சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஆயுத பூஜை : பூக்கள், பழங்கள், காய்கறிகள் விலை அதிகரிப்புஅக்.23ல் மீண்டும் கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்!

மின் தடைக்கு விடை!

தனியார் துறையின் பங்களிப்பு இல்லாமல், தமிழகம் தனது மின்சாரத் தேவையை ஈடுகட்டவே முடியாது என்கிற எதார்த்தத்தை தவெக அரசு புரிந்து கொள்ளாவிட்டால், மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரும்.

Updated On :

தொடங்கி இருக்கும் வடகிழக்குப் பருவமழை, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் தர்மசங்கடத்துக்கு சற்று ஆறுதலாக அமைந்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், சற்று அதிகமாகவே தலைநகர் சென்னையிலும் காணப்படும் மின் தடைகளும், மின் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் மின் வெட்டுகளும் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

முந்தைய திமுக ஆட்சியில் யூனிட் ஒன்றுக்கு ரூ. 20 கொடுத்து, அதிகரித்த தேவைக்கு மின்சாரம் வாங்கப்பட்டதை தவெக உள்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாக விமர்சனம் செய்தன. இப்போது ரூ.35 கொடுத்து, நுகர்வோரின் தேவையை எதிர்கொள்ள, தவெக அரசு மின்சாரம் வாங்கி இருப்பதற்கு இன்றைய எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

'பருவமழை தொடங்கி இருப்பதன் காரணமாக மின்சாரத் தேவை சற்று குறைந்திருக்கிறது. மின்சாரப் பயன்பாடு அதிகமாகக் காணப்படும் உச்ச நேரத்தில், யூனிட்டுக்கு ரூ. 35 என்கிற விலையில் 300 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. இரண்டு நாள்கள் 1,100 மெகாவாட் மின்சாரம் ரூ. 35-க்குக் கொள்முதல் செய்யப்பட்டது என்றாலும், அது 300 மெகாவாட் மின்சாரமாகக் குறைக்கப்பட்டது. மழை காரணமாக மின்சாரத் தேவை குறையத் தொடங்கி இருப்பதால் அதுவும் நிறுத்தப்படும்' என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார்.

வழக்கமாக ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில், கோடை வெப்பம் குறைந்து காற்றடிக்கத் தொடங்கி விடும். இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாகக் கோடைக் காலம் போலவே, அக்டோபர் மாதத்திலும் வெப்பம் காணப்பட்டதை பருவநிலை மாற்றத்தின் தாக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் நேரடி விளைவாக, மின்சாரத்துக்கான தேவையும் அதிகரித்தது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தின் தினசரி மின் தேவை 17,000 மெகாவாட் என்றால், இந்த ஆண்டு அதுவே சுமார், 20,000 மெகாவாட்டை எட்டியிருக்கிறது. கடும் கோடையிலும் வெப்ப அலை வீசிய ஜூலை 15-ஆம் தேதியில் உச்சகட்ட மின் பயன்பாடு 21,724 மெகாவாட். அதே அளவிலான பயன்பாடு கடந்த இரண்டு வாரங்களாகக் காணப்படுகிறது என்பதில் இருந்து வெப்பத்தின் தாக்கத்தை நாம் உணரலாம்.

இந்த ஆண்டு கோடையில் காணப்பட்ட அதிகரித்த வெப்பத்தால் மின்சாரத் தேவை தொடர்ந்து 21,000 மெகாவாட் அளவில் காணப்பட்டது. ஆனாலும்கூட, ஆங்காங்கே எப்போதாவதுதான் மின் தடையோ, மின்வெட்டோ ஏற்பட்டது. குறைந்த மின்னழுத்தம், மின் தடை உள்ளிட்டவை ஆங்காங்கே காணப்பட்டாலும் அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன. கோடைக்காலம் முடிந்த பிறகும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மின் தடை, மின்வெட்டு காணப்பட்டதற்கு நீடித்த வெப்பமும், தாமதமான பருவமழையும்தான் காரணம்.

மின் பற்றாக்குறைக்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்த ஆண்டு காற்றாலை மின்சாரம் வழக்கத்துக்கு மாறாக கை கொடுக்கவில்லை. சாதாரணமாக நாளொன்றுக்கு 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாலைகள், இந்த ஆண்டு கடந்த இரண்டு மாதங்களாக 10 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்திருக்கின்றன. அதேபோல, எதிர்பார்த்த அளவுக்கு சூரிய மின்சக்தி உற்பத்தியும் அதிகரிக்கவில்லை.

தலைநகரம் என்பதால், மின்சாரப் பற்றாக்குறையால் மிக அதிகமாக பாதிக்கப்படுவது சென்னைதான். சென்னையைச் சுற்றி பல முக்கியமான தொழிற்சாலைகள் காணப்படுவதால், அதிக அளவிலான மின்சாரம் தடையில்லாமல் இருப்பது மிக மிக முக்கியமும்கூட.

சென்னையில் மட்டுமே 38.79 லட்சம் மின்சார இணைப்புகள் (நுகர்வோர்) உள்ளன. புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்தால் இணைப்புகளின் எண்ணிக்கை 60 லட்சத்துக்கும் அதிகம். 40,798 மின் மாற்றிகளும், 253 துணை மின் நிலையங்களும் அந்த இணைப்புகளுக்கான மின்சாரத்தை வழங்குகின்றன. இதற்காக 16,582 கி. மீ. பூமிக்கு அடியிலும், 18,092 கி.மீ. மின்கம்பங்கள் மூலமாகவும் மின்சார கேபிள்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

ஒரு டிகிரி சென்டிகிரேட் வெப்பம் அதிகரித்தாலும், சென்னையின் மின்தேவை 500 மெகாவாட் அதிகரிக்கும். மின் கம்பிகள் (கேபிள்கள்), மின் மாற்றிகள், துணை மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பழுதுகள் மின்தடையை ஏற்படுத்தும். அவை பெரும்பாலும் முறையாகப் பராமரிக்கப்படாத, மாற்றப்படாதவை என்று தெரிகிறது.

இந்த ஆண்டு தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரம், கேரளம், தெலங்கானா மாநிலங்களும் மின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. பருவமழை எதிர்பார்த்ததுபோல இல்லாமல் போனதால், புனல் மின்நிலைய உற்பத்தி தேசிய அளவில் 20% குறைந்து விட்டது. அனல் மின்நிலையங்களும் கைகொடுக்கவில்லை. அதிகரித்த வெப்பத்தை, 'வீடுதோறும் சோலார்' என்று சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம்தான் எதிர்கொள்ள முடியும்.

தமிழக மின்பகிர்மானக் கழகத்தின் துணை மின் நிலையங்களும், மின் மாற்றிகளும் மாற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. அதிகரித்த மின் அழுத்தம் ஏற்படும்போது பழுதடைந்து வரும் பழைய மின்மாற்றிகளை மாற்ற வேண்டியது அவசர அவசியம். தனியார் துறையின் பங்களிப்பு இல்லாமல், தமிழகம் தனது மின்சாரத் தேவையை ஈடுகட்டவே முடியாது என்கிற எதார்த்தத்தை தவெக அரசு புரிந்து கொள்ளாவிட்டால், மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரும்.

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும். அவ்வாறு கொண்ட துணிவு காலந்தாழ்ந்து நிற்பது குற்றமாகும்.

திருக்குறள் (எண் 671) அதிகாரம்: வினைசெயல்வகை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.