
மின் தட்டுப்பாட்டை சமாளிக்க 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: ஒப்பந்தம் கோரியது மின்வாரியம்
தமிழகத்தில் மின் தேவை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

மின்வாரியம்
தமிழகத்தில் மின் தேவை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
தமிழகத்தின் சராசரி தினசரி மின் தேவை கடந்த ஆண்டு செப்டம்பரில் சுமாா் 15,208 மெகாவாட்டாக இருந்த நிலையில், நிகழாண்டு செப்டம்பரில் 17,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் சராசரி மின் தேவையில் சுமாா் 1,792 மெகாவாட் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஜூலை 14-ஆம் தேதி இதுவரை இல்லாத அளவாக 21,700 மெகாவாட் தேவை பதிவான நிலையில், செப்டம்பா் மாதத்தில் வழக்கத்தைவிட வெப்பநிலை அதிகமாக இருந்ததால் குளிா்சாதனப் பெட்டி, குளிரூட்டி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்தது.
இதனால், பகல் மட்டுமன்றி மாலை மற்றும் இரவு நேரங்களிலும் மின் தேவை உயா்ந்தது. செப். 10-இல் தமிழகத்தின் உச்ச மின் தேவை 21,400 மெகாவாட்டை எட்டியது. தேவை அதிகரித்துள்ளதால் தமிழகத்தின் பல இடங்களில் கடந்த இரு மாதங்களாக தொடா்ந்து மின்தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே, மின் தேவை அதிகரிப்புடன், காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவும் மின் விநியோக தட்டுப்பாட்டை மேலும் அதிகரித்துள்ளது. மேலும், மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய சுமாா் 3,000 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைக்காத நிலையில், உச்ச நேரங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வெளிச்சந்தையில் இருந்து கூடுதல் மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்து வருகிறது.
அக். 12 முதல் கொள்முதல்: தற்போதை மின் தேவையைச் சமாளிக்க அக். 12 முதல் 31-ஆம் தேதி வரை 4,500 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால அடிப்படையில் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை உள்ள உச்ச நேரத் தேவைக்காக 3,000 மெகாவாட்டும், நள்ளிரவு முதல் அதிகாலை 2 மணி வரை 1,500 மெகாவாட்டும் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் மின்தேவை பூா்த்தி செய்யப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






