திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

சரியான நேரம், சரியான முடிவு!

நிகழ் 2026-27 ராபி பருவத்துக்காக பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உர மானியத்துக்கு ரூ. 62,370 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கோப்புப் படம்

Updated On :

நிகழ் 2026-27 ராபி பருவத்துக்காக பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உர மானியத்துக்கு ரூ. 62,370 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் முடிவடைந்த காரீஃப் பருவத்துக்கான உர மானியமான ரூ. 41,533.81 கோடியை ஒப்பிடுகையில், இது சுமார் 50 சதவீதம் அதிகமாகும். முந்தைய ராபி பருவ ஒதுக்கீடான ரூ. 37,952 கோடியை ஒப்பிடுகையில், ரூ. 24,417.73 கோடி கூடுதல் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

நிகழ் நிதியாண்டில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மொத்த மானிய ஒதுக்கீடு ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இது நிகழ் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ரூ. 54,000 கோடியின் இரு மடங்கை நெருங்குகிறது. 2026-27 நிதியாண்டில் உரங்களுக்கான ஒட்டுமொத்த உரமானிய ஒதுக்கீடான ரூ. 1.71 லட்சம் கோடியைவிட, அதிக மானிய ஒதுக்கீடு தவிர்க்க முடியாததாகி இருக்கிறது.

நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரு மாதத்தில், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. அதன் விளைவாக ஹோர்முஸ் நீரிணை ஈரானால் மூடப்பட்டது. மேற்காசியாவில் இருந்தான பெட்ரோலியப் பொருள்களும், ரசாயன உரங்களும், அதற்கான மூலப் பொருள்களும் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டதால் ஏற்றுமதி செய்யப்படாமல் ஸ்தம்பித்தன. தட்டுப்பாடு காரணமாக உரங்களின் விலை விண்ணைத் தொட்டது.

உள்நாட்டு உணவு உற்பத்திக்கு நமது விவசாயிகளுக்குத் தடையில்லாமல் உரங்கள் கிடைக்குமா என்கிற அச்சம் எழுந்தது. உலகின் அதிக மக்கள்தொகையுள்ள நாடு என்பதால், தேவைக்கேற்ற உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவது தலையாய பிரச்னை. ஏதாவது வகையில் உற்பத்தி தடைபட்டாலோ, உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டாலோ, மிகப் பெரிய கலவரமே வெடித்திருக்கும். தாது ஆண்டு பஞ்சம்போல, மக்கள் மிகப் பெரிய சோதனையைச் சந்தித்திருப்பார்கள்.

வளர்ச்சி அடைந்த நாடுகளேகூட, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு என்று தடுமாறிய நிலையிலும் தட்டுப்பாடு இல்லாமல் இந்தியா அந்தச் சூழலைக் கடந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது தலைமையிலான அரசுக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த இக்கட்டான சூழலிலும், அதிகரித்த உரவிலை விவசாயிகளைப் பாதிக்காமலும், தட்டுப்பாடு இல்லாமல் உரங்கள் கிடைக்கப்பட்டதிலும் மோடி அரசு காட்டிய அக்கறையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

மேற்காசிய மற்றும் ரஷிய-உக்ரைன் போர் காரணமாகவும், பதற்றமான புவிசார் அரசியல் சூழ்நிலைகள் அடிக்கடி மாற்றம் கண்டுவருவதாலும் சர்வதேச அளவில் உரங்களின் விலை

உயர்ந்துள்ளது. நமக்குத் தேவையான டை அமோனியம் பாஸ்பேட் என்கிற டி.ஏ.பி.யில் 90 சதவீதம் மேற்காசிய மற்றும் வட அமெரிக்க நாடுகளிலிருந்தும், ரஷியா, பெலாரஸ் ஆகிய நாடுகளிலிருந்து பொட்டாஷும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த உரங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்கள் போதுமான அளவில் நம்மிடம் இல்லாததே இறக்குமதிக்கான காரணம்.

நிகழ் ராபி பருவத்துக்காக, நைட்ரஜன் கிலோவுக்கு ரூ. 94.21, பாஸ்பரஸ் கிலோவுக்கு ரூ. 66.11, சல்ஃபர் கிலோவுக்கு ரூ. 10.42, பொட்டாசியம் கிலோவுக்கு ரூ. 2.38 என்ற அடிப்படையில் மானிய விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 50 கிலோ எடை கொண்ட டிஏபி உர மூட்டை ரூ.1,350 என்ற விலையில் விவசாயிகளுக்கு தொடர்ந்து கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு மானியம் மூலம் உரங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க முடிவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.

மூட்டைக்கு ரூ. 50 முதல் 100 வரையிலும், சில நேரங்களில் விநியோகஸ்தர்களால் உருவாக்கப்படும் செயற்கையான தட்டுப்பாட்டால் அதைவிடக் கூடுதல் விலை கொடுத்தும் விவசாயிகள் உரங்களை வாங்க வேண்டியதாக இருக்கிறது. துணை இடுபொருள்களை வாங்க கட்டாயப்படுத்தப்படுவதும் உண்டு. உரங்களைப் பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவோர் மற்றும் கூடுதல் விலைக்கு விற்போரை அதிகாரிகள் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்காத வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது.

நாட்டில் ஒட்டுமொத்த உரங்கள் இருப்பு போதுமான அளவில் உள்ளதாகவும், கடந்த நவம்பர் 30}ஆம் தேதி நிலவரப்படி, யூரியா 103.12 லட்சம் டன், டிஏபி 28.65 லட்சம் டன், என்பிகே 60.87 லட்சம் டன், எம்ஓபி 20.08 லட்சம் டன், எஸ்எஸ்பி 22.49 லட்சம் டன் இருப்பு உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஆலைகளில் உர உற்பத்தி, ஆலைகளிலிருந்து உரங்கள் சரியான காலத்தில் சந்தைக்கு விடுவிக்கப்படுதல், அவை பதுக்கப்படாமல் விவசாயிகளுக்கு தராளமாகக் கிடைக்கும் வகையில் கிராமப்புறங்கள் வரை தடையின்றி விநியோகம் என அனைத்து நிலைகளிலும் தொடர் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே தட்டுப்பாட்டையும், அதனால் ஏற்படும் விலை உயர்வையும் தடுக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.