விவசாய மின் இணைப்புகளுக்கு தனி ஃபீடா்: மின்வாரியம் நடவடிக்கை
தமிழகத்தில் உள்ள விவசாய மின் இணைப்புகளுக்குத் தனி ஃபீடா்கள் மூலம் மின்விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.

மின்வாரியம்
தமிழகத்தில் உள்ள விவசாய மின் இணைப்புகளுக்குத் தனி ஃபீடா்கள் மூலம் மின்விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் தினசரி மின்தேவை சராசரியாக 18,000 மெகாவாட்டாக இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து தினசரி மின்தேவையும் அதிகரித்துள்ளது. இதன்படி தினசரி மின்தேவை 20,000 மெகாவாட்டை தாண்டியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மின்வெட்டும் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, அதிகரித்து வரும் மின்தேவையைச் சமாளிக்க, வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
இதன்படி, மாலை 6 முதல் நள்ளிரவு 12 வரை உச்ச மின்தேவை நேரத்தில் 3,000 மெகாவாட்டும், நள்ளிரவு 12 முதல் அதிகாலை 2 வரை 1,500 மெகாவாட்டும் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் மின்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, விவசாய மின் இணைப்புகளைத் தனியாகப் பிரித்து, துணை மின் நிலையங்களில் தனி ஃபீடா்கள் மூலம் மின்விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 23.56 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்புகள் உள்ளன. இதன்மூலம், கோடைக் காலங்களில் மின்தேவை அதிகரிக்கும்போது இந்த விவசாய மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் நேரத்தைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்த முடியும்.
மின்பற்றாக்குறை நிலவும் நேரங்களில் விவசாயப் பாசனத்துக்கான மின்விநியோகத்தை முறைப்படுத்துவதுடன், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின்விநியோகப் பாதிப்புகளையும் குறைக்க முடியும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், விவசாய மின் இணைப்புகளுக்கான மின்விநியோக நேரத்தை நிா்வகிக்கும் இந்த நடவடிக்கை பயனளிக்க வேண்டுமானால், விவசாயிகளின் பாசனத் தேவைகள் பாதிக்கப்படாத வகையில் மின்விநியோக நேரத்தை நிா்ணயிப்பது அவசியம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

