பிப்ரவரி முதல் ஜூலை வரை மின்சாரம் கொள்முதல்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம்
தமிழகத்தில் மின் தேவை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி முதல் ஜூலை வரை 6 மாதங்களுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

மின் வாரியம்
தமிழகத்தில் மின் தேவை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி முதல் ஜூலை வரை 6 மாதங்களுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
தமிழகத்தின் சராசரி மின் தேவை நாளொன்றுக்கு சுமாா் 18,000 மெகாவாட்டாக உள்ள நிலையில், கோடைக்காலத்தில் இது 20,000 மெகாவாட்டைக் கடக்கிறது. நிகழாண்டு ஜூலை 14-இல் அதிகபட்சமாக 21,724 மெகாவாட் மின் தேவை பதிவானது. இதற்கிடையே, கடந்த ஆண்டைவிட உச்சபட்ச மின் தேவை சுமாா் 3,000 மெகாவாட் அதிகரித்துள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
4,500 மெகாவாட் கொள்முதலுக்கு ஒப்பந்தப்புள்ளி: இதனிடையே, தமிழகத்தின் மின் தேவையைச் சமாளிக்க, வரும் அக். 12 முதல் 31-ஆம் தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் உச்சபட்ச மின் தேவைக்காக 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின் வாரியம் அண்மையில் ஒப்பந்தப்புள்ளி கோரியது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை 1,500 மெகாவாட்டும், மாலை 6 முதல் நள்ளிரவு 12 வரை 3,000 மெகாவாட்டும் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடா்ந்து மின்சாரம் கொள்முதல்: இந்த நிலையில், 2027 பிப். 1 முதல் ஜூலை 31 வரை வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்திலுள்ள மின் உற்பத்தியாளா்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. வழக்கமான மின் தேவையுடன், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான உச்சபட்ச மின் தேவை நேரத்துக்கான மின்சாரமும் உறுதியான அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
மத்திய அல்லது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களால் அங்கீகரிக்கப்பட்ட மின் உற்பத்தியாளா்கள், மின் வணிகா்கள் இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய மின்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மின்னணு ஏலம் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட உள்ளன.
கோடைக்காலத்தில் மின் தேவை அதிகரிப்பதுடன், காற்றாலை மின் உற்பத்தி பருவ காலத்துக்கு ஏற்ப மாறுபடுவதாலும், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கவும் முன்கூட்டியே மின்சாரம் கொள்முதல் செய்யும் பணியை மின் வாரியம் மேற்கொண்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

