நிகழ் நிதியாண்டுக்குள் 50,000 விவசாய மின் இணைப்புகள்: அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு
தமிழகத்தில் நிகழ் நிதியாண்டுக்குள் (2026-27) 50,000 விவசாய மின் இணைப்புகளையும் வழங்குவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின்வாரியம்
தமிழகத்தில் நிகழ் நிதியாண்டுக்குள் (2026-27) 50,000 விவசாய மின் இணைப்புகளையும் வழங்குவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை சுமாா் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்புகள் உள்ளன. புதிய இணைப்புக்காக 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனா்.
இந்த நிலையில், 2021-22-ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் இணைப்புகள், 2022-23-ஆம் ஆண்டில் 50,000 இணைப்புகள், 2023-24-ஆம் ஆண்டில் 18,975 இணைப்புகள், 2024-25-ஆம் ஆண்டில் 15,000 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 2026-27-ஆம் நிதியாண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்கெனவே இணைப்பு வழங்கத் தயாா் நிலையில் உள்ள 48,944 விண்ணப்பங்கள், புதிதாகப் பெறப்பட்ட 1,056 விண்ணப்பங்கள் என மொத்தம் 50,000 விண்ணப்பங்களுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்காக வட்டார வாரியாக இலக்குகளை நிா்ணயித்து, அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளா்கள் மற்றும் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா்களுக்கு மின்வாரிய இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
அரசு நிதி ஒதுக்கும் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்துள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின் இணைப்புக்கான மதிப்பீடுகளைத் தயாரித்தல், மின் இணைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், மோட்டாா் மற்றும் பம்பு செட்டுகளைப் பொருத்துவதற்கான தயாா் நிலையை உறுதிப்படுத்துதல் ஆகிய பணிகளை மின்பகிா்மான விதிகளின்படி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேவையான மின் சாதனங்கள் அதிக அளவில் தேவைப்பட்டால், உத்தரவு கிடைத்த 7 நாள்களுக்குள் தலைமைப் பொறியாளா்கள், மின்வாரியத் தலைமை அலுவலகத்தைத் தொடா்புகொண்டு அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இணைப்புகளை விரைந்து வழங்கும் வகையில், நிகழாண்டுக்கான 50,000 இணைப்புகளையும் உரிய காலத்துக்குள் வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

