நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

வேடிக்கை பார்க்கக் கூடாது!

இலங்கையில் தொடர்ந்து இன்னல்களைச் சந்தித்துவரும் தமிழர்களின் துயர் தீர்க்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை

Updated On :

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்தும் தமிழர்களின் வாழ்வில் இன்னமும் விடியல் பிறக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமை நிலை என்ற தலைப்பிலான அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில் வெளியிடப்பட்ட தகவல்கள் வேதனை அளிப்பதாக உள்ளன.

மாயமான தமிழர்கள், பெரும் எண்ணிக்கையில் குழிகளில் கூட்டாகப் புதைக்கப்பட்டவர்கள், அச்சுறுத்தும் வகையில் தொடர் கண்காணிப்பு, நிலம் அபகரிப்பு, 1990-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மறுகுடியமர்வு, மதச் சுதந்திரம், வளர்ச்சிப் பணிகள், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்டவை குறித்து மனித உரிமை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது.

'போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளது தங்களது மறுவாழ்வுக்கும் பொருளாதார மீட்சிக்கும் தடையாக உள்ளதாக மக்கள் கருதுகின்றனர். தமிழர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு என்பதை நில அபகரிப்புக்கு காரணமாக கூறுவதை அரசு தவிர்க்க வேண்டும்' என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சரியாக 2 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியான பசையூரில் கடந்த 2024 நவ. 10-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அதிபர் அநுரகுமார திசாநாயக, 'தொல்லியல் துறை, வனத் துறையால் வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட்ட நிலங்கள் தமிழர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்; மாகாண கவுன்சில்களுக்குத் தேர்தல் நடத்தப்படும்; தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம்' என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்தார்.

அவரின் வாக்குறுதிகளை தமிழர்கள் நம்பியதால், இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழர் அல்லாத கூட்டணியான அவரது தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 28 இடங்களில் 12 இடங்களைக் கைப்பற்றியது. மட்டக்களப்பு தவிர தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஏனைய 4 மாவட்டங்களில் என்பிபி முத்திரை பதித்தது. ஆனால், அவரது வாக்குறுதிகள் இன்னமும் கானல் நீராகவே தொடர்கின்றன.

பாதுகாப்புப் பணிகளுக்குத் தேவைப்படாத, போரின்போது கைப்பற்றப்பட்ட நிலங்களைப் பாதுகாப்புப் படைகள் திரும்ப ஒப்படைப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் உள்ள அதிபர் திசாநாயக கடந்த ஆகஸ்டில் அறிவுறுத்தி உள்ளார். ஆனால், இந்த அறிவுறுத்தல் இன்னும் செயல் வடிவம் பெறவில்லை.

இதற்குக் காரணம், நில உரிமையாளர்களைக் கண்டறிய முடியவில்லை, உரிய ஆவணங்கள் தமிழர்களிடம் இல்லை என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஃபிராங்க்ளின் ஜோசப் கூறுகிறார். போரின்போது கைப்பற்றப்பட்ட நிலங்களில் பெரும் பகுதி இப்போதும் ராணுவம் வசமே உள்ளது. ராணுவம் தவிர, தொல்லியல் துறையினரும், வனத் துறையினரும் தமிழர்களின் நிலங்களைக் கைப்பற்றி வருகின்றனர் என்கிறார் இலங்கை தமிழ் அரசுக் கட்சி எம்.பி. துரைராசா ரவிகரன்.

இலங்கை சுதந்திரத்துக்குப் பின்னர், கடந்த 78 ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தில் சிங்களர்களின் குடியேற்றம் 700 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டுகிறார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மற்றொரு எம்.பி.யான சாணக்கியன் ராசமாணிக்கம்.

நிலம் தவிர, இப்போது தமிழர்களின் கால்நடைகளும் குறிவைத்து வேட்டையாடப்படுகின்றன. இதன்மூலம் தமிழர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது என்கிற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்தும் தார்மிக உரிமையும் பொறுப்பும் இந்தியாவுக்கு இருக்கிறது. காரணம், பாதிக்கப்படுபவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள்.

இலங்கைக்குப் பல விதங்களிலும் இந்தியா உதவி வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது 400 மில்லியன் டாலர், கடந்த 2025 நவம்பரில் டித்வா புயல் பெரும் சேதங்களை ஏற்படுத்தியபோது 450 மில்லியன் டாலர் என நிதி உதவிகளை இந்தியா அளித்தது.

மாதிரி கிராமம் திட்டத்தில், இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தலா 24 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர் வரை 22 மாவட்டங்களில் பணிகள் முடிந்து வீடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டின் மீன் வளத் துறைக்காக 430 மின்சார இரு சக்கர வாகனங்களுடன் இலங்கை மதிப்பில் ரூ. 26.50 கோடி நிதி உதவியை இந்தியா வழங்க கடந்த அக்டோபரில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், இலங்கையில் தொடர்ந்து இன்னல்களைச் சந்தித்துவரும் தமிழர்களின் துயர் தீர்க்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்கள் ஓரிரண்டு ஆண்டுகளாக அல்ல, 1980-களில் இருந்து கடந்த 46 ஆண்டுகளாகப் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

நகுதல் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தல் பொருட்டு.

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறிகடந்து செல்லும்போது முற்பட்டுச் சென்று இடித் துரைப்பதற்காகும்.

திருக்குறள் (எண் 784) அதிகாரம்: நட்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.