேரளத்தில் கடந்த 2021 தேர்தலில் 99 இடங்களில் வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி சாதனை படைத்த இடதுசாரி ஜனநாயக முன்னணி இந்தத் தேர்தலில் 35 இடங்களில் மட்டுமே வென்று 102 இடங்களை வென்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. இதன் மூலம், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இடதுசாரி கட்சிகளின் அரசு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 1977 ஜூனில் ஜோதிபாசு முதல்வராகப் பொறுப்பேற்ற நாளில் இருந்து சுமார் 50 ஆண்டுகளில் இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் அரசு இல்லாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முறையாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சி 1957-இல் கேரளத்தில் அமைந்தபோது உலகமே வியந்து பார்த்தது. இப்போது அதே கேரள மாநிலத்தில் ஆட்சியிலிருந்த இடதுசாரிக் கூட்டணி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு கம்யூனிஸ்ட் அரசு இல்லாத இந்தியா ஏற்பட்டிருக்கும் நிலை வந்திருக்கிறது.
கம்யூனிஸ்டுகளின் தேர்தல் பயணம் நெடியது. தேசிய அரசியலில், 1952-இல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 16 இடங்களை வென்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களை இடதுசாரி கட்சிகள் வென்றன. 1996 தேர்தலில் 32 இடங்களை வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய முன்னணி ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. பிரதமராகும் வாய்ப்பு ஜோதி பாசுக்கு வந்தபோது மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை அதை நிராகரித்தது. பின்னர், அந்த முடிவு "வரலாற்றுப் பிழை' என்று வருத்தப்பட்டனர்.
அதன் பின்னரும், 2004 மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 43 இடங்கள் உள்பட இடதுசாரிகள் 61 இடங்களைக் கைப்பற்றினர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தனர். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அன்றைய மன்மோகன் சிங் அரசுக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டனர். அதன் பின்னர் தேசிய அளவில் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி, இப்போது மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 2 பேரும் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்.
மாநில அரசியல் என்று எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் 1952-இல் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் இருந்த 375 இடங்களில் காங்கிரஸ் 152 இடங்களை வென்றது. கம்யூனிஸ்ட் கட்சி 62 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால், 1967-க்குப் பிறகு திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்த நிலையில் இந்தத் தேர்தலில் (2026) இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளன.
மேற்கு வங்கத்தில் 1977-இல் ஆட்சியைப் பிடித்த இடதுசாரி முன்னணி 2011 வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆட்சி செய்து வரலாறு படைத்தது. திரிபுராவில் 1978-இல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த இடதுசாரி முன்னணி, 1993 முதல் 2018 வரை கோலோச்சியது. திரிபுராவில் ஆட்சியை இழந்தபோதும் கேரளத்தில் ஆட்சியில் இருந்தது.
கேரளத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் படுதோல்வியை இப்போது சந்தித்துள்ளது. கடந்த 1982}க்குப் பிறகு நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இடதுசாரி ஜனநாயக முன்னணி குறைந்தபட்சம் 43.5 சதவீதம் வாக்குகளைப் பெற்று வந்துள்ளது. 44 ஆண்டுகளில் முதல்முறையாக அதன் வாக்கு சதவீதம் 37.34}ஆகக் குறைந்துவிட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சி.சி.முகுந்தன், தேவிகுளம் தொகுதியில் 2006 முதல் 2016 வரை தொடர்ந்து மூன்று முறை தேர்வு பெற்ற மார்க்சிஸ்ட் எம்எல்ஏ எஸ்.ராஜேந்திரன், வைக்கம் தொகுதி முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கே.அஜித், அட்டபாடி பகுதி செயலர் வி.ஆர்.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்கும் ரெஜி லுகோஸ் உள்ளிட்ட பலரும் பாஜகவில் அண்மையில் இணைந்துள்ளனர். இடதுசாரிகள் இதுபோல கொள்கை மாறுபாடு கொண்ட கட்சியில் இணைவது சிந்தித்துப் பார்க்க முடியாதது.
தொழிலாளர்கள், பின்தங்கியவர்கள் நலன்களுக்காக செயல்பட்டது தொடக்கத்தில் சுயநலமற்ற தலைவர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கம். பொருளாதார தாராளமயமாக்கலால் தொழிலாளர் வர்க்கத்தின் புதிய பரிணாமம், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற பிராந்திய கட்சிகள் பின்தங்கியவர்களை ஈர்த்தது, அதிகாரத்தால் வன்முறை, சுயநலம் போன்றவற்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று திசை தெரியாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து ஊக்கம் பெற்றவர்களால் தொடங்கப்பட்ட பாஜக, இப்போது 16 மாநிலங்களில் நேரடியாக ஆட்சி செய்கிறது. 6 மாநிலங்களில் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கிறது. ஆனால், கம்யூனிஸ்டுகளோ இருந்த ஒரு மாநிலத்தையும் இழந்துவிட்டனர்.
உலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றின் தாக்கம் ரஷியா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகளையே சித்தாந்த ரீதியாக மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கும் நிலையில், ஜனநாயக நாடான இந்தியாவில் இடதுசாரி இயக்கம் வலுவிழந்து வருவதில் வியப்பில்லை. அதே நேரத்தில் சாமானியர்களுக்காகவும், அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினருக்காகவும் குரல் கொடுக்கும் இடதுசாரி இயக்கங்கள் பலவீனமடைவது, ஜனநாயகத்தில் மாற்று அரசியல் சிந்தனைக்கு வழியில்லாத நிலையை ஏற்படுத்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிவாயு விலை உயா்வைக் கைவிடக் கோரி தஞ்சாவூரில் விசிக, இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறை

தொகுதி மாறி போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


