மழையால் 300 மெகாவாட் மட்டும் கொள்முதல் : அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்
தமிழகத்தில் மழை காரணமாக மின்சாரத் தேவை குறைந்துள்ளதால், உச்சநேர மின்தேவையைச் சமாளிக்க தற்போது 300 மெகாவாட் மின்சாரம் மட்டுமே யூனிட் ரூ.35-க்கு கொள்முதல் செய்ய திட்டம்

சி.டி.ஆா்.நிா்மல்குமாா் - கோப்புப் படம்
தமிழகத்தில் மழை காரணமாக மின்சாரத் தேவை குறைந்துள்ளதால், உச்சநேர மின்தேவையைச் சமாளிக்க தற்போது 300 மெகாவாட் மின்சாரம் மட்டுமே யூனிட் ரூ.35-க்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.
சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக மின்சாரத் தேவை குறைந்துள்ளது. புதன்கிழமையுடன் ஒப்பிடும்போது வியாழக்கிழமை மின்சாரத் தேவை 1,000 மெகாவாட் குறைந்துள்ளது. இதனால், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான தேவையும் குறைந்துள்ளது. மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் உச்சநேரத்தில் தற்போது 300 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் வாங்கப்படுகிறது.
மின்கட்டணம் உயராது: மின்சாரத்தை அதிக விலைக்கு கொள்முதல் செய்வதற்கும், பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் மின்சாரக் கட்டணத்துக்கும் தொடா்பு இல்லை. எனவே, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டாலும் மின்கட்டணம் உயராது.
சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு நிலவுவதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை. தலைமைச் செயலகத்தில் அரை மணி நேரம் மட்டுமே மின்சாரப் பாதிப்பு ஏற்பட்டது. அந்தப் பாதிப்பு உடனடியாகச் சரிசெய்யப்பட்டது. தமிழகத்தில் எங்கும் மின்சாரம் நிறுத்தப்படவில்லை.
உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: தமிழகத்தின் மின்சாரத் தேவையைச் சமாளிக்கும் வகையில் அனல்மின் உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பாதிக்கப்பட்டுள்ள 2 மின் உற்பத்தி அலகுகளையும் சீரமைத்து, விரைவில் மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மின் இணைப்பு: புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும். 250 சதுர அடிக்குக் குறைவான வீடுகளுக்கு மட்டும் ஒற்றை மின்பாதை இணைப்பு வழங்கப்படும்.
அதேவேளையில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள், நீா்நிலைப் புறம்போக்கு பகுதிகள் மற்றும் ரயில்வேக்குச் சொந்தமான இடங்களில் வசிப்போருக்கு மின் இணைப்பு வழங்கப்படாது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

