முதலமைச்சர் வி.டி. சதீசன் தலைமையில் கேரள மாநிலத்தில் பத்தாண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அரசு ஆட்சி பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வர் உள்பட அமைச்சரவையில் பெரும்பாலானவர்கள் புதியவர்கள் என்பது கூடுதல் சிறப்பு. அமைச்சரவையில் இரண்டு பேர் மட்டுமே மகளிர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குஞ்ஞாலிக் குட்டி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா, கே. முரளிதரன் ஆகிய மூன்று அனுபவசாலிகள் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நிர்வாகத்தை திறம்பட தலைமை ஏற்று நடத்த முதல்வர் வி.டி. சதீசனுக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பலாம். முதல்வருக்கான போட்டியில் இருந்த முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலாவை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் உள்துறை அமைச்சராக இணைத்துக் கொண்டு இருப்பது பாராட்டுக்குரியது.
எல்லா மாவட்டங்களுக்கும் சதீசன் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்கிற குறைபாடு சுட்டிக்காட்டப் படுகிறது. அமைச்சரவையை உருவாக்கும்போது திறமையான பலரைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படுகிறது என்கிற முதல்வர் வி.டி.சதீசனின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணி என்கிற கூட்டணி ஆட்சி என்பதால், இடம்பெறும் அனைத்துக் கட்சியினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு முதல்வர் உள்ளாகிறார்.
1967 முதல் தொடர்ந்து கூட்டணி ஆட்சி நிலவும் கேரள மாநிலத்தில் இதேபோன்ற தர்மசங்கடத்தை முன்னாள் முதல்வர்கள் பலர் எதிர்கொண்டது உண்டு. 1991-இல் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது அன்றைய முதல்வர் கே.கருணாகரன், இதேபோன்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது ஆரியாடன் முகமதை அமைச்சரவையில் தன்னால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று பத்திரிகையாளர் கூட்டத்திலேயே முதல்வர் தனது இயலாமையை வெளிப்படுத்தியதை நினைவுகூரத் தோன்றுகிறது.
சதீசன் தலைமையிலான 21 அமைச்சர்கள் கொண்ட யுடிஎஃப் அமைச்சரவை, பினராயி விஜயன் தலைமையிலான கடந்த பத்தாண்டுகால இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) ஆட்சியை அகற்றி பதவிக்கு வந்திருக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றாலும்கூட, முதல்வரை அடையாளம் காண மத்திய காங்கிரஸ் தலைமை 11 நாள்கள் எடுத்துக் கொண்டது; ஆனால், முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சதீசன் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டே நாளில் தன்னுடைய அமைச்சரவையை அமைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது என்பது அவரது அரசியல் சாதுர்யத்தின் அடையாளம்.
கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை வழங்கினார் என்பதும், தனது கட்சியில் உள்ள ஏனைய கோஷ்டிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் இடமளித்திருக்கிறார் என்பதும் முதல்வர் சதீசனை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணியின் அமைச்சரவை உருவாக்கம் என்பது மிகவும் கடுமையான பேரங்களுக்கும் பல்வேறு மனக்கசப்புகளுக்கும் இழுபறிகளுக்கும் நடுவில் நடைபெறுவதுதான் வழக்கம். எந்தவித சலசலப்போ, முணுமுணுப்போ இல்லாமல் தனது அமைச்சரவையை உருவாக்கிப் பதவியேற்றதுடன், செயல்படவும் தொடங்கி இருக்கும் முதலமைச்சரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
வி.டி. சதீசன் தலைமையிலான அமைச்சரவை தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மக்களுக்கு அளித்த 5 தேர்தல் வாக்குறுதிகளில் 2 வாக்குறுதிகளை நிறைவேற்ற முற்பட்டிருப்பதைக் குறிப்பிட வேண்டும். ஜூன் 15 முதல் கேரள அரசுப் போக்குவரத்தில் அனைத்து மகளிருக்கும் இலவசப் பயணம் என்கிற வாக்குறுதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூத்த குடிமக்களின் நலனுக்காக தனியாக ஒரு துறை அமைக்கப்படும் என்கிற வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏனைய 3 வாக்குறுதிகளும் அடுத்த 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் அறிவித்திருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
"ஆஷா' தொழிலாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக கூடுதல் ஊதியத்துக்காக கேரள மாநிலத்தில் போராடி வருகிறார்கள். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி 266 நாள்கள் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த "ஆஷா' தொழிலாளர்களிடம், 2026-இல் எங்களது யுடிஎஃப் ஆட்சி அமைந்தால் முதலாவது அமைச்சரவைக்கூட்டத்தில் உங்களுக்கு வழங்கப்படும் சன்மானத்தை அதிகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசன் அளித்த வாக்குறுதியை, முதல்வராகப் பொறுப்பேற்று தலைமை தாங்கிய முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறார். அவர்களது மாத ஊதியம் ரூ. 3,000 அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் "ஆஷா' தொழிலாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மழலையர் பள்ளி ஆசிரியைகள், ஆயாமார்கள் ஆகியோரின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
மிகப் பெரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் மாநிலங்களில் கேரளமும் ஒன்று. அறிவிக்கப்பட்டிருக்கும் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்கள் மேலும் நிதிச் சுமையை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. மக்களுக்கு பாதிப்பில்லாமல் அரசின் வருவாயை எப்படி அதிகரிப்பது என்பதை ஆராய வேண்டிய பொறுப்பு நிதியமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சரையே சாரும்.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
அஞ்சாமையும், குடிப்பிறப்பும் காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும், முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப் பெற்றவன் அமைச்சன்.
திருக்குறள் (எண் 632) அதிகாரம்: அமைச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறுதி நாள்களிலும் சலீம் குமார் மீது சமூக ஊடகத் தாக்குதல்! கேரள முதல்வர் ஆவேசம்!
தில்லியில் சோனியா, ராகுல், கார்கேவுடன் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு!

உள்கட்சி பூசல்? கேரள முதல்வர் வி.டி. சதீசன் இன்று தில்லி செல்கிறார்!

புதிய கேரள பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் - முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



