புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

தமிழகம் தயங்கக் கூடாது!

நியூஸிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்தில் ஜவுளி, ஆடை, தோல், வாகன உதிரிபாகங்கள் துறைகளுக்கு மிகுந்த பலனைத் தரக்கூடும் என்பதைப் பற்றி...

Updated On :

இந்தியா, நியூஸிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் ஏற்றுமதி பொருள்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படுவதுடன், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 2,000 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்ய நியூஸிலாந்து ஒப்புக்கொண்டுள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கி, அதை சுமார் ரூ.35,000 கோடியாக உயர்த்துவதும் இதன் நோக்கம். பிராந்திய மோதல்கள், போர்கள், பருவநிலை மாற்றம் எனப் பல்வேறு காரணிகளால் உலகில் பொருளாதார நிச்சயமற்ற நிலை அதிகரித்துவருகிறது. இந்தச் சூழலில் போட்டியாளர்களை சமாளிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களே பெரிதும் கைகொடுக்கின்றன.

ஏறக்குறைய எல்லா நாடுகளுமே இந்த உத்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டன. உலகளாவிய வர்த்தகக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தியா தனது பொருளாதார உறவுகளை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் 38 வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய 9 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது.

அந்த வரிசையில் நியூஸிலாந்து இணைந்திருக்கிறது. இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் ஜவுளி, ஆடைகள், தோல் பொருள்கள், காலணிகள், மருந்துகள், பொறியியல் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஆகிய துறைகள் முக்கியப் பலன்களைப் பெறும். இந்தியா 100 சதவீத வரிவிலக்கைப் பெறும் நிலையில், நியூஸிலாந்து 70 சதவீத பொருள்களுக்கு வரிச் சலுகைகளைப் பெறும். இந்திய விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் பொருள்கள், பால் பொருள்களுக்கு இந்தியா வரிவிலக்கோ, சலுகையோ அளிக்கவில்லை.

அதன்படி, பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருள்கள், ஆட்டு இறைச்சி தவிர்த்த பிற விலங்கு சார்ந்த பொருள்கள், வெங்காயம், கொண்டைக்கடலை, பட்டாணி, சோளம், பாதாம் போன்ற சில தாவர வகை பொருள்கள், சர்க்கரை, செயற்கைத் தேன், விலங்கு/தாவர நுண்ணுயிரி சார்ந்த கொழுப்புகள் மற்றும் எண்ணெய் போன்றவற்றுக்கு இந்தியா வரிவிலக்கு அளிக்கவில்லை.

ஏற்கெனவே நியூஸிலாந்துடன் இந்தியா வர்த்தக உபரியைத்தான் கொண்டிருக்கிறது. 2025-ஆம் ஆண்டில் நியூஸிலாந்துக்கு இந்தியாவின் ஏற்றுமதி 881 மில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டிருந்தது. நியூஸிலாந்து 575 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 57 சதவீத பொருள்கள் சுங்க வரி இல்லாத பிரிவுகளின் கீழ் வருகின்றன.

நியூஸிலாந்தின் ஏற்றுமதியில் சுமார் 16 சதவீத பொருள்களே சுங்க வரி இல்லாத பிரிவுகளில் வருகின்றன. நியூஸிலாந்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருள்களில் மிகப்பெரிய பிரிவுகளான எரிபொருள்கள் மற்றும் வேதிப் பொருள்கள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே பெரும்பாலும் சுங்க வரி இல்லாத பிரிவுகளின் கீழ்தான் இருந்தன. எனவே, இப்போது அமலுக்கு வந்துள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் ஜவுளி, இயந்திரங்கள், உலோகங்களை ஏற்றுமதி செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரிய பலனைப் பெறக்கூடும்.

நியூஸிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்தைப் பொருத்தவரை ஜவுளி, ஆடை, தோல், வாகன உதிரிபாகங்கள் துறைகளுக்கு மிகுந்த பலனைத் தரக்கூடும். திருப்பூரின் பின்னலாடைகள், ஆம்பூரின் தோல் பொருள்கள், சென்னையின் வாகன உதிரிபாகங்கள் உள்பட தமிழகத்தின் முக்கியமான பல தயாரிப்புகள் இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இதுவரை இருந்துவந்த 8-10 சதவீத வரியிலிருந்தும் விலக்குப் பெற்றிருப்பது உற்பத்தியாளர்களுக்கு வரப்பிரசாதம் போன்றது.

2025-26-ஆம் ஆண்டில் நியூஸிலாந்தின் ஆயத்த ஆடை இறக்குமதி சந்தையின் மதிப்பு சுமார் 1.18 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் இந்தியாவின் பங்களிப்பு 48.7 மில்லியன் டாலர்கள். அதாவது மொத்த சந்தையில் 4.1 சதவீதம்தான். நியூஸிலாந்தின் மொத்த ஆடை இறக்குமதியில் பின்னலாடைகளின் பங்கு 50 சதவீதம். அந்த வாய்ப்பை திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் துறை பயன்படுத்திக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தின் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இந்த வர்த்தக ஒப்பந்தம் அமைந்துள்ளதாக தொழில் துறை நிபுணர்கள் கணிக்கின்றனர். ஆனால், ஏற்றுமதிக்குத் தேவையான மூலதனம், வங்கிக் கடன் மற்றும் போதுமான நிதி உதவி எளிதில் கிடைக்காதது, நாடுகளுக்கு இடையிலான மாறுபட்ட ஏற்றுமதி விதிகள், சான்றிதழ்கள், தரக்கட்டுப்பாடு மற்றும் ஏற்றுமதி ஆவணப் பணிகள் என இந்தத் துறை சந்திக்கும் சவால்கள் மிக அதிகம்.

உற்பத்திப் பொருள்களின் தரம், பேக்கேஜிங் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, சர்வதேச தரத்தை அளித்தால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். ஏற்றுமதி அதிகரித்தால் இந்தத் துறைகளில் வேலைவாய்ப்பும் தானாக அதிகரிக்கும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக நிதி உதவி, வரிச் சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இருப்பினும், நியூஸிலாந்துக்கான ஏற்றுமதி வாய்ப்பை கருத்தில்கொண்டு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

********

திருக்குறள் (எண் 512) அதிகாரம்: தெரிந்து வினையாடல்

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை.

பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER